You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கத்தார் சிறையில் இந்திய கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் - மோதி அரசு மௌனம் ஏன்?
- எழுதியவர், வினீத் கரே
- பதவி, பிபிசி செய்தியாளர்
நூறு நாட்களுக்கு மேல் கடந்துவிட்டது. ஆனால் கத்தாரில் பணிபுரிந்த எட்டு ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரிகளின் குடும்பத்தினர், அவர்கள் தாயகம் திரும்புவதற்காக காத்திருக்கிறார்கள்.
கமாண்டர் (ஓய்வு) பூர்ணேந்து திவாரி, கேப்டன் (ஓய்வு) நவ்தேஜ் சிங் கில், கமாண்டர் (ஓய்வு) பிரேந்தர் குமார் வர்மா, கேப்டன் (ஓய்வு) சௌரப் வசிஷ்ட், கமாண்டர் (ஓய்வு) சுக்னகர் பகாலா, கமாண்டர் (ஓய்வு) அமீத் நாக்பால், கமாண்டர் (ஓய்வு) சஞ்சீவ் குப்தா மற்றும் மாலுமி ராகேஷ் ஆகியோர் கத்தாரில் உள்ள தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் & கன்சல்டன்சி என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
ஆகஸ்ட் 30 ஆம் தேதி கத்தார் அதிகாரிகள் 8 இந்தியர்களையும் அழைத்துச் சென்று தனிமைச் சிறையில் வைத்துவிட்டதாக தங்களிடம் கூறப்பட்டது என்று இருவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.
இது குறித்து கத்தார் அரசிடம் இருந்து எந்த அறிக்கையும் வரவில்லை மற்றும் செய்தித்தாள்களில் தான் எதையும் பார்க்கவில்லை என்று தோஹாவில் உள்ள ஒரு ஊடக நிறுவனத்தின் மூத்த ஆசிரியர் கூறினார்.
கத்தார் அரசின் தகவல் தொடர்பு அலுவலகம், உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகங்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுக்கு எந்த பதிலும் இல்லை.
மத்திய கிழக்கின் பணக்கார நாடுகளில் ஒன்று கத்தார். சமீபத்தில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி அங்கு நடத்தப்பட்டது. ஆயினும் அங்குள்ள மனித உரிமைகளின் நிலை குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆனால், அங்குள்ள ஊடகங்கள் அரசை விமர்சிப்பதை தவிர்க்கின்றன.
கத்தாரில் எது குற்றம்?
எமிரை விமர்சிப்பது, கத்தார் கொடியை அவமதிப்பது மற்றும் மதத்தை நிந்தனை செய்வது ஆகியவை கத்தாரில் குற்றங்கள் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.
கத்தாரில் 70,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். இந்தியாவின் மொத்த திரவ இயற்கை எரிவாயு விநியோகத்தில் பாதிக்கும் மேல் கத்தாரில் இருந்து வருகிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவிக்கிறது.
2020-21 ஆம் ஆண்டில் கத்தாருடன் இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 9.21 பில்லியன் டாலர் ஆகும். கத்தாரில் 6,000க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய இந்திய நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இப்படிப்பட்ட நிலையில், 8 இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் இருப்பது அவர்களது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
”108 நாட்கள் என்பது மிக அதிகம். ஆகவே இவர்களை விரைவில் எங்களிடம் வர அனுமதிக்குமாறு கத்தார் அரசையும் நம் நாட்டு அரசையும் கூப்பிய கைகளுடன் கேட்டுக்கொள்கிறோம்,” என்று கேப்டன் (ஓய்வு) நவ்தேஜ் சிங் கில்லின் சகோதரர் நவ்தீப் கில் கூறினார்.
84 வயதை கடந்துவிட்ட தாய் மிகவும் கவலையாக இருப்பதாக கமாண்டர் (ஓய்வு) பூர்ணேந்து திவாரியின் சகோதரி மீது பார்கவா, கூறினார். "அம்மா உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார், அவர் மிகவும் வருத்தமாக இருக்கிறார். (அவரது) ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டது. அவர் ஒரு நீரிழிவு நோயாளி. அவர் இதய நோயாளியும் கூட. பூர்ணேந்து நாளை வந்துவிடுவார் என்று நாங்கள் அவரிடம் சொல்கிறோம். இதை தினமும் சொல்கிறோம். ஒவ்வொரு முறையும் அவர் கண்களில் கண்ணீர் வருகிறது,"என்று அவர் குறிப்பிட்டார்.
இந்திய-கத்தார் கடற்படை உறவுகள் மறுபரிசீலனை செய்யப்படவேண்டும் என்று இந்திய கடற்படையின் முன்னாள் கடற்படைத் தளபதி ஓய்வுபெற்ற அட்மிரல் ஆர்.அருண் பிரகாஷ் ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
"அவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பது ஆச்சரியமானது, கவலைக்குரியது. அவர்கள் மீது குற்றம் சாட்டப்படவில்லை. விசாரணையும் நடக்கவில்லை. அவர்கள் ஏன் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை,”என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
"(அவர்கள்) குற்றவாளிகள் என்றால் (அவர்களை) திருப்பி அனுப்புங்கள். இங்கே தண்டனை வழங்கப்படும். அவர்கள் குற்றம் செய்யவில்லை என்றால் (அவர்களை) விடுவித்து விடுங்கள். (அவர்களை) இப்படி அடைத்து வைப்பது சரியல்ல," என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த 8 இந்தியர்களும் ஏன் தாயகம் திரும்ப முடியவில்லை என்பது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து அதிக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.
கத்தாரில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலுக்கு எந்த பதிலும் வரவில்லை.
எனினும், 8 இந்தியர்களை மீட்பதே தனது முன்னுரிமை என்றும், கத்தாருக்கான இந்திய தூதரும் மூத்த அதிகாரிகளும் கத்தார் அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.
"கத்தாருக்கும் இந்தியாவுக்கும் நல்ல உறவு உள்ளது. இந்தப் விவகாரத்தில் ஏதேனும் நிச்சயமற்ற தன்மை இருந்தால், கத்தார் அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் தங்களைத் திறம்பட பிரதிநிதித்துவப்படுத்துவதைத் தடுக்கும் விதமாக எதுவும் இருப்பதை நான் காணவில்லை,” என்று கத்தார் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரும், அமெரிக்கன் திங்க்டேங்க் அட்லாண்டிக் கவுன்சிலில் நான் ரெஸிடெண்ட் மூத்த உறுப்பினருமான டாக்டர். அலி பாக்கீர் கூறுகிறார்.
"இந்தக் கதை உண்மை என்றால், கத்தாருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சட்ட மற்றும் தூதரக வழிகளை பின்பற்றி இந்தப் பிரச்சனை தீர்க்கப்படும் என்று நினைக்கிறேன். கத்தாரில் தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களின் எஞ்சிய கால தண்டனையை இந்தியாவில் அனுபவிக்க அனுமதிக்கும் ஒப்பந்தம் இரு அரசுகளுக்கும் இடையே உள்ளது."என்கிறார் அவர்.
உறுதியான தகவல்கள் இல்லாத நிலையில், நிறைய ஊகங்கள் மற்றும் வதந்திகள் உள்ளன.
"இது நிறுவனங்களின் கார்ப்பரேட் போட்டி என்று நாங்கள் நினைக்கிறோம்,”என்று மீது பார்கவா தெரிவிக்கிறார்.
சர்வதேச ஊடகத்தின் ஒரு பிரிவினர் இதை உளவு வேலையுடன் தொடர்புபடுத்தி உள்ளனர். ஆனால் இதற்கான காரணம் மற்றும் தகவல்களும் தெளிவாக இல்லை.
Dahra Global Qatar நிறுவனத்தின் இணையதளம் இப்போது " அண்டர் கன்ஸ்ட்ரக்ஷன்" என்ற வார்த்தைகளுடன் கருப்புப் பக்கமாக மாற்றப்பட்டுள்ளது.
தோஹாவில் உள்ள நிறுவனத்தின் வரவேற்பறைக்கு போன் செய்து அதிகாரிகளிடம் இணைக்குமாறு வேண்டுகோள் விடுத்தபோது, அந்த அழைப்பை ஃபார்வேர்ட் செய்ய முடியாது என்றும், "கம்பெனி இயங்குகிறது, வேலை நடக்கிறது. இங்கே பிரச்சனை எதுவும் இல்லை” என்றும் அழைப்புக்கு பதில் அளித்தவர் கூறினார்.
இந்திய அரசு மீட்டுத் தர வேண்டும என்று குடும்பத்தினர் கோரிக்கை
கமாண்டர்(ஓய்வு) பூர்ணேந்து திவாரி 2002 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றார். சிங்கப்பூர் மற்றும் தாஷ்கண்டில் வேலை செய்தபிறகு அவர் 2013 இல் கத்தாருக்கு சென்றார். அங்கு 2013 மற்றும் 2015 க்கு இடையில் அவர் நான்கு பேருடன் சேர்ந்து தஹ்ரா நிறுவனத்தை தொடங்கினார். என் சகோதரர் நிறுவனத்தில் மேலாண்மை இயக்குநராக இருந்தார். அதில் ஏழு இயக்குநர்கள் இருந்தனர்,” என்று மீது பார்கவா தெரிவித்தார்.
தஹ்ரா நிறுவனம் கத்தார் கடற்படைக்கு பயிற்சி அளித்ததாக மீது பார்கவா கூறுகிறார்.
ஓய்வுபெற்ற இந்திய அதிகாரிகள் பயிற்சி அளிக்க பிற நாடுகளுக்குச் செல்வது குறித்து கருத்து தெரிவித்த அட்மிரல் (ஓய்வு) அருண் பிரகாஷ், ”பல நாடுகளில் இருந்தும் இந்தியாவுக்கு பயிற்சி பெற வருவார்கள். இந்தியர்கள் வெளிநாடு சென்று பயிற்சி அளிப்பது அனைவருக்கும் நல்லது,”என்றார்.
”இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை அரசு முழுமையாக அறிந்திருப்பதால், இதில் மறைக்கவோ, தயங்கவோ எதுவுமில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.
2019 ஆம் ஆண்டில், பிரவாசி பாரதிய சம்மான் விருது பெற்ற கமாண்டர் பூர்ணேந்து திவாரி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தனது தாயுடன் பேசுவார் என்று மீது பார்கவா கூறினார்.
செப்டம்பர் நாட்களை நினைவு கூர்ந்த அவர், நீண்ட நாட்கள் கடந்தும் சகோதரிடமிருந்து அழைப்பு வராததால் குடும்பத்தினர் கவலையடைந்ததாக தெரிவித்தார். கத்தாரில் உள்ள அலுவலகத்திற்கு போன் செய்தபோது, மாண்டர் திவாரி கப்பலில் சென்றுகொண்டிருப்பதாக முதலில் கூறப்பட்டது.
அதன்பிறகும் குடும்பத்திற்கு தொலைபேசி அழைப்பு வராததால் தாங்கள் மீண்டும் விசாரித்தபோது, ஆகஸ்ட் 30 அன்று கத்தார் அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்றதாக தங்களிடம் கூறப்பட்டது என்று மீது பார்கவா குறிப்பிட்டார்.
"நாங்கள் கத்தாரில் உள்ள (இந்திய) தூதரகத்தை தொடர்பு கொண்டோம். அப்போது எட்டு அதிகாரிகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது."என்றும் அவர் சொன்னார்.
”அவரது நிறுவனம் கத்தார் கடற்படைக்கு பயிற்சி அளித்து வந்தது. அவர் சிறப்பாக பணியாற்றினார். அதனால்தான் என் சகோதரருக்கு 2019 இல் பிரவாசி பாரதிய சம்மான் கிடைத்தது,”என்று மீது பார்கவா கூறினார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கமாண்டர் திவாரியின் குடும்பத்தினருக்கு தொலைபேசி அழைப்பு வரும் என்றும் 5-8 நிமிடங்களுக்கு நீடிக்கும் உரையாடல் ஆங்கிலத்தில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஏனெனில் "இந்தியில் பேச அனுமதி இல்லை. ஏனென்றால் இந்தியை புரிந்துகொள்ள முடியாது என்று அவர்கள் நினைக்கின்றனர். அதனால் அவர் என் தாயிடமும் ஆங்கிலத்தில்தான் பேசுவார்,” என்று மீது பார்கவா கூறுகிறார்.
"அவர் (கமாண்டர் திவாரி) எல்லா விஷயங்கள் பற்றியும் பேசுவார். நாங்களும் அவரை ஊக்குவிப்போம். அம்மாவுக்கு அழைப்பு வரும். இளைய சகோதரர்களும் பேசுவார்கள். பயப்படாமல் இருக்கும்படி சொல்வோம். இந்திய அரசு எல்லா முயற்சிகளையும் செய்கிறது. நீங்கள் சில நாட்களில் திரும்பி வந்துவிடுவீர்கள் என்று கூறுவோம். ஆனால் மெதுவாக இப்போது அவரும் தன் தைரியத்தை இழந்து வருகிறார்."
"நான் இங்கேயே இருப்பேனா? வெளியில் வரமாட்டேனா என்று அவர் கேட்பார். அரசு முயற்சிக்கிறது, நீங்கள் எந்தத் தவறும் செய்யாததால் கொஞ்ச நாளில் வெளியே வந்து விடுவீர்கள் என்று அம்மாவும், மற்ற சகோதர்களும் சொல்வார்கள்.” என்று அவர் குறிப்பிட்டார்.
“அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. அவருக்கு இதயப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எடை குறைந்துவிட்டதாக அவர் சொல்கிறார். அவர் ஒரு நீரிழிவு நோயாளி. அவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. அதனால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம்,”என்கிறார் மீது பார்கவா.
”இந்திய அரசு இப்போது செய்யவில்லையென்றால் பிறகு எபோதுதான் செய்யும்? விரைவில் ஏதாவது செய்யுங்கள். அவர்களை விடுதலை செய்யுமாறு இரு அரசுகளிடமும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். என் சகோதரர் பேசும்போதெல்லாம் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று சொல்வார்.”
முன்னதாக அக்டோபர் 25 ஆம் தேதி மீது பார்கவா தனது ட்விட்டர் செய்தியில், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொண்டு பிரதமர் நரேந்திர மோதியை டேக் செய்தார்.
அந்த ட்வீட்டை சீக்கிரம் டெலிட் செய்ய வேண்டும், இல்லையெனில் அதிகாரிகள் அதிக சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்று தனது ட்வீட்டிற்கு மக்களிடமிருந்து பதில் செய்திகளைப் பெற்றதாக அவர் கூறுகிறார்.
" அவர்கள் அனைவரையும் இந்திய அரசுதான் இந்தியாவிற்கு அழைத்து வரும்," என்று அவர் கூறுகிறார்.
'கூப்பிய கரங்களுடன் வேண்டுகிறோம்'
தன் 57 வயதான சகோதரர் கேப்டன் (ஓய்வு) நவ்தேஜ் சிங் கில் 30 ஆண்டுகள் இந்திய கடற்படையில் பணியாற்றினார் என்றும் பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார் என்றும் நவ்தீப் கில் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 30 முதல் தோஹாவில் உள்ள தனது சகோதரரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அவர் கூறுகிறார்.
செப்டம்பர் 6 ஆம் தேதி அவரது பிறந்தநாளன்று தொடர்பு கொண்டபோதும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
நவ்தீப் கில் நிறுவன அலுவலகத்தை அழைத்தபோது, கேப்டன் (ஓய்வு) நவ்தேஜ் சிங் கில்லையும் கத்தார் அதிகாரிகள் அழைத்துச் சென்றுவிட்ட தகவல் தெரிந்தது. எட்டு இந்தியர்களுக்கும் தூதரக அணுகல் வழங்கப்பட்ட பிறகு, இவர்கள் அனைவரும் தனிமை அறைகளில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வந்தது.
கேப்டன் (ஓய்வு) நவ்தேஜ் சிங் கில்லின் உடல்நிலை குறித்துப்பேசிய அவர், "அவருக்கு ஏற்கனவே நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உள்ளன. எனவே நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்" என்று கூறுகிறார்.
தனது சகோதரரின் தொலைபேசி உரையாடல் குறித்துப்பேசிய அவர்,” இந்த உரையாடல் 3-4 நிமிடங்கள் நீடிக்கும். மிகவும் சாதாரணமான பேச்சே நடக்கும். நிலைமை பற்றிய பேச்சு இருக்காது. அவரது குரலைக்கேட்டால் அவரால் பேசக்கூட முடியவில்லை என்பது போலத்தோன்றும்,” என்றார் அவர். “ஒருமுறை அவரிடம் இன்னும் பேசுங்கள் என்று சொன்னபோது என்னால் பேச முடியவில்லை என்று அவர் சொன்னார். இதிலிருந்து அவரது உடல் நிலை அவ்வளவாக நன்றாக இல்லை என்பது தெரிந்தது,” என்று நவ்தீப் கில் குறிப்பிட்டார்.
”தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று என் சகோதரர் ஒருமுறை மட்டுமே என்னிடம் கூறினார்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"தொலைபேசியில் மிகவும் சோகமாக ஒலிக்கும் அவரது குரலைக்கேட்கும்போது, மனதளவில் அவர் அவ்வளவு நன்றாக இல்லை என்றே தோன்றுகிறது.”
இந்தியா-கத்தார் உறவுகள்
நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புவதாக சிறப்பான இந்திய-கத்தார் உறவுகளை மேற்கோள் காட்டி, அட்மிரல் அருண் பிரகாஷூம், சிறையில் வாடும் இந்தியர்களின் குடும்பத்தினரும் தெரிவிக்கின்றனர்.
“ இரு நாடுகளும் ஒரே பகுதியில் உள்ளன. இருவருக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நாம் கத்தாரிடமிருந்து இயற்கை எரிவாயுவை அதிக அளவில் வாங்குகிறோம். இரு கடற்படைகளும் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்கின்றன. நமக்குள் எந்தப் பகைமையும் இல்லை. இந்த சூழ்நிலையில் எந்த விளக்கமும் இல்லாமல், இந்திய குடிமக்களை அடைத்து வைத்திருப்பது மிகுந்த ஆச்சரியத்தையும் கவலையையும் தருகிறது,” என்று ஓய்வுபெற்ற அட்மிரல் அருண் பிரகாஷ் குறிப்பிட்டார்.
இந்தியாவிற்கும் கத்தார் கடற்படைக்கும் இடையிலான கூட்டுப் பயிற்சி மற்றும் சிறந்த உறவுகள் பற்றி 2019 நவம்பரில் வெளியியான இந்திய அரசின் செய்திக்குறிப்பில், குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பரஸ்பர பயணமும் மேற்கொள்கின்றனர். இந்தியா - கத்தார் உறவுகள் குறித்த எட்டு பக்க கட்டுரை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ளது
2015 மார்ச்சில், கத்தாரின் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். பிரதமர் நரேந்திர மோதி 2016 இல் தோஹாவுக்குச் சென்றார்.
"இது மிகவும் நாசூக்கான விஷயம் என்று சொல்லப்படுகிறது. அது தீர்க்கப்பட உள்ளதால், இது பற்றி அதிகம் பேசப்படக்கூடாது என்ற தயக்கம் ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் இது பற்றி எனக்கு தெரியாது. நம் தூதாண்மை அதிகாரிகள் தங்களால் இயன்றவரை முயற்சி செய்துகொண்டிருப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். மூன்று மாதங்களுக்குப் பிறகும் அங்கிருந்து பதில் வரவில்லை என்றால், உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை உள்ளது," என்று ஓய்வு பெற்ற அட்மிரல் அருண் பிரகாஷ் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்