தமிழகத்தில் அதிகரிக்கும் காட்டு யானைகள் எண்ணிக்கை; தேசிய அளவில் குறைவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சேவியர் செல்வகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
மரபணு பகுப்பாய்வின் (DNA) அடிப்படையில் நடந்த கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதும் காட்டுயானைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்ததை விட, பல மாநிலங்களில் யானைகளின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் அதிகரித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு கணக்கெடுப்பிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
யானைகள் பாதுகாப்பில் தமிழகம் ஒரு புரட்சியைச் செய்து வருவதாக பிபிசியிடம் தெரிவித்தார் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ.
ஆனால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு முடிவுகள் வெளியாகும்போதே, இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்கான துல்லியமான காரணங்கள் தெரியவருமென்று யானை ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
யானைகள் கணக்கெடுப்பு எப்படி நடக்கும்?
மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறையின் கீழ் இயங்கும் யானைகள் திட்டம் (Project Elephant) சார்பில், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் யானை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
ஆனால் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களிலும், 3 மாநில வனத்துறையும் இணைந்து, மாநில எல்லைகளில் ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் மட்டும் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வருகின்றன.
இந்த ஆண்டில் மே மாதத்தில் 23, 24 மற்றும் 25 ஆகிய 3 நாட்கள் ஒருங்கிணைக்கப்பட்ட 3 வது கணக்கெடுப்பு (3rd Synchronized Elephant Census Report - TN 2025 ) நடத்தப்பட்டது.
தமிழக வனத்துறை பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவல்களின்படி, இந்த கணக்கெடுப்பில் வனத்துறையின் வனக்காவலர்கள், வனக்கண்காணிப்பாளர்கள் மற்றும் வேட்டை தடுப்புக்காவலர்கள் என 2043 பேர் பங்கேற்றனர். தாவர உயிரியலாளர்கள், யானை ஆராய்ச்சியாளர்கள் இந்த கணக்கெடுப்புக்கு முன் பயிற்சிகளை வழங்கி, களத்திலும் கண்காணித்துள்ளனர்.

பட மூலாதாரம், TN Forest Department
சாணத்தை வைத்து கணக்கிடும் முறை
தமிழகத்திலுள்ள 26 வனக்கோட்டங்களில் 3261 சதுர கி.மீ. பரப்பளவிலுள்ள வனப்பகுதியில் யானைகள் வாழ்விடங்களை (Habitats) அடையாளம் கண்டு, அவற்றை 681 பகுதிகளாக (Blocks) பிரித்து இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
மே 23-ஆம் தேதி காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை, ஒவ்வொரு 5 சதுர கி.மீ. பரப்பளவிலும் 3 முதல் 4 வன ஊழியர்கள் நடந்து சென்று யானைகளை நேரடியாகப் பார்த்து அவற்றின் எண்ணிக்கையைக் குறித்துள்ளனர்.
இத்தகவல்கள் இரு முறை பரிசீலிக்கப்பட்டு, முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்த கண்காணிப்பு மையத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று மே 24-ஆம் தேதி மறைமுகக் கணக்கெடுப்பு முறையில் (Indirect observation), இதே 681 பகுதிகளிலும் தலா 2 கி.மீ. துாரத்தைக் கணக்கிட்டு, அப்பகுதியிலுள்ள யானை சாணத்தை வைத்து (Line transects dung count) யானைகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.
சாணத்தை வைத்து யானையைக் கணக்கிடும் முறைபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய யானை ஆராய்ச்சியாளர் சிவசுப்பிரமணியம், ''ஒரு யானை சாதாரணமாக ஒரு நாளுக்கு 16 முதல் 18 முறை சாணமிடும். முட்புதர்காடுகள், பசுமை மாறாக்காடுகள், இலையுதிர்காடுகள் என ஒவ்வொரு காட்டின் தன்மையை வைத்து இந்த சாணத்தின் அழியும் காலம் மாறுபடும். அது எவ்வளவு நாட்கள் கழித்து அழிகிறது என்பதை வைத்து (defecation and decay) யானை எண்ணிக்கையை அறிய தனி கணக்கீடு (Formula) உள்ளது. அதுதான் மறைமுகக்கணக்கீடு.'' என்றார்.

பட மூலாதாரம், TN Forest Department
இவ்விரு முறைகளைத் தவிர்த்து, மூன்றாம் நாளான மே 25-ஆம் தேதி, யானைகள் பயன்படுத்தும் நீர்நிலைகளில் இதேபோன்ற கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. நேரடி கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும், பெரும்பாலும் மறைமுகக் கணக்கெடுப்புகளைக் கொண்டே யானை உள்ளிட்ட காட்டுயிர்களின் எண்ணிக்கை தற்போது கணக்கிடப்படுவதாகவும், அதுவே துல்லியமாக இருப்பதாகவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார் உலக காட்டுயிர் நிதியத்தின் ஆராய்ச்சியாளர் மோகன்ராஜ்.
இந்த 3 மாநிலங்களில் மட்டும் எல்லைப்பகுதிகளில் நடந்த ஒருங்கிணைந்த கணக்கெடுப்பில் தமிழகத்தில் மட்டும் தற்போது 3,170 யானைகள் இருப்பதாக தமிழ்நாடு வனத்துறை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி தகவல் வெளியிட்டது. கடந்த ஆண்டில் இருந்த எண்ணிக்கையை (3063 யானைகள்) விட இது 107 அதிகம் என்பதால், தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்திருந்தார்.
ஆண், பெண் விகிதாச்சாரம் ஓர் ஆண் யானைக்கு சராகரியாக 2 பெண் யானைகள் (1:1.77) இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட யானைகள் கணக்கெடுப்பு என்று கூறப்பட்டாலும், தமிழக வனத்துறை மட்டுமே தனியாக ஒரு புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது. மற்ற இரு மாநிலங்களின் காட்டு யானை எண்ணிக்கை ஒப்பீடு இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, கடந்த 2021 - 2025 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக நடத்தப்பட்ட மரபணு பகுப்பாய்வின் (DNA Based Census) அடிப்படையில் எடுக்கப்பட்ட யானை கணக்கெடுப்பு விபரங்களை, அக்டோபர் 14 அன்று வெளியிட்டுள்ளது.
அதில் நாடு முழுவதும் உள்ள காட்டு யானைகளின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 18,255 என்றும், அதிகபட்சம் 26,645 வரை இருப்பதாகவும் சராசரியாக 22,446 யானைகள் இருப்பதாகவும் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களையும் 4 பிராந்தியங்களாக (Region) பிரித்து, ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு விபரங்களை யானைகள் திட்டம் வெளியிடுகிறது.

பட மூலாதாரம், TN Forest Department
எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு யானைகள் குறைந்துள்ளன?
தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய 3 மாநில வனத்துறை இணைந்து, கடந்த மே மாதம் நடத்திய ஒருங்கிணைந்த கணக்கெடுப்பில் தமிழ்நாட்டிற்கான விபரங்ளை மாநில அரசு வெளியிட்டுள்ள நிலையில், அதற்கு ஒரு வாரம் கழித்து மத்திய வனத்துறையின் கீழுள்ள யானைகள் திட்டம் சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
மரபணு பகுப்பாய்வு மற்றும் தரவுகளைச் சரி பார்க்க அவகாசம் தேவைப்பட்டதால் இதை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6.7 லட்சம் கி.மீ. வனப்பாதைகளில் 21,056 சாண மாதிரிகளை விஞ்ஞானிகள் சேகரித்து, பகுப்பாய்வு செய்ததில் இந்த எண்ணிக்கை மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2017 ல் இந்தியாவில் இருந்த காட்டுயானைகளின் எண்ணிக்கையை விட இது 18 சதவீதம் குறைவாகும்.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளாவை உள்ளடக்கிய மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிதான், 11,934 காட்டுயானைகளுடன் அவற்றுக்கான முக்கியக் கோட்டையாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மலைகள் மற்றும் பிரம்மபுத்ரா நீர்ப்படுகைகளில் 6,559 யானைகள் வாழ்கின்றன. கர்நாடகா 6,013 யானைகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்து அஸ்ஸாமில் 4,159, தமிழ்நாட்டில் 3,136 காட்டு யானைகள் உள்ளன. கேரளா (2,785 யானைகள்) மற்றும் உத்தரகாண்ட் (1,792 யானைகள்) ஆகிய மாநிலங்கள் அடுத்த இடத்திலுள்ளன.

பட மூலாதாரம், Supriya Sahu
தென் மாநிலங்களில் நடந்த ஒருங்கிணைந்த கணக்கெடுப்பில் தமிழகத்தில் 3,170 காட்டுயானைகள் இருப்பதாக தமிழக வனத்துறை தெரிவித்திருந்த நிலையில், மத்திய வனத்துறையின் கணக்கெடுப்பிலும் 3,136 என்ற எண்ணிக்கை இருப்பது, தமிழக வனப்பகுதிகளில் முன்பு இருந்ததை விட யானைகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை உறுதி செய்யும் தகவலாகப் பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் யானைகள் திட்டத்தின் முந்தைய கணக்கெடுப்பில் இருந்ததை விட, தற்போது 18 சதவீதம் யானை எண்ணிக்கை குறைந்திருப்பதால் எந்தெந்த மாநிலங்களில் யானை எண்ணிக்கை குறைந்துள்ளது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
யானைகள் திட்டம் 2017-ஆம் ஆண்டில் நடத்திய ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பில் இந்தியா முழுவதும் 27,312 காட்டுயானைகள் இருந்தன. அப்போது தமிழகத்தில் 2,761 யானைகள் இருந்ததாகக் கணக்கிடப்பட்டிருந்தது. அப்போதிருந்ததை விட 8 ஆண்டுகளில் தமிழக வனப்பகுதிகளில் 375 யானைகள் அதிகரித்துள்ளன. அதேநேரத்தில் கர்நாடகா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் யானைகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
இவ்விரு கணக்கெடுப்பு விபரங்களை ஒப்பிடுகையில், அஸ்ஸாமில் அதிகபட்சமாக 1,560 யானைகள் குறைந்துள்ளன. அடுத்ததாக மேகாலயாவில் 1,077, அருணாச்சல பிரதேசத்தில் 997, ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கரில் 276, கேரளாவில் 269, நாகலாந்தில் 194, உத்தர்காண்ட்டில் 47, கர்நாடகாவில் 36 என்ற எண்ணிக்கையில் காட்டு யானைகள் குறைந்துள்ளதாக மரபணு பகுப்பாய்வு கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. மத்தியபிரதேசத்தில் 90, மகாராஷ்டிராவில் 57 காட்டுயானைகள் அதிகமாகியுள்ளன.
மரபணு பகுப்பாய்வு முறை எப்படி எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது?

பட மூலாதாரம், Ramesh
கடந்த 2017-ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்த 27,312 யானைகளில் அதிகபட்சமாக தெற்கு பிராந்தியத்தில்தான் 11,960 யானைகள் இருந்தன. இப்போதும் தென் பிராந்தியமே முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் காட்டுயானைகள் எண்ணிக்கை இவ்வளவு குறைந்திருப்பதால், மரபணு பகுப்பாய்வு அடிப்படையிலான கணக்கெடுப்பின் துல்லியம் குறித்தும் கேள்விகள் எழத் துவங்கியுள்ளன.
மரபணு பகுப்பாய்வு கணக்கெடுப்பு குறித்து, இந்த கணக்கெடுப்பை நடத்தியுள்ள இந்திய காட்டுயிர் மையத்தின் விஞ்ஞானியான ரமேஷ் பிபிசி தமிழிடம் விளக்கினார். அவர் கூறுகையில், ''கேமரா கணக்கெடுப்பு முறையில் (Camera Trap) ஒவ்வொரு காட்டுயிரும் தனித்தனியாக அடையாளம் காணப்படுவது போல இதிலும் ஒவ்வொரு யானையும் தனித்தனியாக அடையாளம் காணப்படும். முந்தைய கணக்கெடுப்புகளைப் போலவே, இதிலும் யானை சாணமாதிரியை வைத்தே எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது.'' என்றார்.
ஒவ்வொரு யானைக்கும் ஒவ்வொரு மரபணு இருக்குமென்று கூறும் ரமேஷ், அதை சாணமாதிரியை பகுப்பாய்வு செய்யும்போது, அந்த யானையின் வயது, பாலினம் போன்றவற்றை அறியலாம் என்கிறார். நேரடி கணக்கெடுப்பில் பெரும்பாலும் குட்டி யானைகள் கண்ணில் படாமல் போக வாய்ப்பு அதிகமென்று கூறும் அவர், சாணமாதிரியை வைத்துக் கணக்கிடும்போது குட்டிகளின் எண்ணிக்கையையும் சேர்த்து துல்லியமாகக் கணக்கிட முடியுமென்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
இந்த புதிய முறையில் யானைகளின் கால்தடங்கள் (M-Stripes), சாட்டிலைட் படங்கள் மற்றும் 4,065 யானை சாணமாதிரிகள் பகுப்பாய்வு என 3 விதமான முறையில் யானைகள் தனித்தனியாக மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யானைகள் திட்டம் சார்பில் விளக்கப்பட்டுள்ளது.
இதன்படி பார்க்கும்போது முன்பிருந்ததை விட இந்த கணக்கெடுப்பில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டுமென்று கூறும் யானை ஆராய்ச்சியாளர்கள், யானைகளின் சாணமாதிரிகளைக் குறைவாகச் சேகரித்திருக்கும்பட்சத்தில் யானைகளின் எண்ணிக்கையும் குறைவாக மதிப்பிடப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மற்ற கணக்கெடுப்பு முறைகளை ஒப்பிட்டால், மரபணு பகுப்பாய்வு முறைக்கு பல மடங்கு கூடுதல் செலவாகும் என்ற தகவலையும் ஆராய்ச்சியாளர்கள் பகிர்ந்தனர். இதன் காரணமாகவே, புலிகள் மற்றும் யானைகள் இரண்டுக்கும் சேர்த்து மரபணு பகுப்பாய்வு அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும், அதை தனித்தனியாக பகுப்பாய்வு செய்து, தரவுகளைச் சரி பார்ப்பதற்கே இவ்வளவு ஆண்டுகள் தேவைப்பட்டதாகவும் இவர்கள் விளக்கமளிக்கின்றனர்.

பட மூலாதாரம், Sivasubramani
இதுபற்றி பிபிசி தமிழிடம் தன்னுடைய கருத்தைப் பகிர்ந்த வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ, ''இந்தியாவில் காட்டுயானைகள் பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்திய ஒரே மாநிலம் தமிழகம்தான்.'' என்று தெரிவித்தார்.
கடந்த பல ஆண்டுகளாக, தமிழக வனப்பகுதிகளில் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள்தான் யானைகளின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதாகக் கூறும் சுப்ரியா சாஹூ, தமிழகத்தில் தென்காவிரி வனவிலங்கு சரணாலயம், தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் ஆகிய புதிய சரணாலயங்கள் மற்றும் அகஸ்தியமலை யானை காப்பகம் அறிவிக்கப்பட்டதும் இதற்கு முக்கியக்காரணி என்கிறார்.
ஆனால் நீலகிரி பல்லுயிர்ப்பெருக்கம் (NBR-Nilgiris Biosphere Reserve) உட்பட தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் உள்ள காடுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதால் ஒரு வாரத்தில் கேரளாவில் உள்ள ஒரு யானைக்கூட்டம், அடுத்த வாரத்தில் தமிழக காட்டுப்பகுதியிலும், அடுத்த வாரத்தில் கர்நாடகா காட்டுப்பகுதியிலும் இடம் பெயர்வது வழக்கமாகவுள்ளதாக யானை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய அண்டை மாநிலங்களில் யானை எண்ணிக்கை குறைந்திருப்பதும், தமிழகத்தில் சற்று அதிக எண்ணிக்கையாகத் தெரிவதற்கு ஒரு காரணமாயிருக்கலாம் என்கின்றனர். அதனால் ஒருங்கிணைந்த தென்பிராந்திய எண்ணிக்கை வெளியானால்தான் இது உறுதியாகுமென்பது இவர்கள் பலரின் கருத்தாகவுள்ளது.
யானை எண்ணிக்கை அதிகமானதை வைத்து யானைகளின் இனப்பெருக்கம் அதிகமாகி விட்டதாகக் கருத முடியாது என்று கூறும் வனஉயிரியலாளர் சிவசுப்பிரமணி, அதேநேரத்தில் யானைகளின் இறப்பை அவற்றின் எண்ணிக்கை ஏற்றதாழ்வுக்கான ஒரு காரணியாகக் கருதலாம் என்கிறார். காட்டுக்குள் புதிதாக ஒரு யானை பிறந்தால் அது தெரியாது, ஆனால் ஒரு யானை இறந்தால் தெரிந்துவிடும் என்கிறார் அவர்.
''ஒவ்வொரு வனக்கோட்டத்திலும் ஆண்டுதோறும் யானைகள் கணக்கெடுப்பு நடப்பதுபோலவே, யானைகள் இறப்பும் பதியப்படுகிறது. அதை ஒப்பிட்டு வித்தியாசத்தைக் கண்டறியலாம். உதாரணமாக கோவை வனக் கோட்டத்தில் கடந்த ஆண்டில் 300 யானைகள் இருந்தன என்றால், ஓராண்டில் எத்தனை யானைகள் இறந்தன என்பதை வைத்து இந்த எண்ணிக்கையை மதிப்பிடலாம். அதாவது இறப்பு விகிதம் குறையும்போது யானை எண்ணிக்கை சற்று அதிகமாகத் தெரியலாம். கூடும்போது குறைவாகத் தெரிய வாய்ப்புண்டு.'' என்றார்.
''யானை வழித்தட ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்ற வேண்டும்!''

பட மூலாதாரம், Muralidharan
தமிழகத்தில் காட்டுயானைகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் மனித–யானைகள் மோதல் அதிகமாகி மனித உயிரிழப்புகளே மேலும் அதிகரிக்கும் என்கிறார் சூழலியலாளர் முரளீதரன். இவர் யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பல்வேறு பொதுநலமனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வழக்குகளை நடத்திவருகிறார்.
''தமிழகத்தில் மத்திய அரசு குறித்துள்ள 20 யானை வழித்தடங்களை முழுமையாக மீட்கவேண்டும். அதிலுள்ள ஆக்கிரமிப்பு, தடைகளை தயவு தாட்சண்யமின்றி அகற்றவேண்டும். தனியார் நிலங்களை மீட்டு யானை வழித்தடத்தை உறுதி செய்யவேண்டும். யானை வாழ்விடங்களில் உள்ள அந்நிய களைச்செடிகளை முற்றிலும் அழிக்க வேண்டும். யானைகளுக்கான நீர் ஆதாரங்களில் கழிவுகள், ரசாயனம் கலப்பதைத் தடுத்தால்தான் யானைகளின் அகால மரணங்களைத் தடுக்க முடியும்.'' என்றார் முரளீதரன்.
யானைகள் இறப்பு குறித்து பிபிசி தமிழிடம் கருத்துத் தெரிவித்த தமிழக வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ, ''இந்தியாவிலேயே முதல்முறையாக யானை மரணங்களை ஆய்வு செய்து தீர்வு காண்பதற்கு உதவும் விதமாக "யானை மரணம் தணிக்கை வடிவமைப்பு" இங்குதான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. கோவை, மதுக்கரையில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ரயில் எச்சரிக்கை அமைப்பை உருவாக்கி, பாதுகாப்பான இடப்பெயர்வு வழித்தடத்தை ஏற்படுத்தியுள்ளோம். இவைதான் யானை பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளன.'' என்றார்.

தமிழகத்தில் யானைகள் இறப்பு எண்ணிக்கை அச்சப்படும் அளவில் இல்லை என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் தமிழக வனத்துறையின் தலைமை வனஉயிரினக் காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா. மாநிலத்தில் 3 ஆயிரம் யானைகள் இருக்கும்போது அவற்றில் 100–150 யானைகள் இறப்பது என்பது இயல்பாக நடக்கும் விஷயம்தான், ஆனால் அதற்கும் குறைவான எண்ணிக்கையில்தான் யானைகள் இறக்கின்றன என்றார்.
''இயற்கை மரணமாக இல்லாமல் வேட்டை, அவுட்காய், மின்சாரம் தாக்கி இறக்கும்போது, அவை பற்றி தீவிரமாக ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்திலுள்ள யானை வழித்தடங்கள் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் கருத்துத் தெரிவிக்கமுடியாது. ஆனால் யானை வழித்தடங்களை மீட்பதற்கு சிறப்பு களஆய்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்கின்றன.'' என்றார் டோக்ரா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












