You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாக்கடை வடிகாலில் மூன்று நாட்களாக மகனைத் தேடிய தந்தை: திறந்து கிடந்த வாய்க்காலால் ஏற்பட்ட மரணம்
- எழுதியவர், திலீப் குமார் சர்மா
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
அசாம் மாநிலம், குவாஹாட்டி நகரத்தில் உள்ள ஷியாம் நகரில் எட்டு வயது சிறுவன் சாக்கடை வடிகாலில் விழுந்து இறந்துப்போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பகுதியில் மாணிக் தாஸ் பாதையில் கொஞ்ச தூரம் நடந்து சென்றால், ஒரு மண் சாலையின் ஓரத்தில் சிலர் வீட்டிற்கு வெளியே ஒரு கூடாரத்தில் அமைதியாக அமர்ந்திருப்பதைக் காண முடிந்தது. அந்த வீட்டின் அருகே சென்றவுடன் அழுகை சத்தம் அதிகமாக கேட்கிறது.
இதுதான் எட்டு வயது சிறுவன் அவினாஷ் சர்க்கரின் வீடு. அவர் ஜூலை 4 ஆம் தேதி இரவு குவாஹாட்டியில் தனது தந்தையின் ஸ்கூட்டரில் இருந்து தவறி திறந்தவெளி சாக்கடை கால்வாயில் விழுந்தார்.
சுமார் 56 மணிநேர தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை காலை அவினாஷின் உடல் சம்பவம் நடந்த இடத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜ்கர் பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.
அவினாஷ் தந்தையின் நிலை
அவினாஷின் தந்தை ஹோரோலால் சர்க்கார் அதிர்ச்சி கலந்த சோகத்துடன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார்.
அவர் தனது மகனை காப்பாற்றுவதற்காக மழைநீர் நிரம்பிய வாய்க்காலில் இரவு முழுவதும் தேடிக்கொண்டிருந்தார்.
ஹொரோலாலின் இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
எப்படி ஏற்பட்டது என்று கேட்டால், மிகத் தாழ்ந்த குரலில், "வாய்க்காலில் நிறைய கண்ணாடிகள் இருந்தன" என்றார்.
விபத்து எப்படி நடந்தது?
அந்த இருண்ட மழை இரவை நினைவு கூர்ந்த ஹொரோலால், "இரவு சுமார் 10 மணி இருக்கும். நான் பணியை மூடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அன்று எனது எட்டு வயது மகன் அவினாஷும் வொர்க் ஷாப்புக்கு வந்திருந்தார். என் சகோதரியின் 13 வயது மகனும் எங்களுடன் அங்கு இருந்தார், நான் என் மகனை பின் இருக்கையில் உட்கார வைத்தேன்.''
"எனது வொர்க் ஷாப்புக்கு பக்கத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், ஒரு சாலை மூடப்பட்டிருந்தது. இதைத் தவிர, பல இடங்களில் வெள்ள நீர் இருந்தது. எனவே ஜோதி நகர் சாலை வழியாக வீட்டிற்கு செல்ல முடிவு செய்தேன். மழை பெய்து கொண்டிருந்ததால், தெரு விளக்குகள் எரியவில்லை. சாலை தெரியவில்லை.''
"ஜோதி நகர் சௌக் பகுதி அருகே நான் சென்றபோது, திடீரென எனது ஸ்கூட்டர் வழுக்கி, நிலைத் தவறியதால், என் மகன் வாய்க்காலில் விழுந்தான். அவனை பிடிக்க முயன்றபோது நானும் வாய்க்காலில் விழுந்தேன். வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக இருந்தது. இருள் சூழ்ந்ததால் அவனை பார்க்க முடியவில்லை, என் மகனை வாய்க்காலில் தேடினேன்.” என்று விவரித்தார்.
இதைத் தொடர்ந்து, ஹோரோலால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு போன் செய்து உதவி கேட்டார். அவர் மீட்புக் குழுவினருடன் சேர்ந்து மூன்று நாட்களாக குவாஹாட்டியின் வெவ்வேறு வாய்க்கால்களில் தனது மகனைத் தேடினார்.
மூன்று நாட்கள் காத்திருப்புக்கு பிறகு ஏமாற்றம்
அவினாஷின் தாய் கிருஷ்ணமணி சர்க்கார் அறையில் இருந்த ஒரு படுக்கையில் தனது மகனின் பெயரை சொல்லி அழுது கொண்டிருந்தார். அங்கு அவரை சுற்றி பெண்கள் சிலர் அழுது கொண்டிருந்தனர்.
இரண்டு நாட்களாக பக்கத்து கட்டிலில் மயங்கி கிடந்த அவினாஷின் வயதான பாட்டி மாலோதி தாஸ் உடல் நிலை சரியில்லாமல் அழ முடியாமல் அழுது கொண்டிருந்தார்.
அவினாஷின் மற்றொரு பாட்டி ஹொரிதாசி சர்க்கார் கதவுக்கு அருகில் அமர்ந்து, அழுது கொண்டிருந்தார்.
அவினாஷின் இறப்பு செய்தி கடந்த சில நாட்களாக ஒட்டுமொத்த அசாம் மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .
அவினாஷின் தாய் கிருஷ்ணமணி கூறுகையில், "அன்று முதலில் என் மகன் என்னுடன் மார்க்கெட் வந்தார். நாங்கள் சேர்ந்து என் கணவர் வொர்க் ஷாப்புக்கு சென்றோம். எங்கள் உறவினர் சிறுவன் ஷுனுவும் இருந்தார். அப்பாவுடன் வீட்டிற்கு வந்துவிடுகிறேன் என்று கூறினான்''
''எனவே அவர்களை அங்கேயே விட்டுவிட்டு நான் கிளம்பினேன். ஆனால் என் மகன் என்னிடம் திரும்ப வரவில்லை. நான் கண்ணை மூடும் போதெல்லாம், என் மகனைதான் பார்க்கிறேன். அவன் எப்படி சாக்கடையில் விழுந்தான். அங்கு அத்தனை பேர் இருக்கையில் எப்படி காணாமல் போனான்?'' என்கிறார்
ஒரு நாள் கழித்து, இவர்களது மகனின் செருப்புகள் வாய்க்காலில் கண்டுப்பிடிக்க போது, அவர் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கை இருந்ததாக கூறுகிறார் கிருஷ்ணமணி.
மூன்றாம் நாள் காலையில், அவருக்கு ஒரு அலைப்பேசி அழைப்பு வந்தது.
"நான் கவுகாத்தி மருத்துவக் கல்லூரிக்கு ஓடினேன், ஆனால் நான் அங்கு சென்றடைந்தபோது எல்லாம் முடிந்துவிட்டது."
"அவனுடைய சடலத்தைப் பார்த்தேன். ஆனால் அவன் என் மகன் தான் என்பதை நம்புவதற்கு என் இதயம் தயாராக இல்லை. சில நாட்களுக்கு முன்பு அவனுக்கு கண் திருஷ்டி படாமல் இருக்க அவன் காலில் கருப்பு கயிறைக் கட்டியிருந்தேன். அந்த கயிறு இன்னும் அவன் காலில் இருக்கிறது" என்கிறார் கிருஷ்ணமணி
இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த கிருஷ்ணமணி, "அரசு எந்தப் பணி செய்தாலும் அதை முறையாகச் செய்ய வேண்டும். வடிகால் கட்டப்பட்டுள்ள இடத்தில், அவற்றை மூடுவதற்கும் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். வழியில் இருட்டாக இருந்தது. தெரு விளக்குகளில் இருந்து வெளிச்சம் இருந்திருந்தால், என் மகன் காப்பாற்றப்பட்டிருப்பான். இனி இப்படி நடக்காமல் இருக்க அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்றார்
குழந்தையைத் தேட 56 மணி நேரம் ஆனது ஏன்?
சம்பவத்தன்று இரவு தேடுதல் பணியைத் தொடங்கிய மாநில பேரிடர் மீட்புப் படையின் (SDRF) அதிகாரி ஒருவர், ''மழை காரணமாக மலைகளில் இருந்து ஏராளமான மண் வாய்க்காலில் பாய்கிறது, இதன் காரணமாக மீட்புக் குழு தேடுதல் பணியில் பல சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது'' என்றார்
பெயர் கூற விரும்பாத அவர், "சம்பவம் நடந்த அன்று இரவு 12 மணியளவில்,மாநில பேரிடர் மீட்புப் படையின் எட்டு முதல் ஒன்பது பேர் கொண்ட குழு, வாய்க்காலுக்குள் குழந்தையைத் தேடிக்கொண்டே இருந்தது. மழையின் காரணமாக, சாக்கடை வடிகால் நிரம்பியது. சுமார் 6 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பினும், மழை நின்றதும், காலை வரை தேடுதல் பணி தொடர்ந்தது, ஆனால் சிறுவன் கிடைக்கவில்லை" என்றார்
சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடிகாலில் பெரும்பாலான இடங்களில் மூடப்படவில்லை என்று மீட்புக் குழு அதிகாரி தெரிவித்தார். வடிகால் மூடப்பட்டிருந்தால் இன்று தனது குழந்தை உயிருடன் இருந்திருக்கும் என்று குழந்தையின் தந்தை சொல்கிறார்.
தேடுதல் பணி அதிக நேரம் எடுத்ததற்கான காரணத்தை விளக்கிய அதிகாரி, "நகரில் உள்ள வடிகால் அமைப்பு மிகவும் சிக்கலானது. சம்பவம் நடந்த மேல் பகுதியில் உள்ள வடிகால்களின் ஆழம் அதிகமாக இருந்தது.''
''கழிவுநீர் கால்வாய்களை அகற்றி மீட்பு குழுவினர் தேடுதல் பணியைத் தொடர்ந்தனர். வாய்க்காலின் மேல் உள்ள ஸ்லாப்பை திறந்து மீண்டும் மூடும் பணிகள் மேற்கொள்ள அதிக நேரம் எடுத்தது. இதுதவிர வாய்க்காலின் உள்ளே உள்ள சுரங்கப்பாதையில் சேறு படிந்துள்ளது. பல இடங்களில் ஜேசிபி மூலம் அகற்றப்பட்டது.'' என்றார்
இரண்டு நாட்களாக குழந்தை கிடைக்காததால், ஜூலை 6ம் தேதி காலை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் (என்டிஆர்எஃப்) இரண்டு மோப்ப நாய்களுடன் வாய்க்காலில் இறங்கினர்.
இந்த முறை மீட்பு நடவடிக்கையில், மாநில பேரிடர் மீட்புப் படை, காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் ஒரு பெரிய குழு NDRF உடன் இணைந்து சுரங்க இயந்திரங்கள் மற்றும் பிற உபகரணங்களுடன் குழந்தையைத் தேடத் தொடங்கினர்.
ஜூலை 7 ஆம் தேதி காலை 9 மணியளவில் ராஜ்கரில் உள்ள அபூர்வ சின்ஹா பாதைக்கு அருகிலுள்ள வாய்க்காலில் இருந்து சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அரசின் அலட்சியம் குறித்து கேள்விகள் எழுந்ததை தொடர்ந்து முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மீட்புப் பணியை நேரில் பார்வையிட்டார்.
மீட்புக் குழுவுடன் தனது மகனைத் தேடிக்கொண்டிருந்த ஹொரோலாலிடம், அவரது மகனை எப்படி ஆயினும் தேடித் தருவதாக முதல்வர் சர்மா உறுதியளித்தார்.
அசாம் முதலமைச்சர் அறிக்கை
இச்சம்பவம் குறித்து அசாம் முதல்வர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ''குவாஹாட்டி போன்ற பெருநகரில் நிச்சயம் சில பிரச்னைகள் இருக்கும், ஆனால், மக்கள் சுட்டிக்காட்டிய இடங்களில் எல்லாம் நிர்வாகம் அதை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.''
''இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒரு பகுதியின் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காணும் போது, பல்வேறு காரணங்களால் புதிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குகின்றன. இந்தப் பிரச்னையை தீர்க்க அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது''
''இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க கனமழையின் போது வாகனம் ஓட்டாமல் இருப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.
இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை மாலை முதல்வர் சர்மா, ஹொரோலாலின் வீட்டிற்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் மற்றும் அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் அரசுத் துறையின் அலட்சியம் குறித்து கேட்டபோது, குவாஹாட்டி மாநகராட்சி மேயர் மிரிகன் சர்னியா பிபிசியிடம், “கடந்த 45 ஆண்டுகளில் அந்த இடத்தில் (ஜோதி நகர்) இப்படி எந்தவிதமான சம்பவமும் நடக்கவில்லை" என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "நகரில் இருந்து மழைநீரை வெளியேற்ற வடிகால் அமைப்பில் பல பணிகளை செய்துள்ளோம். சில பகுதிகள் தவிர, தற்போது குவாஹாட்டியில் ஓரிரு மணி நேரத்திற்கு மேல் தண்ணீர் தேங்குவதில்லை. இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க மாநகராட்சி பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை தொடர்பு கொண்டு வருகிறது.” என்றார்
குவாஹாட்டி மாநகராட்சி மேயர் மேலும் கூறுகையில், ''வெள்ளம் மற்றும் மழையின் போது அரசாங்கம் வெளியிடும் எச்சரிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும், இதனால் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்காது.'' என்றார்
இருப்பினும், அவினாஷின் மரணம், குவாஹாட்டி நகர மக்களுக்கு அந்த பழைய சம்பவங்களை நினைவுபடுத்தியுள்ளது, இதில் ஆழ்துளை கிணறு மற்றும் திறந்த வாய்க்கால்களால் பலர் உயிரிழந்துள்ளனர்.
2003 முதல், தலைநகர் கவுகாத்தியில் ஆழ்துளை கிணறு மற்றும் திறந்தவெளி வடிகால்களால் சிறார் உட்பட குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு சம்பவம் தவிர மற்ற எட்டு இறப்புகளும் மழைக்காலத்தில் நகரின் பெரும் பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியபோது நிகழ்ந்துள்ளன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)