'ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக பாம்பு கடிக்க வைத்து தந்தை கொலை' - சென்னை அருகே 2 மகன்கள் கைது

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.)

சென்னை அருகே காப்பீட்டுப் பணத்தைப் பெறுவதற்காக தந்தையின் கழுத்தில் பாம்பு கடிக்க வைத்துக் கொன்றதாகக் கூறி இரு மகன்கள் உள்பட ஆறு பேரை காவல்துறை டிசம்பர் 19-ஆம் தேதி கைது செய்துள்ளது.

மரணம் தொடர்பாக காப்பீடு நிறுவனம் எழுப்பிய சந்தேகம் காரணமாகவே வழக்கின் உண்மைத்தன்மை வெளியில் வந்ததாகக் கூறுகிறார், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி விவேகானந்த சுக்லா.

"தந்தையின் பெயரில் இருந்த சுமார் மூன்று கோடி ரூபாய்க்கும் அதிகமான காப்பீட்டுப் பணத்தைப் பெறுவதற்காக இப்படியொரு கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர்," என்கிறார் அவர். இந்த வழக்கில் மகன்கள் கைதானது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் பொதத்தூர்பேட்டை கிராமம் அமைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 22-ஆம் தேதியன்று இங்கு வசிக்கும் 56 வயதான கணேசன் என்பவர் பாம்புக் கடியால் உயிரிழந்தார்.

கணேசனின் மகன்கள் கொடுத்த தகவலின்பேரின் பொதத்தூர்பேட்டை காவல்நிலையத்தில் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி விவேகானந்த சுக்லா தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த கணேசன், பொதத்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக (Lab Assistant) பணியாற்றி வந்துள்ளார். வழக்கின் தொடக்க நிலையில், எதிர்பாராதவிதமாக பாம்புக் கடியால் கணேசன் இறந்ததுபோல சம்பவம் தோற்றமளித்ததாக, காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

'4 காப்பீடுகள்... 3 கோடி ரூபாய்'

கணேசன் இறந்த சில நாட்களில் அவர் எடுத்து வைத்திருந்த காப்பீட்டுத் தொகைகளைப் பெறுவதற்கான கோரிக்கை மனுக்களை தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் அவரது மனைவி சுமதி மற்றும் மகன்கள் சமர்ப்பித்துள்ளனர்.

"இறந்துபோன கணேசன் மற்றும் அவரின் குடும்பத்தினர் 11 காப்பீடுகளை எடுத்து வைத்துள்ளனர். அதில் நான்கு காப்பீடுகள் கணேசன் பெயரில் எடுக்கப்பட்டுள்ளது," என, செய்தியாளர் சந்திப்பில் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி விவேகானந்த சுக்லா தெரிவித்தார்.

டெர்ம் காப்பீடு உள்பட சுமார் மூன்று கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு கணேசன் காப்பீடு எடுத்து வைத்திருந்ததாகக் கூறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், "மரணத்தில் சந்தேகம் எழுவதாக வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க்கிடம் காப்பீட்டு நிறுவனத்தினர் புகார் அளித்தனர்." எனக் கூறினார்.

இந்த வழக்கில் விரிவான விசாரணையை நடத்துவதற்காக டிசம்பர் 6-ஆம் தேதியன்று கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி.ஜெயஸ்ரீ தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை மாவட்ட எஸ்.பி அமைத்துள்ளார்.

'அதிக கடன்கள்... அதிக காப்பீடுகள்'

குழுவின் விசாரணையில் கணேசனின் குடும்பத்தினர் அதிகளவு கடன்களை வாங்கியிருப்பதும் அதிக மதிப்பிலான காப்பீடுகளை எடுத்திருந்ததும் கண்டறியப்பட்டதாக, மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

"ஒரு சாதாரண அரசு ஊழியர் எப்படி இவ்வளவு கோடி ரூபாய்க்கு எப்படி காப்பீடுகளை வாங்கினார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது," என செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட எஸ்.பி விவேகானந்த சுக்லா தெரிவித்தார்.

இதையே அறிக்கை ஒன்றிலும் கூறியுள்ள மாவட்ட காவல்துறை, 'அவர்கள் குடும்பத்தின் வருமான ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது கடன் அளவு மற்றும் அதிக மதிப்பிலான காப்பீட்டுத் திட்டங்கள், மரணத்துக்கான உண்மையான காரணம் குறித்து கடும் சந்தேகத்தை எழுப்பின' எனக் குறிப்பிட்டுள்ளது.

"பணம் கொடுப்பதற்கு முன்னதாக காப்பீட்டு நிறுவனங்களும் இதுதொடர்பாக விசாரணை நடத்துவது வழக்கம். அந்தவகையில் மரணம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது" என கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ஜெயஸ்ரீ பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

டிசம்பர் 19-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி விவேகானந்த சுக்லா, "கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஆய்வு நடத்தி கணேசன் குடும்பத்தினரின் நிதி தொடர்பான பரிவர்த்தனைகள், காப்பீடு விவரங்கள் என அனைத்து விவரங்களையும் சிறப்பு நுண்ணறிவுக் குழு சேகரித்தது." என்கிறார்.

'அதிர்ச்சி கொடுத்த 2 சம்பவங்கள்'

கணேசனின் மகன்கள் மோகன்ராஜ் மற்றும் ஹரிகரன் ஆகியோர் காப்பீட்டுத் தொகையைப் பெறும் நோக்கில் தங்கள் தந்தையைக் கொலை செய்வதற்கு குற்றச் சதி செய்தது உறுதி செய்யப்பட்டதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.

'இதன் ஒரு பகுதியாக அவர்கள் பாலாஜி, பிரசாந்த், தினகரன், நவீன்குமார் ஆகியோரை அணுகியுள்ளனர். தந்தையைக் கொல்வதற்கு பாம்பு ஒன்றை ஏற்பாடு செய்து தற்செயலாக பாம்பு கடித்ததுபோல தோற்றத்தை உருவாக்கினர்' எனவும் காவல்துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கணேசனைக் கொல்வதற்கு இரண்டு சம்பவங்களை அவரின் மகன்கள் நடத்தியதாகக் கூறியுள்ள மாவட்ட காவல்துறை, 'அவர் இறப்பதற்கு ஒரு வாரம் முன்னதாக நல்ல பாம்பு (Cobra) ஒன்றை தினகரன் என்பவர் மூலம் வாங்கியுள்ளனர். கணேசனின் காலில் அதைக் கடிக்க வைத்துள்ளனர்' என, காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த முயற்சியில் அவர் மரணம் அடையவில்லை என்பதால் அக்டோபர் 22-ஆம் தேதி அதிகாலை கட்டு வரியன் (Krait) வகை பாம்பை வீட்டுக்குள் கொண்டு வந்து தூக்கத்தில் இருந்த கணேசனின் கழுத்துப் பகுதியில் கடிக்க வைத்ததாகவும் செய்திக் குறிப்பு கூறுகிறது.

சிக்கவைத்த 'காரணமற்ற தாமதம்'

"குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆறு பேரில் ஒருவருக்கு பாம்புகளைக் கையாள்வது குறித்து தெரிந்துள்ளது. கணேசனைக் கடித்த பாம்பு மூன்று அடி உயரம் அளவு இருந்துள்ளது. அதே இடத்தில் கடித்த பாம்பைக் கொன்றுவிட்டனர்" என்கிறார், மாவட்ட எஸ்.பி விவேகானந்த சுக்லா.

'மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் காரணமற்ற தாமதத்தை ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது. இது முறையாக திட்டமிடப்பட்ட குற்றச்செயலுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது' எனக் காவல்துறை கூறியுள்ளது.

"முதல்முறை பாம்பு கடித்தபோது அவரது காலில் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக தொடர்ந்து மருத்துவ சிகிச்சையை எடுத்து வந்தார். அவரால் சரியாக சாப்பிட முடியவில்லை" எனக் கூறுகிறார், கணேசனின் உறவினர் கணபதி.

பொதத்தூர்பேட்டையில் வசிக்கும் கணபதியின் தந்தையும் கணேசனும் உடன்பிறந்த சகோதரர்கள் எனவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார். "சம்பவம் நடந்தபோது வீட்டின்கீழ் தளத்தில் கணேசன் படுத்திருந்தார். அப்போது கழுத்தில் பாம்பு கடித்துவிட்டதாகக் கூறி திருத்தணி அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர்" என்கிறார்.

"மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பாம்புக் கடியால் இறந்துவிட்டதாகக் கூறினர். அங்கேயே பிரேதப் பரிசோதனையும் நடத்தப்பட்டது," எனவும் அவர் தெரிவித்தார்.

உறவினர்கள் கூறுவது என்ன?

2018-ஆம் ஆண்டு என் தந்தைக்கு சொந்தமான நிலத்தை வாங்கி அங்கு இரு மாடிகள் கொண்ட வீட்டை கணேசன் கட்டியதாகக் கூறும் கணபதி, "இரு மகன்களில் ஒருவர் சென்னையில் ஒரு நிறுவனத்திலும் இரண்டாவது மகன் மெக்கானிக் வேலையையும் பார்த்து வந்தனர்" என்கிறார்.

இரு மகன்களுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடத்திவைத்ததாகக் கூறும் கணபதி, "இருவருக்கும் குழந்தைகள் உள்ளன. ஊருக்குள் இருவர் மீதும் எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை. அவர்களுக்கு அதிக கடன்கள் இருந்ததாக எங்களுக்குத் தெரியவில்லை" என்கிறார்.

டிசம்பர் 19-ஆம் தேதி அதிகாலையில் பொதத்தூர்பேட்டை போலீசார் இரண்டு மகன்களையும் கைது செய்த பிறகே அனைத்து விவரங்களும் தங்களுக்குத் தெரியவந்ததாகவும் கணபதி குறிப்பிட்டார்.

கணேசன் மரணம் தொடர்பாக ஹரிஹரன், மோகன்ராஜ், பிரசாந்த், நவீன்குமார், பாலாஜி மற்றும் தினகரன் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 'விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூடுதல் ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன' என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

'பாம்பு கடியால் ஏற்பட்ட மரணம் எனத் தோற்றமளித்த இந்தச் சம்பவம் சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கள விசாரணைகளின் மூலம் குற்றத்தின் தன்மை வெளிவந்துள்ளது' எனவும் காவல்துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பண ஆதாயங்களுக்காக நிகழ்த்தப்பட்ட குற்றச்சதியின் மூலம் கணேசன் கொல்லப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தங்களுக்கு சவாலானதாக இருந்ததாக பிபிசி தமிழிடம் கூறிய டி.எஸ்.பி ஜெயஸ்ரீ, "இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்பது குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது" எனக் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு