பழைய கார் வாங்க திட்டமா? இதையெல்லாம் கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
- பதவி, பிபிசி செய்தியாளர்
சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கனவாக இருக்கிறது. வசதி இருப்பவர்கள் தங்களிடன் இருக்கும் பணத்துக்கு ஏற்ப ஆடம்பர கார்களை வாங்குகின்றனர். அதே நேரத்தில் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், புதிதாக கார் ஓட்டத் தொடங்குபவர்கள் போன்றோரில் பெரும்பாலானோர் யூஸ்டு கார் என்றும் செகண்ட் ஹேண்ட் கார் என்றும் அழைக்கப்படும் பயன்படுத்திய பழைய கார்களை வாங்குவதை விரும்புகின்றனர்.
பயன்படுத்திய காரை வாங்குவதன் மூலம் பல லட்ச ரூபாயை சேமிக்க முடியும் என்பது இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பார்க்கும்போது, இந்தியாவில் செகண்ட் ஹேண்ட் காரை வாங்குவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துவருகிறது.
பயன்படுத்திய காரை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் ஆன்லைன் நிறுவனமான CARS24 கடந்த ஏப்ரல் மாதம் தனது காலாண்டு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், 2022ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் இதே காலகட்டத்தில் பயன்படுத்திய கார்களின் விற்பனை என்பது 100 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 1,250 கோடி ரூபாய் அளவுக்கு செகண்ட் ஹேண்ட் கார்கள் விற்பனை ஆகியுள்ளது. இதில் இருந்தே செகண்ட் ஹேண்ட் காரை வாங்குவதற்கு இந்தியர்கள் மத்தியில் எத்தகைய ஆர்வம் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
அதே நேரத்தில் பழைய காரை வாங்குவதற்கு முன்பாக சிலவற்றை நாம் தெரிந்துகொள்வது அவசியம். அவை என்னென்ன என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
பழைய காரை வாங்கும்போது முதலில் எதை பார்க்க வேண்டும்?
எத்தகைய தேவைக்காக காரை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்பதை ஆராய வேண்டும். தினமும் அதனை ஓட்டுவீர்களா? அப்படியென்றால் ஒரு நாளைக்கு எத்தனை கிலோ மீட்டர்கள் ஓட்டுவீர்கள்? உங்கள் குடும்பத்தில் எத்தனை நபர்கள் இருக்கிறார்கள்? அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எத்தனை இருக்கைகள் கொண்ட காரை வாங்குவது? காருக்கு எவ்வளவு செலவு செய்ய முடியும் போன்றவற்றை நாம் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்.
“செகண்ட் ஹேண்ட் காரை வாங்க முடிவு செய்தால் பட்ஜெட் எவ்வளவு என்பதை முதலில் தீர்மானமாக முடிவு செய்துகொள்ள வேண்டும். 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 லட்சம் ரூபாய் வரைக்கும் செகண்ட் ஹேண்ட் கார்கள் கிடைக்கும். சில நேரங்களில் நீங்கள் நினைத்த தொகையைவிட அதிக தொகைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுவிடும். எனவே, உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்.
அடுத்ததாக, பயன்படுத்தும் வசதியை பொறுத்து ஆட்டோமெட்டிக் காரா அல்லது மேனுவல் காரா, பெட்ரோல் மாடலா, டீசல் மாடலா என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும். ” என்று கூறுகிறார் வேலா மோட்டார்ஸ் மற்றும் வேலா கார் ஸோன் நிர்வாக இயக்குநர் குஹா பக்தவச்சலம்.
பழைய காரை விற்கும்போது என்ன செய்ய வேண்டும்?
ஒருவேளை உங்களின் பழைய காரை விற்கிறீர்கள் என்றால், அது தொடர்பான ஆவணங்களையும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
"பழைய வாகனங்களை வாங்குபவர்களுக்கு அதற்கேற்ற ஆவணங்கள் உள்ளன. ஆனால் வாகனங்களை விற்பவர்களுக்கு இதுபோன்ற ஆவணங்களுக்கு எதுவும் இல்லை. வாகனத்தை வாங்கிவிட்டதாக அதனை வாங்கியவர் கையெழுத்திட்டு கொடுக்கும் ஆவணம் மட்டுமே உள்ளது. எனவே, முத்திரைத்தாளில் , காரை வாங்குபவரிடம் எழுதி வாங்கிவிட்டு, அவரின் ஆதார் அட்டை போன்ற ஆவணங்களின் நகல்களை வாங்கி பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இது உதவியாக இருக்கும்" என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
காரின் சர்வீஸ் வரலாற்றை எப்படி தெரிந்துகொள்வது?
பொதுவாக பலருக்கும் பெட்ரோல் கார் வாங்குவதா அல்லது டீசல் கார் வாங்குவதா என்ற குழப்பம் ஏற்படும். அத்தகையோர் என்ன செய்யலாம் என்று அவரிடம் கேட்டபோது, ”ஒரு மாதத்திற்கு நீங்கள் எவ்வளவு கி.மீ.க்கு காரை ஓட்டுவீர்கள் என்பதை பொறுத்து இதனை முடிவு செய்யலாம். ஒரு மாதத்திற்கு 1000 கி.மீ.க்கு மேல் ஓட்டுவீர்கள் என்றால் டீசல் மாடல் காரை வாங்கலாம். மாதத்துக்கு குறைவாகதான் கார் ஓட்டுவேன். எப்போதாவது டூர் போவதற்கு மட்டுமே பயன்படுத்துவேன் என்று கூறுவீர்களானால் பெட்ரோல் காரே போதுமானது” என்றார்.
ஒரு காரை பார்க்கிறீர்கள், உங்களுக்கு பிடித்துவிட்டது என்றால் வண்டியின் நிலை எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் காரை கொடுத்து சர்வீஸ் செய்துள்ளாரா அல்லது வேறு யாரிடமாவது கொடுத்து சர்வீஸ் செய்துள்ளாரா என்பதை பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக உங்களுக்கு ஷிஃப்ட் வகை காரை பிடித்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். அந்த காரின் எண்ணை அருகில் உள்ள மாருதி சர்விஸ் செண்டரில் கொடுத்தீர்கள் என்றால் , அவர்களிடம் என்னென்ன சர்வீஸ் செய்துள்ளார்கள் என்பதை கூறிவிடுவார்கள். இல்லையென்றால், உங்களுக்கு தெரிந்த கார் மெக்கானிக்கை அழைத்துகொண்டு போய் காரை ஆய்வு செய்யலாம். அவரால் காரின் நிலை பற்றி 70 முதல் 80 சதவீதம் வரை நிச்சயமாக கூறிவிட முடியும்.

பட மூலாதாரம், Getty Images
திருட்டு காரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
பழைய கார்களை வாங்கும்போது உள்ள மற்றொரு பிரச்சனை என்னவென்றால் சட்டவழக்கில் உள்ள கார், திருடிய கார் போன்றவற்றை குறைந்த விலைக்கு ஒரு சில இடங்களில் விற்கின்றனர். இதை எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்டபோது, ஓனரிடம் உள்ள அசல் ஆவணங்களின் நகலை கேட்டுப்பெறுங்கள். அவற்றை வட்டார போக்குவரத்து கழகத்திற்கு கொண்டுபோய் சோதித்து பார்க்கலாம்.
அரசுக்கு சொந்தமான பரிவாகன் (parivahan) என்ற செயலியும் உள்ளது. காரின் சேஸ் எண், இஞ்சின் எண் போன்றவற்றை உள்ளீடு செய்தால் காரின் மாடல், காருக்கு எதாவது அபராதம் செலுத்த வேண்டுமா போன்ற அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்
செகண்ட் ஹேண்ட் கார்- இந்த தவறை செய்யாதீர்கள்
ஒருசிலர் செகண்ட் ஹேண்ட் காரை வாங்கும்போது ஆர்.சி. புத்தகத்தில் பெயர் மாற்றம் செய்யாமல் பழைய ஓனரின் பெயரிலேயே விட்டுவிடுகின்றனர். இது மிகவும் தவறானது என்று கூறுகிறார்.
“சிலர் இதுபோன்று செய்கின்றனர். இது சட்டத்துக்கு புறம்பானது. நீங்கள் ஒரு பழைய காரை வாங்கி பெயர் மாற்றமே செய்யாமல் இருந்து , அந்த கார் மூலம் விபத்தை ஏற்படுத்தினால் வழக்கு முழுவதும் யாரிடம் இருந்து காரை வாங்கினீர்களோ அவர்கள் மீதே செல்லும். இன்சூரன்ஸும் உங்களால் க்ளைம் செய்ய முடியாது. நீங்கள்தான் உங்கள் கைக்காசை செலவு செய்ய நேரிடும்.
எனவே, செகண்ட் ஹேண்டில் ஒரு காரை வாங்கியவுடன் ஆர்.டி.ஓ.வுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பித்து பெயர் மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பெயர் மாற்றம் செய்யப்பட்டதும் அதன் நகலை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கொடுத்து இன்சூரன்ஸ் ஆவணத்தில் உங்கள் பெயரை அப்டேட் செய்துகொள்ள வேண்டும். ” என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
எந்த மாதிரியான காரை வாங்கக் கூடாது?
செகண்ட் ஹேண்டில் காரை வாங்கும்போது எதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்பதை விளக்கியவரிடம் எந்த மாதிரியான கார்களை வாங்கக் கூடாது என்ற கேள்வியை முன்வைத்தோம்.
அதற்கு பதிலளித்த குஹா பக்தவாச்சலம் , “மிகவும் பழைய கார்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். பட்ஜெட் காரணமாகதான் பழைய காரையே நாம் வாங்குகிறோம். அப்படியிருக்கும்போது ரொம்ப பழைய காரை வாங்கினால் அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். எனவே, 12 ஆண்டுகளுக்கு மேல் பழமையான காரை வாங்க வேண்டாம்.
இதேபோல், அதிக கிலோமீட்டர் ஓடிய கார்களை வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். ஒரு லட்சம் கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் ஓடிய காரை வாங்குவதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். அத்தகைய கார்கள் அதிகம் செலவு பிடிக்கும். இதுபோன்ற நிலையில் இல்லாத கார்களை வாங்குவது சிறப்பு. அதற்காக உங்களின் பட்ஜெட்டிற்கு மேல் கூடுதலாக 30 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்தாலும் உங்களுக்கு லாபம் தான்” என்றார்.












