"என் அம்மாவும், மகளும் உணவகத்துக்கு தான் போனார்கள்" - விமான விபத்தில் காணாமல் போன பாட்டியும், பேத்தியும்
கடந்த 12ஆம் தேதி ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து பலரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அத்தகைய குடும்பங்களில் ஒன்று ரவி தாகூரின் குடும்பம். விமானம் மோதிய மருத்துவக் கல்லூரி மெஸ்ஸுக்கு உணவு கொடுக்கச் சென்ற தனது அம்மாவின் நிலை என்னவென்று தெரியாமல் தவிக்கிறார் ரவி தாகூர். தனது தாய்க்கும் அவர் அழைத்துச் சென்ற தனது 2 வயது மகளுக்கும் என்ன நேர்ந்தது என்பதுதான் ரவி தாகூர் முன் தற்போது இருக்கும் கேள்வி.
"என் சகோதரன் மகள், அம்மா திரும்பி வர வேண்டும். எனக்கு எதுவும் வேண்டாம். நேற்று முதல் நாங்கள் இங்கே உட்கார்ந்திருக்கிறோம். இரவு முழுவதும் இங்கேயே காத்திருந்தோம். அவர்களைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. இது எங்கள் கடைசி நம்பிக்கை. சோலா, சிவில், சாரதா மருத்துவமனை உட்பட நகரத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் சென்றோம். ஆனால் அவர்களைப் பற்றி எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை." எனத் தெரிவிக்கிறார் தேடப்படும் சர்லபென் மகள் அனிதா தாகூர்.
"மதியம் 1 மணிக்கு, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்க டிஃபன்களை எடுத்தோம். பின்னர் தீ பற்றி தெரிய வந்தது. முதலில் ஒரு கட்டடத்தில் தீப்பிடித்ததாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் அங்கு சென்ற போது விமானம் விபத்துக்குள்ளாகி இருந்தது. நாங்கள் வேறொரு பாதை வழியாக சம்பவ இடத்தை நோக்கி விரைந்தோம். விமானம் மெஸ் கட்டடத்தில் மோதியதைக் கண்டறிந்தோம். மெஸ் கட்டடத்தில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டனர். என் அம்மா மற்றும் இரண்டு வயது மகள் தவிர." எனக் கூறுகிறார் தேடப்படும் சர்லபெனின் மகன் ரவி தாகூர்.
மேலும் பேசிய அவர், "சம்பவம் நடந்தபோது மெஸ் கட்டடத்திற்குள் இருந்த அனைவரிடமும் பேசினேன். விமானம் விபத்துக்குள்ளானபோது என் அம்மாவும் என் இரண்டு வயது மகளும் உள்ளே இருந்ததை எனக்கு உறுதிப்படுத்தினர். இருவரும் கட்டடத்தின் பின்புறம் அமர்ந்திருந்தனர்." என்று தெரிவிக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "டிஎன்ஏ மாதிரிகளை கொடுக்க மருத்துவர்கள் சொன்னார்கள். நான் ரத்த மாதிரி கொடுத்துள்ளேன். 72 மணி நேரத்திற்குப் பிறகு அறிக்கை வரும். உடல்களை அடையாளம் காண்பது மிகவும் கடினம் என்று மருத்துவர்கள் சொன்னார்கள்." என்றார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



