திமுகவின் தேசிய அரசியல் கனவு கானல் நீராகிறதா? கூட்டணி, சொந்தக் கட்சி பிரச்னைகளால் தடுமாற்றமா?

    • எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

திமுகவின் அரசியலில் ஒரு மாத இடைவெளியில் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்க முடிகிறது. தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை அணி திரட்டப் போவதாக சூளுரைத்த அந்தக்கட்சி, இப்போது சொந்த மாநிலத்தில் கூட்டணிக் கட்சிகளை சமாளிப்பதில் பிசியாகியுள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் அமைச்சர் பதவியில் நீடிப்பாரா? மாட்டாரா? என்று சந்தேகம் எழும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.

அப்படி இந்த ஒரு மாத இடைவெளியில் என்ன நடந்தது? தேசிய அளவில் செயல்படப் புறப்பட்ட திமுக மீண்டும் சொந்த மாநிலமான தமிழ்நாட்டு அரசியலிலேயே ஒட்டுமொத்த கவனத்தையும் குவிக்கும் நிலைமை வந்துவிட்டதா? கூட்டணிக் கட்சிகளுடன் அதன் உறவு சிக்கலாகியுள்ளதா? சொந்தக் கட்சியில் என்ன பிரச்னை?

தமிழ்நாட்டில் 2018-ம் ஆண்டுக்குப் பிறகு இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணி அப்படியே தொடர்கிறது.

ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் தேசிய தலைவர்கள்

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வெற்றிக்குப் பிறகு தேசிய அளவிலான பிரச்னைகளில் திமுகவின் குரல் வலுவாக ஒலிக்கத் தொடங்கியது. குறிப்பாக, சமூக நீதி, மாநில சுயாட்சி, மத சார்பின்மை போன்றவற்றில் திமுகவின் குரல் ஓங்கி ஒலித்தது. சமீப காலமாக தேசிய அரசியலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டவும் திமுக முனைப்பு காட்டுகிறது.

அந்த வரிசையில், மார்ச் ஒன்றாம் தேதி சென்னையில் நடைபெற்ற மு.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்றதால் அந்த பொதுக்கூட்டம் தேசிய அளவில் கவனம் ஈர்த்தது.

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பு தொடக்கம்

தொடர்ந்து, பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிற மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதங்கள் எழுதி, அதன் மூலம் மத்திய அரசுக்கும், பாரதிய ஜனதாவுக்கு எதிரான அணி திரட்டலை மு.க.ஸ்டாலின் தொடர்ந்தார்.

அதன் ஒரு பகுதியாக, திமுகவே முன்னின்று தொடங்கிய சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை முக்கியமானது. அப்போது, பாரதிய ஜனதாவுக்கு எதிராக நாடு முழுவதும் ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.

திமுகவின் வேகத்திற்கு தடை போட்ட நிகழ்வுகள்

தேசிய அளவில் இலக்குகளை நிர்ணயித்து திமுக முனைப்புடன் செயல்படத் தொடங்கிய நேரத்தில்தான், தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவின. இதுகுறித்த உறுதிப்படுத்தப்படாத செய்திகளை ட்விட்டரில் பகிர்ந்ததால், பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் படேல் உம்ராவ் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இது இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளை திமுகவின் முயற்சிக்கு எதிராக நிறுத்தும் முயற்சியாகவே அப்போது அரசியல் அரங்கில் பார்க்கப்பட்டது.

அந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில், 12 மணி நேர வேலைச் சட்ட மசோதா, திருமண மண்டபங்களில் மது பயன்படுத்த அனுமதி போன்ற நடவடிக்கைகளால் சொந்த கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை திமுக சம்பாதித்தது. 12 மணி நேர சட்ட மசோதாவை எதிர்த்து சட்டமன்றத்திலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை கடும் வாதம் புரிந்ததுடன், வெளிநடப்பும் செய்தன. திமுகவின் சித்தாந்த தாய்க் கழகமான திராவிடர் கழகமும் அதனை எதிர்த்தது. இதன் தொடர்ச்சியாக 12 மணி நேர வேலைச் சட்ட மசோதா மீதான நடவடிக்கையை நிறுத்திவைத்த தமிழ்நாடு அரசு, மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினத்தன்று அந்த மசோதா திரும்பப் பெறப்படுவதாகவும் அறிவித்தார். அதுபோல், டாஸ்மாக் குறித்த அரசாணையும் திரும்பப் பெறப்பட்டுவிட்டது.

அடுத்தக்கட்டமாக, தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ பதிவுகள் அடுத்தடுத்து வெளியாகி திமுகவிலேயே சலசலப்பை ஏற்படுத்தின. அதுகுறித்து பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் 2 முறை விளக்கம் அளித்துவிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கூட 'உங்களில் ஒருவன்' கேள்வி பதில் வீடியோவில் அதுகுறித்து பதில் அளித்துவிட்டார். ஆனாலும் கூட பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சர்ச்சை இன்னும் முழுமையாக ஓயவில்லை என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

"திமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை"

ஒரு மாதத்திற்கு முன்பு வரை, இன்னும் துல்லியமாக சொல்லப்போனால் 20 நாட்களுக்கு முன்பு வரையிலும் கூட, தேசிய அரசியல் சார்ந்த பெரியபெரிய இலக்குகளை பேசி வந்த திமுக தற்போது கூட்டணிக் கட்சிகளுடனான கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதிலும், சொந்தக் கட்சி பிரச்னையிலும் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களுக்கு முன்பு கூட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி. டி.கே.ரங்கராஜனின் பேச்சைக் கண்டித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.

இந்த பின்னணியில் பார்க்கும் போது, திமுகவின் நிலை சற்று இறங்கியுள்ளதோ என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதுகுறித்து திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். அவரோ, "கூட்டணிக் கட்சிகளுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. அனைத்தும் பேசித் தீர்க்கப்பட்டுவிட்டன. சி.பி.எம். மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசவிருக்கிறார். பி.டி.ஆர். பிரச்னை முடிந்துபோன ஒன்று. அதுகுறித்து பி.டி.ஆர். விளக்கம் அளித்துவிட்டார். தலைவரும் பேசிவிட்டார். ஆகவே அதுபற்றி இனி பேச ஒன்றுமில்லை." என்று பதிலளித்தார்.

"யார் பிரதமராக வரக்கூடாது?என்பதை முன்னிறுத்தியே எங்களது உத்தி இருக்கும்"

அவர் மேலும் பேசுகையில், "தேசிய அரசியலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை திரட்ட திமுக முனைவதால், எங்களுக்கு பல விதங்களிலும் தொல்லை தர பா.ஜ.க. முயற்சிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இன்றைய பிரச்னைகள் பலவற்றின் பின்னணியிலும் பா.ஜ.க.வே. இருக்கிறது. ஆனால், பா.ஜ.க.வின் இதுபோன்ற செயல்பாடுகள் அந்தக் கட்சியின் சரிவை இன்னும் துரிதப்படுத்தவே செய்யும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலைப் பொருத்தவரை, 'யார் பிரதமராக வரக்கூடாது?' என்பதை முன்னிறுத்தியே எங்களது உத்தி இருக்கும். அடுத்த பிரதமரை தேர்வு செய்வதில் திமுக முக்கிய பங்கு வகிக்கும்." என்றார்.

எதிர்க்கட்சிகள் கூட்டணி வென்றால் பிரதமர் காங்கிரசில் இருந்து வருவாரா? அல்லது வேறு யாரேனும் வரக் கூடுமா? என்ற கேள்விக்கு, 'யார் வரக்கூடாது? என்பதே எங்களது தேர்தல் உத்தி. நான் ஏற்கனவே கூறியபடி, தேர்தலுக்குப் பிறகு பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பதில் நாங்கள் முக்கிய பங்கு வகிப்போம்" என்று அவர் பதிலளித்தார்.

"பொன்னான வாய்ப்பை எடப்பாடி பழனிசாமி வீணாக்கிவிட்டார்"

அண்மைக்கால அரசியல் மாற்றங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயனிடம் கேட்ட போது, "திமுகவின் நிலையில் எந்தவொரு சறுக்கலும் ஏற்பட்டிருப்பதாக கருதவில்லை. அதேபோல், தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் எந்தவொரு பிரச்னையும் இருப்பதாகத் தெரியவில்லை. நேற்று கூட தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய சரத்பவாரை பதவியில் நீடிக்க வலியுறுத்தியிருந்தார். தேசிய அளவில் மத சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்க அவரது பங்களிப்பு முக்கியம் என்பதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். கூட்டணிக்கட்சிகளைப் பொருத்தவரை கருத்துவேறுபாடு இருக்கவே செய்யும். ஆனால், தேர்தல் என்று வரும் போது பா.ஜ.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்த கட்சிகள் அப்படியே கூட்டணியைத் தொடரும். ஆகவே, 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி அப்படியே களம் காணும் என்பதில் மாற்றம் இருக்காது" என்றார்.

12 மணி நேர வேலைச்சட்ட மசோதா, திருமண மண்டபங்களில் மது பயன்பாட்டிற்கு அனுமதி போன்றவற்றால் திமுகவின் செல்வாக்கு குறைந்துள்ளதா? அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகாரம் பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமி வலுப் பெற்றுள்ளாரா என்ற கேள்வியை அவரிடம் முன்வைத்தோம். அதற்குப் பதிலளித்த அவர், "12 மணி நேர வேலைச்சட்ட மசோதா, டாஸ்மாக் விவகாரங்களால் மக்களிடையே ஆளும் திமுக மீது ஓரளவு அதிருப்தி எழுந்தது உண்மைதான். ஆனால், அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள எடப்பாடி பழனிசாமி தவறிவிட்டார்.

12 மணி நேர வேலைச்சட்ட மசோதாவுக்கு எதிராக சட்டமன்றத்தில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கடுமையாக எதிர்வினையாற்றின. ஆனால், அந்த நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அவையிலேயே இல்லை. திமுக சார்ந்த தொழிற்சங்கம் கூட எதிர்ப்பைப் பதிவு செய்ய, எடப்பாடி பழனிசாமியோ ஓர் அறிக்கை வெளியிட்டதுடன் திருப்திப்பட்டுக் கொண்டார். எடப்பாடி பழனிசாமிக்கு தங்கத் தாம்பாளத்தில் வைத்து கொடுக்கப்பட்ட வாய்ப்பை வீணடித்துவிட்டார்" என்று கூறினார்.

மேலும் கூறுகையில், "தேசிய அரசியலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைய காங்கிரஸ் அவசியம் என்ற திமுகவின் நிலைப்பாட்டை கர்நாடக சட்டமன்ற தேர்தல் மீண்டும் அழுத்தமாக உறுதிப்படுத்தும். கர்நாடகாவில் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையுடன் வென்றால் தேசிய அளவில் அக்கட்சியின் நிலை வலுப்பெறும். பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை காங்கிரசால் வழிநடத்த முடியும் என்ற நம்பிக்கை பிற கட்சிகளிடையே ஏற்படும்.

கர்நாடக கள நிலவரத்தை உற்று நோக்கும் போது, காங்கிரசுக்கு பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பில்லை. ஒருவேளை பா.ஜ.க. வென்றாலும் கூட, அது நூலிழையில்தான் இருக்கும். அப்போது கூட, காங்கிரசும், மத சார்பற்ற ஜனதா தளமும் தனித்தனியே களம் காண்பதை மையப்படுத்தி எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற திமுகவின் கருத்தை மேலும் வலுப்படுத்தவே செய்யும்." என்று கார்த்திகேயன் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: