You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவின் அணுஆயுத ரகசியங்களை பதுக்கினாரா? டிரம்ப் கைது செய்யப்பட வாய்ப்பு
- எழுதியவர், ஜூட் ஷீரின் & ரெபேக்கா சீல்ஸ்
- பதவி, பிபிசி செய்திகள், வாஷிங்டன் டிசி
அமெரிக்காவின் அணுசக்தி ரகசியங்கள் மற்றும் ராணுவத் திட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான ரகசிய ஆவணங்களை தவறாக கையாண்டதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
37 குற்றச்சாட்டுக்களுடன் கூடிய அவர் மீதான குற்றப்பத்திரிகையில் அவர் தனது புளோரிடா எஸ்டேட்டில் உள்ள அறைகளில் அந்த கோப்புகளை மறைத்து வைத்திருந்ததாகவும், புலனாய்வு அதிகாரிகளிடம் அந்த கோப்புகள் குறித்து பொய் சொன்னதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்துவதை தடுக்க முயன்றதாகவும், அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2024ல் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வரும் டிரம்ப், தன் மீது எந்த தவறும் இல்லை என தெரிவித்துள்ளார்.
ஆனால், டிரம்ப் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு சிறை தண்டனை கூட விதிக்கப்படும் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
டிரம்பின் தனிப்பட்ட உதவியாளரான வால்ட் நௌடா மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னாள் வெள்ளை மாளிகை உதவியாளரான இவர் கோப்புகளை புலனாய்வு அமைப்பிடம் இருந்து மறைக்க அவற்றை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த 49 பக்க குற்றப்பத்திரிக்கையின் மூலம் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒருவருக்கு எதிராக அந்நாட்டு அரசு முதன்முதலாக குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது. டொனால்ட் டிரம்ப் மறைத்து வைத்திருந்த இரகசிய ஆவணங்களில் பின்வருபவை பற்றிய தகவல்கள் இருந்தன என அந்த குற்றச்சாட்டுகளில் கூறப்பட்டுள்ளது.
* அமெரிக்காவின் அணுசக்தி திட்டங்கள்
• அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஆயுத திறன் பற்றிய தகவல்கள்
• இராணுவ தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் சாத்தியமான நிலை குறித்த விவரங்கள்
• ஒரு வெளிநாட்டு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கக்கூடிய சாத்தியமான திட்டங்கள்
டிரம்ப் பதவியில் இருந்து வெளியேறியபோது, அவர் சுமார் 300 ரகசிய கோப்புகளை பாம் பீச்சில் உள்ள அவரது விடுதியான Mar-a-Lago-க்கு எடுத்துச் சென்றார் என விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விடுதிக்கு ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் வந்துசெல்கின்றனர்.
காணாமல் போன ஆவணங்கள் பற்றிய FBI விசாரணையை டிரம்ப் தடுக்க முயன்றதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். இதற்காக அந்த ஆவணங்களை அழித்துவிடுமாறு டிரம்பின் வழக்கறிஞரிடம் அவர் கூறியதாகவும் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
"இங்கே எதுவுமே இல்லை என்று சொல்லிவிட்டால் நன்றாக இருக்கும் அல்லவா?" என டிரம்ப் தனது வழக்கறிஞரிடம் கேட்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் டிரம்ப் முதல்முறையாக புளோரிடாவின் மயாமி நீதிமன்றத்தில் வரும் செவ்வாய்கிழமை - அவரது 77வது பிறந்த நாளன்று மாலை ஆஜராகிறார்.
Mar-a-Lagoவில் இந்த ஆவணங்களை வைத்திருக்கவோ, அல்லது அவற்றைப் பற்றி விவாதிக்கவோ சட்டப்படி இடமில்லை என்றும், இது போன்ற செயல்களுக்கு ஏற்ற "அதிகாரப்பூர்வமான இடம்" அதுவல்ல என்றும் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில கோப்புகள், தனியார் நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் நடந்த பால்ரூமின் மேடையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் இந்த குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் அங்கிருந்த குளியலறை, அலுவலகம் மற்றும் டிரம்பின் படுக்கை அறை என பிற இடங்களுக்கு அந்த கோப்புகள் மாற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் அதிபர் டிரம்ப் 2021ம் ஆண்டில் இரண்டு முறை, ஒரு எழுத்தாளர் மற்றும் இரண்டு ஊழியர்கள் உட்பட பாதுகாப்பு அனுமதி இல்லாத நபர்களுக்கு இந்த ரகசிய ஆவணங்களைக் காட்டினார்.
நியூ ஜெர்சியின் பெட்மின்ஸ்டரில் உள்ள டிரம்பின் கோல்ஃப் கிளப்பில்- அதுவும் பாதுகாப்பு அங்கீகாரம் இலலாத இடம்- பாதுகாப்புத் துறையால் தனக்காகத் தயார் செய்யப்பட்டதாக ஒரு தாக்குதல் திட்டம் குறித்து அவர் மற்றவர்களிடம் காட்சிப்படுத்தி விவரித்ததாக கூறப்படுகிறது.
"அதிபர் என்ற முறையில் அவற்றை ரகசிய ஆவணங்கள் அல்ல என நான் வகைப்படுத்தியிருக்க முடியும். ஆனால் இப்போது என்னால் முடியாது என்று உங்களுக்குத் தெரியும்," என்று டிரம்ப் கூறியதாக ஒரு ஆடியோ பதிவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், 2021 ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் பெட்மின்ஸ்டர் கிளப்பில் டிரம்ப் அந்த ரகசிய ஆவணங்களை மீண்டும் பாதுகாப்பு அங்கீகாரம் இல்லாத நபர்களிடம் காட்டினார் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் "பாதுகாப்பு அனுமதி பெறாத தனது அரசியல் நடவடிக்கைக் குழுவின் பிரதிநிதி ஒருவருக்கு அரசின் ரகசியமான வரைபடத்தை காட்டினார்". இந்த வரைபடம் "ஒரு இராணுவ நடவடிக்கை தொடர்பானது" என்பது மட்டுமல்ல, டிரம்ப் அந்த நபரிடம் "அதை வேறு யாரிடமும் காட்டக்கூடாது" என்றும் அவர்கள் அந்த வரைபடத்துக்கு அருகே "அதிகமாக நெருங்கக்கூட அனுமதிக்ககூடாது" என்றும் கூறினார்.
விசாரணையை மேற்பார்வையிடும் சிறப்பு ஆலோசகர் ஜேக் ஸ்மித், வெள்ளிக்கிழமையன்று பேசிய போது, தேசிய பாதுகாப்புத் தகவல்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் முக்கியமானவை என்றும் அவை நிச்சயமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
"அமெரிக்காவில் ஒரு வலுவான சட்ட அமைப்பு இருக்கிறது. அது நாட்டில் உள்ள எல்லோருக்கும் பொதுவாகப் பொருந்தும்," என்று அவர் வாஷிங்டனில் சுருக்கமாகப் பேசிய போது தெரிவித்தார்.
ஒரு சமூக ஊடகப் பதிவில், டிரம்ப், ஜேக் ஸ்மித்தை "குழப்பம் கொண்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபர்" என்று சாடினார்.
"அவர் ஒரு டிரம்ப் வெறுப்பாளர் - சிறிதும் மனமுதிர்ச்சியில்லாத ஒரு 'சைக்கோ', 'நீதித் துறையுடன்' சம்பந்தப்பட்ட எந்தச் செயலிலும் அவர் ஈடுபடக்கூடாது," என்று அவர் தனது ட்ரூத் சோஷியல் என்ற சமூக தளத்தில் எழுதியுள்ளார்.
இதற்கிடையே, தற்போதைய அதிபர் ஜோ பைடனின் அலுவலகம், அவரது கேரேஜ் மற்றும் அவரது டெலவெயர் இல்லத்திலும் ரகசிய கோப்புகள் மற்றும் ஆவணங்கள் காணப்பட்டன என்பதை டிரம்ப் சுட்டிக்காட்டினார்.
அந்த கோப்புகள் கண்டுபிடிக்கப்பட்டவுடன், அதிகாரிகளின் விசாரணையைத் தடுக்கும் வகையில் டிரம்ப் செயல்படுவதைப் போல் அல்லாமல், உடனடியாக அதிகாரிகளுடன் ஒத்துழைத்ததாக வெள்ளை மாளிகை முன்பு அறிவித்திருந்தது.
இரகசிய ஆவணங்களைக் கையாள்வது குறித்த பைடன் மீதான அமெரிக்க அரசின் விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு சிறப்பு வழக்கறிஞர் ராபர்ட் ஹர் தலைமையில் தற்போது நடந்து வருகிறது.
டிரம்ப் மீதான இந்த குற்றச்சாட்டுக்களை அமெரிக்க நீதித்துறை பகிரங்கப்படுத்துவதற்கு சற்று முன்பு, டிரம்பின் இரண்டு வழக்கறிஞர்கள் திடீரென எந்த விளக்கமும் கொடுக்காமல், வழக்கிலிருந்து விலகியதாக அறிவித்தனர். வழக்கிலிருந்து விலகுவதற்கு சரியான நேரம் இது என்பதைத் தவிர வேறு எதையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.
டிரம்ப் மீதான இரண்டாவது குற்றவியல் வழக்கு இது. அவர் ஆபாச நடிகைக்கு பெரும் தொகையை வழங்கியது தொடர்பான வழக்கில் அடுத்த ஆண்டு நியூயார்க்கில் விசாரணையை எதிர்கொள்ளவிருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்