You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஸா மீது தரைப்படை தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
காஸா மீது தரைப்படைகள் தாக்குதலை தொடங்கப் போவதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தரைப்படைகள் இரவோடுஇரவாக காஸாவிற்குள் நுழைந்து ஹமாசுக்கு எதிராக தாக்குதலை தீவிரப்படுத்தும் என்று இஸ்ரேலின் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகரி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.
காஸா நகரமக்களை தெற்கு காஸா பகுதிக்கு செல்லவும் அவர் அறிவுறுத்தினார்.
கடந்த சில வாரங்களாகவே, "ஹமாஸை ஒழித்துக் கட்டுவதே எங்கள் நோக்கம். அதற்காக, காஸாவுக்குள் தனது படைகள் நுழையும்" என இஸ்ரேல் கூறி வந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, இதனை இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் டேனியல்கூறினார்.
மேலும், கடந்த சில மணி நேரங்களாக காஸா மீதான தங்களது தாக்குதலை அதிகரித்துள்ளதாகவும் இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் டேனியல்கூறினார். "வான்வழித் தாக்குதல் மூலம் நாங்கள் பெரும்பாலும் தீவிரவாதிகளின் கட்டமைப்பையும், பூமிக்கு அடியில் உள்ள இலக்குகளையும் தான் குறிவைத்து தகர்க்கிறோம்,"என்றார் அவர்.
மேலும்,"தரைப்படையினர் மாலை முதல் தங்களது செயல்பாட்டை விரிவாக்கம் செய்துள்ளனர். ராணுவத்தின் இலக்கை அடைய அனைத்து வகைகளிலும் தீவிரமாக செயல்படுகிறோம்," என்றார் டேனியல்.
அறிவிப்பிற்கு முன்பே தொடங்கிய தாக்குதல்
பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்குவதற்கு முன், இந்திய நேரப்படி சுமார் 10.30 மணியளவில், தெற்கு இஸ்ரேலில் இருந்த பிபிசியின் குழுவினர் காஸாவில் இருந்து பலத்த சத்தம் கேட்டதாக கூறினர். அவர்கள் காஸாவிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் இருந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தான் செய்ததாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திற்கு இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
காஸாவில் என்ன நடக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ராக்கெட்டுகளை ஏவினோம் என்று ஹமாஸ் கூறியதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கிடையில், காஸாவின் பெரும்பாலான பகுதியில் இன்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் நடத்தப்படும் காஸா அரசு தெரிவித்துள்ளது.
'அடுத்து என்ன நடக்கும் என தெரியவில்லை'
தெற்கு இஸ்ரேல் பகுதியில் செய்தி சேகரிப்பில் உள்ள பிபிசியின் செய்தியாளர் ஜெரிமி போவென், காஸாவிற்குள் நேரடியாகச் செல்ல முடியவில்லை என்றார்.
"காஸா மீதான இஸ்ரேலின் நடவடிக்கை கடுமையாகி உள்ளது. நிச்சயமாக உயிரிழப்பு அதிகரிக்கும்," என்றார் அவர்.
தொடர்ந்து பேசிய ஜெரிமி,"இஸ்ரேல் ராணுவம் தனது உளவுத்துறையின் தகவல்படி, இலக்குகளை மட்டுமே குறி வைப்போம் எனத் தெரிவித்திருந்தாலும், தரைவழியாக ராணுவத்தினரை உள்ளே அனுப்புகிறார்கள் என்றால், நிச்சயம், இந்த போரின் தன்மை மாறிவிட்டது என்றே அர்த்தம்," என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)