தொழில்நுட்பத் துறையில் முன்னோடியாக இருக்கும் சீனா- இதை சீனா சாதித்தது எப்படி?
டீப்சீக், டிக்டாக், கேப்கட், ஷீயன், டீமு போன்ற சீன செயலிகளில் உலக அளவில் பிரபலமடைந்து வருகின்றன. நமது கைபேசிகளில் மட்டுமின்றி, தொழில்நுட்பத்தில் பல்வேறு துறைகளிலும் சீனா ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
கார்களை பாருங்கள், வேறு எந்த நாட்டையும் விட தற்போது அதிகளவு கார் ஏற்றுமதி செய்கிறது. அதற்கு காரணம் BYD முதலான மின்சார கார் நிறுவனங்கள்.
சோலார் பேனல் துறையிலும் உலகளவில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது. சோலார் பேனலின் உலக விநியோகச் சங்கிலியில் 80 முதல் 95 சதவீதம் வரை சீனாவே வைத்துள்ளது.
சீனாவால் இதையெல்லாம் எப்படி செய்ய முடிந்தது?
2015 ஆம் ஆண்டில் சீன அரசாங்கம் மேட் இன் சீனா 2025 என்ற ஒரு லட்சியத் திட்டத்தை கொண்டு வந்தது. குறைந்த விலைப் பொருட்களுக்கான தொழிற்சாலையாக இருப்பதில் இருந்து, உலகளாவிய தொழில்நுட்பத் தலைமையாக மாற விரும்பியது.
சீன அரசாங்கம் ஆராய்ச்சி, மேம்பாடுயில் கவனம் செலுத்துவது, வெளிநாட்டு நிறுவனங்களை வாங்குவது உள்ளிட்ட விஷயங்களுக்காக 1.5 டிரில்லியன் டாலர்களை திரட்டவோ அல்லது செலவிடவோ திட்டமிட்டது. நகரங்களில் ஆராய்ச்சி மையங்களை அமைத்தனர்.
இந்த திட்டத்தில் பெரும்பாலான இலக்குகள் எட்டப்பட்டுள்ளன. சில விஷயங்களில் சீனா இலக்குகளை தாண்டியும் பயணித்து வருகிறது.
இருப்பினும், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சீனாவை எதிர்த்து போட்டியிடுகின்றன. அதில், தடைகள் விதிப்பது, சீனாவுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகள், டிக்டாக் போன்றவற்றின் மீது தேசிய பாதுகாப்பு கவலைகளை அடிப்படையாக கொண்டு விதிக்கப்பட்டுள்ள தடைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளும் அடங்கும்.
மைக்ரோசிப்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணியில் இருக்க, அமெரிக்காவும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை கொட்டுகிறது.
ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற பிற தொழில்மய நாடுகளும் சீனாவுடன் போட்டியிட திட்டங்களை வகுத்துள்ளன. ஆனால் ஒரு புதிய உயர் தொழில்நுட்ப தலைமையாக சீனா உருவாகியுள்ளதில் எந்த சந்தேகமுமில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



