You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ராகுல் நேருவின் கொள்ளுப் பேரன்; நான் காந்தியின் கொள்ளுப் பேரன்' - கமல்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னெடுத்துள்ள 'இந்திய ஒற்றுமை' யாத்திரையில் கலந்துகொள்ள வேண்டாம் என பலர் தனக்கு அறிவுறுத்தியதாகவும், தான் ஓர் இந்திய குடிமகனாக கலந்துகொண்டதாகவும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார். டெல்லியில் நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையின் நிகழ்வில் பங்குபெற்ற கமல்ஹாசன் ஓர் அரசியல் தலைவராக இல்லாமல், ஓர் இந்திய குடிமகனாக ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்துகொண்டதாக தெரிவித்தார்.
இந்தியாவின் கொள்ளுப் பேரன்கள்
''ராகுல் காந்தி, நேருவின் கொள்ளுப் பேரன். நான் பிற இந்திய குடிமகன்களை போல காந்தியின் கொள்ளுப் பேரன். நாங்கள் இருவரும் இந்தியாவின் கொள்ளுப் பேரன்கள். நான் ஓர் அரசியல்வாதியாக இருப்பதால், இந்த யாத்திரையில் கலந்துகொள்ளவேண்டாம் என்று பலரும் எனக்கு அறிவுறுத்தினார்கள். ஆனால் கமல்ஹாசன், இந்திய தாயின் மகன் என்பதுதான் என் அடையாளம். அந்த அடையாளத்தில்தான் கலந்துகொள்கிறேன்,'’ என கமல்ஹாசன் தெரிவித்தார்.
'வீதியில் இறங்கி போராடுவேன்'
தனது அரசியல் பயணம் தனக்காக தொடங்கப்பட்டதல்ல என்றும் மக்களுக்காக தொடங்கப்பட்டது என்று கூறிய கமல்ஹாசன், ''எனது தந்தையும் காங்கிரஸ் தொண்டர்தான். நான் பலவிதமான அரசியல் சித்தாந்தங்களைப் பற்றியும் அறிந்துகொண்டேன்.
பின்பு அரசியல் கட்சி தொடங்கினேன். இந்த யாத்திரையில் நான் ராகுலுடன் இணைந்து நடக்கிறேன். இது அரசியல் அடையாளம் அல்ல. இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு நெருக்கடி வந்தால் வீதியில் இறங்கி போராடுவேன். தேசிய ஒற்றுமை பயணத்தில் இரண்டு கொள்ளுப் பேரன்கள் இணைந்து நடக்கிறோம் என்றுதான் இதை பார்க்கவேண்டும்,''என்றார்.
டெல்லியில் தமிழில் பேசிய கமல்
முதலில் தனது உரையை ஆங்கிலத்தில்தான் கமல்ஹாசன் பேசினார். கூட்டத்தில் பலரும் தமிழில் பேசுங்கள் என்றும் ராகுல் காந்தியும் தமிழில் பேசுமாறு கூறிய பின்பு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கமல்ஹாசன் பேசினார். முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க அன்புச் சகோதரர் ராகுல் காந்தி முன்னெடுக்கும் பாரத் ஜோடோ யாத்திரையில் நானும், நிர்வாகிகளும் கலந்துகொள்கிறோம். மண் மொழி மக்கள் காக்க ஓர் இந்தியக் குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும்.ஜெய் ஹிந்த்,''என கமல்ஹாசன் பதிவிட்டிருந்தார்.
'ஆட்சி நடத்தும் அம்பானி, அதானி' - ராகுல் காந்தி
கமலுக்கு பின்னர் மேடையில் ராகுல் காந்தி பேசினார். அவரின் உரையின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோதியை விமர்சித்து பேசினார் ''இந்தியாவில் நடப்பது நரேந்திர மோதியின் ஆட்சி அல்ல. அம்பானி, அதானியின் ஆட்சி தான் இந்தியாவில் நடக்கிறது. மக்களின் பிரச்னைகளை மறைக்க இந்து - முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைத்து புதிய பிரச்னைகளை மோதி அரசு உருவாக்குகிறது. புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்த தவறியது விளைவாக இளைஞர்கள் ‘பக்கோடா’ விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று ராகுல் பேசினார். 'பாரத் ஜோடோ' யாத்திரை இந்தியாவை போன்றது, இங்கு வெறுப்பு பேச்சுக்கு, வன்முறைக்கு இடம் கிடையாது. யாத்திரையில் நாய், பசு, எருமை, பன்றி உள்ளிட்ட அனைத்து விலங்குகளும் வந்தன. ஆனால் அவற்றை யாரும் என்று துன்புறுத்தவில்லை என்று ராகுல் காந்தி தனது உரையில் தெரிவித்தார்.
பாரத் ஜோடோ யாத்திரை
கடந்த செப்டம்பர் மாதம் ராகுல் காந்தி பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினர்.
காஷ்மீர் வரை, 3570 கிலோமீட்டர் பயணத்தை 150 நாட்களில் ராகுல் காந்தி நடைபயணமாக சென்று யாத்திரையை முடிக்கவுள்ளார். தனது கட்சி தொண்டர்கள் மற்றும் இந்திய குடிமக்களை நேரில் சந்தித்துப் பேசும் யாத்திரையாக இந்த பயணம் இருக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்