You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா: இந்திய உயிருக்கு இவ்வளவுதான் மதிப்பா? விபத்தில் இறந்த பெண்ணை கேலி செய்த போலீஸ் அதிகாரி
அமெரிக்காவில் ரோந்து கார் மோதி உயிரிழந்த இந்திய பெண் பற்றி அந்நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் கேலியாகப் பேசியது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.
பாடிகேம் எனப்படும் உடலில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் இந்த விசாரணை நடக்கிறது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜானவி கந்துலா என்ற அந்த 23 வயது பெண் சியாட்டிலில் உள்ள தனது பல்கலைக்கழகத்துக்கு அருகே போலீஸ் வாகனம் ஒன்று மோதி உயிரிழந்தார். அந்த இடத்துக்கு காவல்துறை அதிகாரி டேனியல் ஆடரர் என்பவர் சென்றிருக்கிறார்.
அப்போது பதிவான வீடியோவில் இந்திய மாணவியின் உயிருக்கு "குறைந்த மதிப்பு" மட்டுமே இருப்பதாகவும், சியாட்டில் நகரம் "ஒரு காசோலையை எழுதித் தரவேண்டும்" என்றும் ஆடரர் கூறுவது கேட்கிறது.
ஆனால் தனது கருத்துகள் சூழலில் இருந்து மாற்றி எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
விபத்தின்போது என்ன நடந்தது?
வடகிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டப் படிப்பு மாணவியான கந்துலா, கடந்த ஜனவரி 23 அன்று சாலையைக் கடக்கும்போது காவல்துறை வாகனம் மோதி உயிரிழந்தார்.
மணிக்கு 119 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்த காவல்துறை வாகனம் மோதியதில் கந்துலா 100 அடிக்குத் தூக்கி வீசப்பட்டார். அந்த இடத்துக்கு ஆடரர் அழைக்கப்பட்டார்.
அப்போது தனது சக அதிகாரி ஒருவரிடம் தொலைபேசியில் ஆடரர் பேசிய உரையாடல் அவரது உடலில் இருந்து கேமராவில் பதிவானது.
"அவர் இறந்துவிட்டார்," என்று கூறிவிட்டு அவர் சிரிப்பதை அந்த ஆடியோவில் கேட்ட முடிகிறது.
மேலும், "இல்லை, இது ஒரு வழக்கமான ஆள்தான். ஆமாம், ஒரு காசோலையை எழுதுங்கள்," என்று கூறிவிட்டு அவர் மீண்டும் சிரிக்கிறார்.
"பதினோராயிரம் டாலர்கள். எப்படியும் அவளுக்கு 26 வயது இருக்கும். அவளுக்கு குறைந்த மதிப்புதான் இருந்தது," என்று அவர் அப்போது கூறுகிறார்.
சியாட்டில் காவல்துறை தொழிற்சங்கத் தலைவரான ஆடரர், மற்றொரு நிர்வாகியான மைக் சோலனுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். எனினும் பதிவு செய்யப்பட்ட ஆடியோவில் சோலனின் குரலைக் கேட்க முடியவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக சியாட்டில் காவல்துறை திங்களன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.
"வழக்கமான நடைமுறையின்போது" ஒரு ஊழியர் இந்த உரையாடலைக் கண்டுபிடித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த அதிகாரியுடைய "பேச்சின் தன்மை குறித்து" அதைக் கண்டுப்கடித்த ஊழியர் "கவலை கொண்டிருந்தார்" என்றும், அதுகுறித்து அவரது மேலதிகாரிகளிடம் அவர் கொண்டு சென்றதாகவும் காவல்துறையின் அறிக்கை கூறுகிறது.
பின்னர் அதிகாரிகள் இந்த விவகாரத்தை காவல்துறையின் தவறான நடத்தையை விசாரிக்கும் காவல்துறை பொறுப்புக்கூறல் அமைப்பிடம் ஒப்படைத்தனர்.
அதிகாரி தனது கருத்துகளைப் பேசிய சூழல் பற்றியும் காவல்துறையின் கொள்கைகள் இதில் மீறப்பட்டுள்ளதா என்பது பற்றும் அந்த அமைப்பு ஆய்வு செய்வதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வானொலி அறிவிப்பாளர் ஒருவர், ஆடரரிடமிருந்து எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்தார்.
பெண்ணின் மரணத்துக்கான இழப்பீட்டைக் குறைக்க நகரின் வழக்கறிஞர்கள் எப்படியெல்லாம் முயல்வார்கள் என்பதைப் பிரதிபலிக்கும் வகையிலேயே தான் பேசியதாக அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
“இத்தகைய சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் கையாளப்படும் தன்மையைக் கண்டு நான் சிரித்தேன்,” என்று அந்த அறிக்கையில் ஆடரர் குறிப்பிட்டிருப்பதாக கேடிடிஎச் என்ற அந்த வானொலி கூறுகிறது.
மற்றொரு காவல்துறை கண்காணிப்பு அமைப்பான சியாட்டில் சமூக காவல் ஆணையம், இந்த உரையாடலை "இதயத்தை உடைக்கும், அதிர்ச்சியூட்டும், உணர்வற்ற ஒன்று," என்று கூறியிருக்கிறது.
ஊடகங்களில் பேசிய ஆப்பிரிக்க அமெரிக்க சமூக ஆலோசனைக் குழுவின் தலைவரான விக்டோரியா பீச், அதிர்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்டார்.
"இறந்த ஒருவரைப் பற்றி யாராவது சிரிக்கக்கூட முடியும் என்பதை நினைத்துக் கவலைப்பட்டேன்," என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில் கந்துலா இறந்த விபத்து குறித்து கிங் கவுன்டி வழக்கறிஞர் அலுவலகம் மறு விசாரணை நடத்தி வருகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்