ஹர்திக்கை மும்பை ரசிகர்களே கேலி, கிண்டல் செய்த போது ரோகித் என்ன செய்தார்?

    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையேயானது எனக் கருதினால் அது விளையாட்டு விமர்சகரின் பார்வைதான்.

ஆனால், ரசிகர்கள் பார்வையில் இருந்து பார்த்தால், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும், மும்பை ரசிகர்களுக்கும் இடையிலான போட்டியாகத்தான் பார்க்க முடியும்.

இதுவரை 3 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியுள்ளது. அகமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக குஜராத் ரசிகர்கள் கிண்டல் செய்து, ஏதோ பெரிய துரோகத்தை செய்துவிட்டு சென்றதுபோல் எதிர்ப்புக் கோஷத்தை எழுப்பினர்.

ஹைதராபாத்தில் நடந்த ஆட்டத்திலும் பங்கேற்ற நடுநிலை ரசிகர்கள்கூட, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருக்கக்கூடாது என்பதுபோல அங்கும் தங்களின் அதிருப்தி குரலையும், கிண்டலையும் வெளிப்படுத்தினர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் சொந்த மைதானத்திலும் ரசிகர்களின் எதிர்ப்பு தீவிரமாக எதிரொலித்தது. சஞ்சய் மஞ்சரேக்கர் டாஸ் போடும் நிகழ்வின்போது, இரு அணிகளின் கேப்டன்களையும் அறிமுகப்படுத்தினார். அப்போது மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா என்று கூறியபோது, ரசிகர்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர், ஒருவர்கூட வரவேற்பு அளித்து கரகோஷம் எழுப்பவில்லை.

அது மட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியா பேட் செய்ய களத்துக்குள் வந்தபோது “கணபதி பாப்பா மோரியா” என்ற கோஷம் ரசிகர்கள் தரப்பில் இருந்து எழுந்து அவரை சகட்டுமேனிக்கு கிண்டல் செய்தது. சில தருணங்களில் ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி சைகை செய்ததுடன், கையெடுத்துக் கும்பிட்டார் ரோகித்.

ஆனால், ரோகித் சர்மா பீல்டிங்கின் போது எந்தப் பகுதிக்குச் சென்றாலும் ரசிகர்கள் தங்கள் முழக்கத்தை எழுப்பினர். ரோகித் சர்மா டக்அவுட் ஆகிச் சென்றபோதுகூட அவரை உற்சாகப்படுத்தும் வகையில்தான் நடந்து கொண்டனர்.

முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ரசிகர்களை வென்றபின்புதான், எதிரணியை வெல்ல முடியும் என்ற சூழல் எழுந்திருக்கிறது என்று கூறலாம். அல்லது எதிரணியை வென்றால்தான் ரசிகர்களை வெல்ல முடியும் என்றும் கூறலாம். ஆனால் ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த இரண்டும் இதுவரை நடக்கவில்லை.

மும்பை இந்தியன்ஸ் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நிர்வாகம் நியமித்திருக்கலாம். ஆனால், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை ரசிகர்கள் அவரை ஏற்கவில்லை என்பது கடந்த 3 போட்டிகளில் ரசிகர்கள் நடந்து கொண்டவிதத்தில் தெரிகிறது. ஐபிஎல் டி20 தொடரின் 16-வது ஆண்டு கால வரலாற்றில் ஒரு அணியின் கேப்டன் ரசிகர்களால் தொடர்ச்சியாக கேலி செய்யப்படுவது, ஏற்க மறுக்கப்பட்டு எதிர்ப்புக் குரலோடு வலம்வருவது இதுதான் முதல்முறையாக இருக்கும்.

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிக்கு பலவெளிநாட்டு வீரர்கள் கேப்டன்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களைக் கூட ஏற்றுக்கொண்ட ரசிகர்கள், ஹர்திக் பாண்டியாவை ஏன் ஏற்க மறுக்கிறார்கள் என்பது கிரிக்கெட்டை தீவிரமாக பின்தொடர்ந்து வருவோருக்கே புரியாத கேள்வியாக நீடிக்கிறது. அது மட்டுமல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் ஹர்திக் பாண்டியா குழு தனியாகவும், ரோகித் சர்மா குழு தனியாகவும் ஓய்வறையில் செயல்படுவதாக ஆங்கில இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவை அனைத்தும் மும்பை அணிக்கு சவாலாக உள்ளன.

கடந்த கால சீசன்களில் மும்பை அணி தொடர் தோல்விகளைச் சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டு ப்ளே ஆஃப் வரை சென்றுள்ளது, சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது. இந்த முறையும் அதுபோல் நடக்குமா எனத் தெரியவில்லை.

ராஜஸ்தானுக்கு எளிய வெற்றி

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்தது. 126 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 27 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. நிகர ரன்ரட்டையும் 1.249 ஆக உயர்த்திக்கொண்டது.

ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 3வது தோல்வியைச் சந்தித்துள்ளது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ள மும்பை அணி, இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்கவில்லை. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.423 ஆகக் குறைந்துள்ளது. இந்த மோசமான நிலையில் இருந்து மீண்டுவர மும்பை அணிக்கு அடுத்தடுத்து இரு மாபெரும் வெற்றிகள் தேவை.

மும்பை அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் மிகப்பெரிய ஆறுதல் பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால்தான். நடுப்பகுதி ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் ரன்ரேட்டை இறுக்கிப் பிடித்து வெற்றியைத் தள்ளிப்போட்டவர் மத்வால்தான். 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றவகையில் மும்பை அணியின் பாசிட்டிவ் என்று எந்த அம்சமும் இல்லை. ஆனால், அடுத்த போட்டிகளில் மபாகா, கோட்ஸி இருவரையும் மாற்றிவிட்டு துஷாரா, முகமதுநபியைக் கொண்டுவந்தால் ஓரளவுக்கு வெற்றியை எதிர்பார்க்கலாம். இல்லாவிட்டால் மும்பை நிலைமை மோசமாகும்.

“தோல்வி என்னை பாதிக்கவில்லை”

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ நாங்கள் எதிர்பார்த்த வகையில் ஆட்டத்தை தொடங்கவில்லை, இந்த இரவு எங்களுக்கு கடினமாக இருந்தது. 150 முதல் 160 ரன்கள் வரை அடிப்போம் என நினைத்தேன். ஆனால், நான் ஆட்டமிழந்தபின் ஆட்டத்தின் போக்கு மாறியது. இன்னும் சிறப்பாக விளையாடி இருக்கலாம். பந்துவீச்சாளர்களுக்கு நன்றாக ஆடுகளம் ஒத்துழைத்தது, பந்துவீச்சாளர்கள் முக்கியப் பங்காற்றினார்கள். முடிவுகள் நாம் எதிர்பார்த்ததுபோல் சில நேரங்களில்வரும், சில நேரங்களில் வராது. எனக்கு இதுபெரிதாக வியப்பளிக்கவில்லை. ஆனால் குழுவாக நாங்கள் வெற்றிக்காகப் போராடினோம். இன்னும் ஒழுக்கமான ஆட்டமும், துணிச்சலான ஆட்டமும் அவசியம் எனத் தெரிவித்தார்

மும்பையை சிதைத்த மூவர்

மும்பை அணியை அதன் சொந்த மைதானத்தில் வைத்து சிதைத்த பெருமை இடதுகை வேகப்பந்துவீச்சாளரும், அந்த அணியின் முன்னாள் வீரருமான டிரன்ட் போல்ட், யஜுவேந்திர சஹல், பர்கர் ஆகியோரையே சாரும். அதிலும் முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா, நமன் திர் இருவரின் விக்கெட்டுகளையும் சாய்த்து பேரதிர்ச்சி அளித்தார். தனது அடுத்த ஸ்பெல்லில் பிரிவிஸ் விக்கெட்டையும் வீழ்த்தி போல்ட் மும்பை அணியை முற்றிலுமாக சிதைத்தார்.

4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து 14 டாட்பந்துகளுடன் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய டிரென்ட் போல்ட் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிலும் ஒரு ரன்னுக்கு 2விக்கெட், 14 ரன்களுக்கு 3 விக்கெட், 20 ரன்களுக்கு 4 விக்கெட் என மும்பை அணி மோசமான சூழலைச் சந்தித்து. 3 விக்கெட்டுகளை போல்டும், இஷான் கிஷன் விக்கெட்டை ஆன்ட்ரே பர்கரும் எடுத்து மும்பை அணியை பெரிய பாதாளத்தில் தள்ளினர். மும்பை அணியின் ரோகித் சர்மா, நமன் திர், பிரிவிஸ் ஆகிய 3 பேட்டர்களுமே டக்அவுட்டில் வெளியேறினர்.

ஆறுதல் ஜோடி

4வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா ஜோடி ஓரளவுக்கு நிலைத்தது. அதிலும் ஹர்திக் பாண்டியா களத்துக்குள் வந்தபோதும், அவர் அடிக்கும் ஷாட்களின்போதும் ரசிகர்கள் கிண்டலடிப்பதும், எதிர்ப்புக் கோஷங்களை எழுப்புவதுமாக இருந்தனர். சொந்த மைதானத்தில் மும்பை அணி விளையாடும் சூழல் இல்லாமல் இருந்தது.

ஹர்திக், திலக் வர்மா ஜோடி 4வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தநிலையில் இருவரையும் சஹல் பிரித்தார். ஹர்திக் 34 ரன்கள் சேர்த்தநிலையில் சஹல் பந்தவீச்சில் பாவெலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்துவந்த பியூஷ் சாவ்லாவை 3 ரன்னில் ஆவேஷ் கான் பெவிலியனுக்கு அனுப்பினார். செட்டில்ஆகி பேட் செய்த திலக் வர்மாவை 32 ரன்னில் சஹல் வெளியேற்றி மும்பை அணியை நெருக்கடியில் தள்ளினார். 95 ரன்களுக்கு மும்பை அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி வரிசையில் களமிறங்கிய டிம் டேவிட் 17 ரன்களில் பர்கரிடம் விக்கெட்டை இழந்தார். கோட்ஸி 4 ரன்னில் சஹலிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஆல்அவுட்டிலிருந்து தப்பித்த மும்பை

இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை எந்த அணியும் ஆல்அவுட் ஆகவில்லை. மும்பை அணி ஆல்அவுட் ஆகிவிடுமோ என்று எண்ணப்பட்டது. ஆனால், பும்ரா 8, மத்வால் 4 ரன்னில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மும்பை அணியின் தொடக்க வரிசை பேட்டர்களை போல்ட், பர்கர் பார்த்துக்கொண்டார்கள் என்றால், நடுவரிசையை சஹல் கவனித்துக்கொண்டார். இந்த 3 பந்துவீச்சாளர்களும் மும்பை அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.

அதிலும் சஹல் 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து அற்புதமாக பந்துவீசினார். இதில் 16 டாட்பந்துகள் அடங்கும், ஒருபவுண்டரி மட்டுமே சஹல் அடிக்கவிட்டிருந்தார். அதபோல பர்கரும் 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள், 15 டாட்பந்துகளுடன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

126 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்கோடு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. மும்பை வான்ஹடே மைதானம் போன்ற சிறிய மைதானத்தில் 125 ரன்களை அடித்து வைத்துக்கொண்டு எதிரணியை டிபெண்ட் செய்வது கடினம். அதிலும் பெரிய பேட்டர்கள் இருக்கும் ராஜஸ்தானை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை.

ஆனாலும், தங்களால் முடியும் என்று முயற்சியில் மும்பை அணி இறங்கியது. மபாகா வீசிய முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் 10 ரன்னில் சாவ்லாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடந்த சீசனில் வெளுத்து வாங்கிய ஜெய்ஸ்வால் 3 போட்டிகளாக எந்த பெரிய ஸ்கோருக்கும் செல்லவில்லை, ஃபார்மின்றி தவித்து வருகிறார்.

அடுத்துவந்த கேப்டன் சாம்ஸன், பட்லருடன் சேர்ந்து ஓரளவுக்கு ரன்களைச் சேர்த்தார். மத்வால் பந்துவீச்சில் சாம்ஸன் 12 ரன்னில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். கடந்த சீசனிலிருந்து ஃபார்மின்றி தவித்துவரும் பட்லர் நிலைமை இந்த சீசனிலும் தொடர்ந்து வருகிறது. மத்வால் வீசிய பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, சாவ்லாவிடம் கேட்ச் கொடுத்து பட்லர் 13 ரன்னில் ஆட்டமிழந்தார்.

48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி தடுமாறியது. 4வது விக்கெட்டுக்கு வந்த அஸ்வின்-ரியான் பராக் ஜோடி ஓரளவுக்கு சரிவிலிருந்து அணியை மீட்டது. அஸ்வின் ஒத்துழைத்து பேட் செய்ய ரியான் பராக் அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார்.

40 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியையும் மத்வால் பிரித்தார். அஸ்வின் 16 ரன்கள் சேர்த்தநிலையில் மத்வால் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்துவந்த ஷுபம் துபே, ரியான் பராக்குடன் ஜோடி சேர்ந்தார்.

ஏற்கெனவே சூப்பர் ஃபார்மில் இருக்கும் ரியான் பராக், வெற்றியைத் தள்ளிப்போட விரும்பவில்லை. கடைசி 30 பந்துகளில் 15 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. கோட்ஸி வீசிய 16-வது ஓவரில் தொடர்ந்து இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து ரியான் பராக் அரைசதத்துடன் அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

ரியான் பராக் 39 பந்துகளில் 54 ரன்களுடன்(3சிக்ஸர், 5பவுண்டரி), ஷுபம் துபே 8ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)