பற்றி எரியும் வங்கதேசம்: தப்பி வந்த இந்திய மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்?
1971-ல் வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்ற வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி வங்கதேசத்தில் போராட்டம் வெடித்துள்ளது.
மாணவர்களால் அமைதி வழியில் தொடங்கிய போராட்டத்தில், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைந்து, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த சம்பவத்தால் குறைந்தது 115 பேர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
வங்கதேச அரசு, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவையை முடக்கியுள்ளது. மெட்ரோ ரயில்கள் உட்பட போக்குவரத்து சேவை பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள், கல்லூரிகளை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர நாடு முழுவதும் ஜூலை 19ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமைதியை நிலைநாட்ட ராணுவத்துக்கு அரசு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் விடுதலை பெற 1971-ஆம் ஆண்டில் போரிட்ட வீரர்கள் ‘முக்தி யோதா’க்கள் என என்றழைக்கப்படுகின்றனர். இந்த போராட்டத்தில் பங்கெடுத்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணிகளில் சேர 30% இட ஒதுக்கீடு உள்ளது. இது சில ஆண்டுகளுக்கு முன ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் வங்கதேசத்தில் உள்ள உயர்நீதிமன்றம் இந்த ரத்து நடவடிக்கையை நீக்கியது.
இதனால் மாணவர்கள் மத்தியில் போராட்டம் வெடித்தது. பல இடங்களில் கூட்டத்தை கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளையும், ரப்பர் தோட்டாக்களையும் பயன்படுத்தினர்.
தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால் வங்கதேசத்தில் பயிலும் இந்திய மாணவர்கள் நாடு திரும்புகின்றனர்.
வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் தங்கள் பகுதியை விட்டு வெளியே செல்வதை குறைத்துக் கொள்ளுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



