You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய ரயில்வே: முன்பதிவு காலத்தை 60 நாட்களாக குறைத்தது யாருக்கு பயன் தரும்?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய ரயில்வே, பயணச்சீட்டு முன்பதிவிற்கான காலகட்டத்தை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைத்திருக்கிறது. இதனால் என்ன நடக்கும்? தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்.
கேள்வி: இந்திய ரயில்வேயில் முன்பதிவு காலகட்டம் எப்படி மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது?
பதில்: இந்திய ரயில்களில் பயணம் செய்வதற்கு இதுவரை 120 நாட்களுக்கு முன்பாக (பயணத் தேதி தவிர்த்து) முன்பதிவு செய்ய முடியும். அந்த கால அவகாசத்தை தற்போது 60 நாட்களாக (பயணத் தேதி தவிர்த்து) இந்திய ரயில்வே குறைத்திருக்கிறது. இந்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது.
கேள்வி: அப்படியானால், ஏற்கனவே 120 நாட்களுக்குப் பிந்தைய பயணத்திற்காக முன்பதிவு செய்தவர்களின் நிலை என்ன?
பதில்: ஏற்கனவே 120 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்தவர்கள், அதனை பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் அக்டோபர் 31-ஆம் தேதி வரை, 120 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி நீடிக்கும்.
கேள்வி: முன்பதிவு காலகட்டம் குறைக்கப்பட்டது ஏன்?
பதில்: 120 நாட்கள் என்பது, பயணத்தைத் திட்டமிட மிக நீண்ட காலமாக இருக்கிறது. அதனால், முன்பதிவு செய்துவிட்டு, பிறகு கடைசி நேரத்தில் ரத்து செய்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. தற்போது சுமார் 21 சதவீதம் பயணிகள் இதுபோல முன்பதிவு செய்துவிட்டு பயணத்தை ரத்து செய்வதாக ரயில்வே கூறுகிறது.
அதேபோல, முன்பதிவு செய்பவர்களில், 4- 5 சதவீதம் பேர் பயணிக்க வருவதில்லை என்றும் அவர்கள் தங்கள் பயணச் சீட்டை ரத்துசெய்வதும் இல்லை என்றும் ரயில்வே துறை கூறுகிறது. இப்படி டிக்கெட்டை ரத்து செய்யாமலும் பயணிகள் வராமலும் இருப்பதால் வேறு சில பிரச்னைகளும் ஏற்படுகின்றன. அதாவது வேறு சிலர் அந்தப் பெயரில் பயணம் செய்வது, ரயில்வே அதிகாரிகள் பணத்தை வாங்கிக்கொண்டு அந்த இடங்களை வேறு யாருக்காவது ஒதுக்கீடு செய்வதும் நடக்கிறது என்கிறது இந்திய ரயில்வே துறை.
இதை தவிர, முன்பதிவிற்கு நீண்ட கால அவகாசத்தை வழங்கினால், ஏஜென்ட்கள் பெரும் எண்ணிக்கையில் பதிவுசெய்வதும் நடக்கிறது. இதனால், உண்மையிலேயே தேவைப்படும் பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்காமல் போகிறது.
பயணச் சீட்டு ரத்து, பயணிகள் வராமல் இருப்பது ஆகியவை குறையும்போது உண்மையிலேயே தேவை என்ன என்பதைக் கண்டறிந்து, சிறப்பு ரயில்களை சரியாகத் திட்டமிடவும் தங்களுக்கு இது உதவும் என்கிறது இந்திய ரயில்வே.
கேள்வி: இதனால் பொதுப் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?
பதில்: ஏற்படாது. அவர்கள் பயணத்திற்கு சற்று நேரத்திற்கு முன்பாகத்தான் பயணச் சீட்டை வாங்குவார்கள் என்பதால் பொதுப் பெட்டியில் பயணிக்கும் பயணிகளின் நிலையில் எந்தத் தாக்கத்தையும் இந்த மாற்றம் ஏற்படுத்தாது.
கேள்வி: வெளிநாட்டுப் பயணிகளுக்கும் இந்த கால மாற்றம் பொருந்துமா?
பதில்: பொருந்தாது. வெளிநாட்டுப் பயணிகளைப் பொறுத்தவரை, தற்போது அவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பே பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். அவர்களுக்கான முன்பதிவு காலகட்டம் அப்படியே தொடரும் என தெரிவித்திருக்கிறது இந்திய ரயில்வே.
கேள்வி: இதுபோன்ற மாற்றம் இப்போதுதான் செய்யப்படுகிறதா?
பதில்: இல்லை. இதற்கு முன்பும் முன்பதிவு காலகட்டம் பல முறை மாற்றப்பட்டிருக்கிறது. 1981 முதல் 1985 வரை முன்பதிவு காலகட்டம் தற்போது இருப்பதைப்போல 120 நாட்களாக இருந்தது. 1985-ஆம் ஆண்டு பிப்ரவரியில் இது 90 நாட்களாகக் குறைக்கப்பட்டது.
1988-ஆம் ஆண்டு செப்டம்பரில் இது 60 நாட்களாகக் குறைக்கப்பட்டது. 1993-ஆம் ஆண்டு அக்டோபரில் இந்த நாட்கள் மேலும் குறைக்கப்பட்டு, 45 நாட்களாக்கப்பட்டது. 1995-ஆம் ஆண்டு செப்டம்பரில் மேலும் 15 நாட்கள் குறைக்கப்பட்டு, முன்பதிவுக்கான காலகட்டம் 30 நாட்களாக்கப்பட்டது.
1998-ஆம் ஆண்டு பிப்ரவரியில் இது மீண்டும் 60 நாட்களாக்கப்பட்டது. 2007-ஆம் ஆண்டு மார்ச்சில் இந்த காலகட்டம் 90 நாட்களாக அதிகரிக்கப்பட்டது. அதே ஆண்டு ஜூலை 15 முதல் மீண்டும் 60 நாட்களாகக் குறைக்கப்பட்டது. 2008-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மறுபடியும் இது 90 நாட்களாக அதிகரிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு மார்ச்சில் இது 120 நாட்களாக அதிகரிக்கப்பட்டது. 2013-ஆம் ஆண்டு மே மாதம் 60 நாட்களாகக் குறைக்கப்பட்டது. இறுதியாக, 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த காலகட்டம் 120 நாட்களாக அதிகரிக்கப்பட்டது. இப்போது மீண்டும் 60 நாட்களாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)