ஜல்லிக்கட்டு: வெற்றியாளர் அறிவிக்கப்படுவது எப்படி? பரிசுகள் என்ன? - சுவாரஸ்ய வரலாறு

    • எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
    • பதவி, பிபிசி செய்திகள்

ஜல்லிக்கட்டு தமிழரின் வீர விளையாட்டு என்று வர்ணிக்கப்பட்டாலும், அண்மைக் காலமாக அதில் வழங்கப்படும் பரிசுப் பொருட்கள் மிகுந்த கவனம் பெறுகின்றன. கார், பைக், வீட்டு உபயோகப் பொருட்கள் என்று பரிசுகள் வாரி வழங்கப்படுகின்றன.

ஜல்லிக்கட்டு தொடங்கியது முதல் அதில் வழங்கப்படும் பரிசுகள் பரிணாம வளர்ச்சி பெற்றது எப்படி என்ற வரலாறு சுவாரஸ்யமானது. 

ஜல்லிக்கட்டு, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக தொன்று தொட்டு விளையாடப்பட்டு வருகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜல்லிக்கட்டு விளையாட்டு வழக்கில் இருந்ததாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மதுரையில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ள கல்லுட்டு மேட்டுப்பட்டி, நீலகிரி மாவட்டம் கரிக்கியூர் உள்ளிட்ட இடங்களில் அதனை நிரூபிக்கும் சான்றுகள் கிடைத்துளளன. 

சீறி வரும் காளையின் திமிலைப் பற்றிய படி, குறிப்பிட்ட தொலைவை கடப்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்பதால் இந்த விளையாட்டை ஏறு தழுவல் என்றே பண்டைய தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. பல இடங்களில் காளைகளின் கொம்புகளில் 'சல்லிக் காசு' என்னும் அன்றைய நாணயங்களைத் துணியில் வைத்து கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அடக்கும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். 

கொம்பில் சல்லிக்காசு வைத்துக் கட்டப்படுவதன் அடிப்படையில் இந்த விளையாட்டு சல்லிக்கட்டு என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னாளில் மருவி ஜல்லிக்கட்டு என்றாகிப் போனதாக தமிழ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

சுதந்திரத்திற்குப் பின்னரும் கூட, காளையின் கொம்பில் சல்லிக்காசுகளை வைத்துக் கட்டும் வழக்கம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் சல்லிக்காசுகள் செல்லாதவையாகிப் போனதால், காளைகளை வெல்வோருக்கும், அடங்காத காளைகளுக்கும் வேறு வகை பரிசுகளை வழங்கும் பழக்கம் தொடங்கியது. 

ஆரவாரமான ஜல்லிக்கட்டுக்கு தனது வார்த்தை ஜாலத்தால் மேலும் சுவாரஸ்யம் சேர்க்கும் மைக் சரவணனிடம், ஜல்லிக்கட்டு பரிசு குறித்து கேட்டோம். 

அவர் பதிலளிக்கையில், "40 ஆண்டுகளுக்கு முன்பு கூட ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய இளைஞர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வேட்டி-சட்டை, துண்டு என்கிற அளவிலேயே பரிசுகள் வழங்கப்பட்டு வந்திருக்கின்றன. 1990-களில் டிபன் பாக்ஸ், வீட்டில் அன்றாட பயன்பாட்டிற்கான எவர் சில்வர் பாத்திரங்கள், வெண்கலம் மற்றும் பித்தளைப் பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன," என்றார். 

மேலும் அவர், "அதன் தொடர்ச்சியாக, ஜல்லிக்கட்டில் வெற்றிப் பெறும் வீரர்கள் அல்லது காளைகளுக்கு பைக், தங்க நாணயம், மொபைல் போன், பீரோ, கட்டில், மெத்தை, பணம் ஆகியவை பரிசாக அளிக்கப்பட்டன. இளவட்டக்கல்லை தூக்கினால்தான் திருமணம் என்பதைப் போல, ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவோருக்கு பெண் கொடுக்கும் வழக்கமும் இருந்தது" என்றும் கூறினார். 

2017-ம் ஆண்டில் பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டு தடைபட, ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொதித்தெழுந்தது. இதன் விளைவாக, தமிழ்நாடெங்கும் ஜல்லிக்கட்டு நடத்தும் உரிமை மீட்டெடுக்கப்பட்டது. தேச எல்லை கடந்து உலகத்தின் கவனமும் ஜல்லிக்கட்டு மீது விழுந்தது. குறிப்பாக, அலங்காநல்லூரைத் தாண்டி அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகளும் உலகின் கவனத்தை ஈர்த்தன.

உலகமே உற்றுநோக்கும் ஒன்றாக மாறிவிட்ட பிறகு இந்திய அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் ஜல்லிக்கட்டுடன் ஏதாவது ஒரு வகையில் தங்களை இணைத்து அடையாளப்படுத்தத் தொடங்கிவிட்டனர். 2021-ம் ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். 

அதே ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, திமுக இளைஞரணித் தலைவரும், தற்போதைய அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் கலந்து கொண்டனர்.

அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடத்தப்படும் ஜல்லிக்கட்டுகளில் அந்தந்த பகுதி அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் பங்கெடுப்பது எழுதப்படாத விதியாகவே ஆகிப் போனது. 

வெளிநாட்டினர், அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் கவனம் பெற்ற பிறகு ஜல்லிக்கட்டிற்கு ஸ்பான்சர்கள் குவியத் தொடங்கிவிட்டன. இதனால், விலை மதிப்பு மிக்க பரிசுகளை வழங்குவது சாதாரணமாகி விட்டது. குறிப்பாக, அலங்காநல்லூர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டுகளில் முதல் பரிசாக கார் வழங்கப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. 

"ஜல்லிக்கட்டில் இன்று விலை மதிப்பு மிக்க கார்கள் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டாலும், வீரர்கள் மற்றும் காளை வளர்ப்பாளர்களின் குறிக்கோள் அதுவல்ல" என்கிறார் ஜல்லிக்கட்டு வர்ணனையாளர் மைக் சரவணன். 

"தமிழர் பெருமையை உலகிற்கு எடுத்துக் காட்டும் வகையில் வீரத்தையும், தீரத்தையும் களத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்பதே வீரர்களின் குறிக்கோள். காளை வளர்ப்போரைப் பொருத்தவரை தங்களது காளையின் வேகத்தையும், தாங்கள் வளர்த்த, பயிற்சி அளித்த விதத்தையும் உலகறியச் செய்ய வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கிறது.

அவர்களைப் பொருத்தவரை வேட்டியோ அல்லது காரோ எல்லாமே ஒன்றுதான். ஒவ்வோர் ஆண்டும் ஜல்லிக்கட்டில் ஏதாவது ஒரு வகையில் தங்களது பங்களிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருக்கிறது," என்று மைக் சரவணன் விவரிக்கிறார். 

அத்துடன், "ஜல்லிக்கட்டு விளையாட்டுதான் இளைஞர்கள் தீயப் பழக்கங்களுக்கு ஆளாகாமல் காக்கிறது. காளைகளை அடக்க விரும்பும் வீரர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதால் அவர்கள் பயிற்சி, சத்தான சரிவிகித உணவு ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றனர். அதுபோல், ஜல்லிக்கட்டுதான் நாட்டு மாடுகளை வளர்க்க விவசாயிகளைத் தூண்டுகிறது. வீட்டில் ஒருவராக செல்லப் பிள்ளை போல சகல வசதிகளுடன் ஜல்லிக்கட்டு காளைகளை அவர்கள் வளர்க்கின்றனர்," என்று அவர் கூறுகிறார். 

மைக் சரவணனின் கருத்தையே அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கடந்த ஆண்டு முதல் பரிசை வென்ற மண்ணின் மைந்தன் கார்த்திக்கும் பிரதிபலிக்கிறார். 24 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழஙகப்பட்டது.

தற்போது, கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு உடற்கல்வியியல் பயிலும் அவர் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். குடும்பத்தின் பொருளாதார நிலை கருதி விடுமுறை நாட்களில் கொத்தனார் வேலைக்குச் சென்று வருபவர். 

இத்தகைய குடும்ப பின்னணி கொண்டுள்ள கார்த்திக்கால், கடந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல் பரிசாக கிடைத்த காரை பெருமை சேர்க்கும் கவுரமிக்க பொருளாக நீண்ட நாள் வைத்திருக்க முடியவில்லை. குடும்பத்தின் கடனை அடைக்க, ஷோரூமில் இருந்து வந்ததுமே அவர் காரை விற்றுவிட்டார். 

இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க வழக்கம் போல் உற்சாகமாக கார்த்திக் தயாராகி வருகிறார். கார்த்திக் மட்டுமல்ல, ஜல்லிக்கட்டில் காளைகளை எதிர்கொள்ளும் வீரர்கள் அனைவருமே அதற்காக தவம் போல் தயாராகின்றனர். 

உடலை வலிமையாக்கி, பயிற்சி பெறுவது மட்டும் ஜல்லிக்கட்டு வீரர் தயாராகும் விதமல்ல. ஒரு மாதத்திற்கு முன்பே காப்பு கட்டி விரதமிருந்து ஜல்லிக்கட்டில் பங்கேற்க வீரர்கள் தயாராகின்றனர். ஏனென்றால், ஜல்லிக்கட்டு என்பது அவர்களுக்கு வெறும் விளையாட்டு அல்ல, மாறாக மண்ணின் வீரத்தை பறைசாற்றும் களம் என்கிறார் மைக் சரவணன். 

ஆகவே, பரிசுகள் ஒரு பக்கம் இருந்தாலும், ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு காளைகளை அடக்கிய வீரர் என்ற பெருமையை பெறுவதிலேயே இளைஞர்கள் பெருமிதம் கொள்வதாக மைக் சரவணன் தெரிவித்தார். 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: