ககன்யான்: சென்னையில் பிறந்து, விண்வெளிக்குச் செல்லும் வீரர் - காணொளி
இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்வதற்காக சென்னையைச் சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், எஸ் சுக்லா ஆகிய நால்வரும் இந்தியாவின் விண்கலத்தில் விண்வெளிக்கு செல்லும் திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
பிப்ரவரி 27 (செவ்வாய்) அன்று திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் நரேந்திர மோதி இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவின் விண்வெளி வீரர்கள் 3 நாள்கள் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வு நடத்துவார்கள்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் தனது திட்டத்திற்கு ககன்யான் எனப் பெயரிட்டுள்ளது. ககன் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு வானம் என்று பொருள். வானத்தை நோக்கிச் செல்லும் வாகனம் என்ற பொருளில் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ககன்யான் திட்டத்தின் மூலம் வரும் 2025ஆம் ஆண்டில், இந்திய விண்வெளி ஆய்வாளர்கள் விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்படுவார்கள்.
ராக்கெட் ஏவும் வாகனம் மார்க் -3 (LVM-3) மூலம் செலுத்தப்படும் இந்திய விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து 400 கி.மீ சுற்றுப்பாதையில் 3 நாட்கள் ஆய்வு செய்வார்கள். பிறகு மீண்டும் பூமியில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டு இந்திய கடற்பரப்பில் விழச் செய்து மீட்டு வரப்படுவார்கள். இதுதான் ககன்யான் திட்டத்தின் நோக்கம்.
இந்தத் திட்டம் விண்வெளி ஆய்வில் உள்நாட்டு நிபுணத்துவம், இந்திய தொழில்துறையின் அனுபவம், இந்திய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் அறிவுசார் திறன்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடனான ஒத்துழைப்பில் இருந்து கிடைக்கக்கூடிய நவீன தொழில்நுட்பங்களைக் கருத்தில் கொண்டு வகுக்கப்பட்ட உத்தியின் மூலம் நிறைவேற்றப்படுகிறது.

பட மூலாதாரம், ISRO InSight
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



