'ஜெயிலர்' பட வில்லன் விநாயகன் திடீர் கைது - காவல் நிலையத்தில் என்ன நடந்தது?

கேரளாவைச் சேர்ந்த, ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் விநாயகன் திடீரென கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் விநாயகன், தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் திமிரு, காளை, சிலம்பாட்டம் , மரியான் போன்ற படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் 2016 ஆம் ஆண்டு ராஜீவ் ரவி இயக்கத்தில் வெளியான கம்மாட்டி பாடம் படத்தில் கங்கா என்னும் கதாபாத்திரவில் நடித்திருந்திருந்த விநாயகனின் நடிப்பு அவருக்கு புகழின் வெளிச்சத்தை கொடுத்தது. பாராட்டுகளோடு கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் இந்த படம் விநாயகனுக்கு பெற்றுத்தந்தது.

தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக விநாயகன் நடித்திருந்தார். வர்மன் என்ற கதாபாரத்தில் மலையாளம் கலந்து பேசும் அவரது பேச்சு மொழியும் நடிப்பும் ரசிகர்களிடையே பெரும் பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில், கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள காவல் நிலையத்தில் நடிகர் விநாயகன் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

நடந்தது என்ன?

நேற்று மாலை 4.30 மணியளவில் கலூர் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் அருகே உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு போலீசாரை விநாயகன் அழைத்துள்ளார். அங்கு சென்ற போலீசாருக்கு மனைவியுடனான குடும்ப தகராறு காரணமாகவே விநாயகன் தங்களை அழைத்தது தெரியவந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட போலீசார், பிளாட் வாங்குவது தொடர்பான தகராறே குடும்ப சண்டைக்கு காரணம் என்பதை விசாரணை மூலம் அறிந்துகொண்டனர்.

விசாரணைக்கு பின்னர் போலீசார் காவல்நிலையத்துக்கு திரும்ப தயாராகினர். இதனால் கோபமடைந்த விநாயகன், போலீசாரை நோக்கி “நீங்கள் ஒரு பக்கம் சொல்வதை மட்டும் கேட்கிறீர்கள். பெண்கள் சொல்வதை மட்டும் நம்புகிறீர்கள்” என்று கூறி பிளாட்டுக்கு வந்த மகளிர் போலீசார் உள்ளிட்ட அதிகாரிகளை விநாயகன் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

பின்னர் இரவு 7.30 மணியளவில் காவல் நிலையத்திற்கு வந்த விநாயகன், காவல்துறை அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. காவல்நிலையத்தில் விநாயகம் புகை பிடித்ததாகவும் இதையடுத்து விநாயகத்தை கைது செய்த போலீசார் அவரை மருத்துவ பரிசோதனைக்காக எர்ணாவூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவர் மது அருந்தியிருந்தது பரிசோதனையில் உறுதியானதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதை தொடர்ந்து காவல்நிலையத்தில் தகராறில் ஈடுபட்டதாக விநாயகன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

எர்ணாகுளம் வடக்கு காவல்நிலையத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் விநாயகன் மீது போதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொச்சி காவல்துறை துணை ஆணையர் எஸ்.சசிதரன் தெரிவித்தார்.

விநாயகன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது தொடர்பான உமா தாமஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டிற்கு பதிலளித்த அவர், “காவல்துறை எந்த செல்வாக்கிற்கும் அடிபணியவில்லை. சத்தம் எழுப்பியதற்காகவும், பணியைத் தடுக்க முயன்றதற்காகவும் 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சட்டங்களின் கீழ் தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் ”எனத் தெரிவித்தார்.

அதிகாரிகளை விநாயகன் தாக்க முயன்றது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும், ஆக்கிரமிப்பு முயற்சி நடந்தது நிரூபிக்கப்பட்டால், கூடுதல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் காவல்துறை துணை ஆணையர் எஸ்.சசிதரன் கூறினார்.

விநாயகன் மீது அவரது மனைவி புகார் ஏதும் அளித்துள்ளாரா என்ற கேள்விக்கு, விசாரித்து விட்டு, பிறகு பதில் அளிப்பதாக கூறினார். மேலும், ஏற்கனவே விநாயகன் மது அருந்திவிட்டு சில பிரச்னைகள் செய்திருப்பதாகவும் தெரிவித்தர்.

கடந்த காலங்களிலும் சர்ச்சைகளில் சிக்கியவர்

கேரளாவின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த உம்மன் சாண்டி குறித்து நடிகர் விநாயகன் கடந்த ஜூலை மாதம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஜுலை 20ஆம் தேதி ஃபேஸ்புக் லைவில் வந்த அவர், “உம்மன் சாண்டி யார்? உம்மன் சாண்டி இறந்ததற்கு எதற்கு மூன்று நாள் விடுமுறை விடுகின்றனர். உம்மன் சாண்டி இறந்துவிட்டார். என் அப்பாவும் இறந்துவிட்டார். இறந்துவிட்டார். உங்களுடைய அப்பாவும் இறந்துவிட்டார். அவர் நல்லவர் என்று நீங்கள் வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், நான் சொல்ல மாட்டேன் ” என்று பேசியிருந்தார். இதையடுத்து இளைஞர் காங்கிரஸ் மற்றும் பலர் தொடர்ந்த வழக்கில் விநாயகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதேபோல், மீ டூ இயக்கம் தொடர்பாக கடந்த 2022ஆம் ஆண்டு செய்தியாளர்கள் சந்திப்பில் விநாயகன் தெரிவித்த கருத்துகளும் சர்ச்சையாயின.

திரைப்பட ஊடக சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "மீ டூ என்றால் என்ன? நான் 10 பெண்களுடன் பாலியல் ரீதியாக உறவில் இருந்துள்ளேன். அவர்கள் அனுமதியுடனே உறவில் இருந்துள்ளேன்." என்று தெரிவித்ததோடு அங்கிருந்த பெண் செய்தியாளர் ஒருவர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது பேச்சுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதோடு, விநாயகன் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. பின்னர், தனது பேச்சுக்கு அவர் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.

கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாம்பாடியைச் சேர்ந்த பெண்மணியின் புகார் அடிப்படையில் விநாயகன் மீது கடந்த 2019ஆம் ஆண்டு கல்பேட்டா காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள் அப்பெண் விநாயகனை தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைத்தபோது, விநாயகன் அப்பெண்ணை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பெண் கோட்டயம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் கல்பெட்டா காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டு ஐபிசி 509, 294 (B), 120(O) ஆகிய பிரிவுகளில் விநாயகம் மீது வழக்குப் பதியப்பட்டது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)டியூப்