You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கௌதமியை ஏமாற்றிய நபருக்கு பா.ஜ.க. மூத்த உறுப்பினர்கள் ஆதரவா? திடீர் முடிவின் பின்னணி என்ன?
நீண்ட காலமாக பா.ஜ.க.வில் உறுப்பினராக இருந்துவந்த திரைக்கலைஞர் கௌதமி, அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். தன்னை மோசடி செய்த நபருக்கு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.
கௌதமி ஏன் பா.ஜ.க.விலிருந்து விலகினார்?
இந்த விஷயத்தின் பின்னணி என்ன?
‘நம்பிக்கை மோசடி செய்தவருக்கு ஆதரவு’
திரைக்கலைஞரான கௌதமி, தான் நீண்ட காலமாக உறுப்பினராக இருந்து செயல்பட்டுவந்த பா.ஜ.க.விலிருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்திருக்கிறார்.
அந்த அறிக்கையில், தான் மிகவும் கனத்த இதயத்துடன் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
“தேசத்தைக் கட்டமைக்க என்னுடைய முயற்சிகளைத் தர 25 ஆண்டுகளுக்கு முன்பாக பா.ஜ.க.வில் நான் இணைந்தேன். என் வாழ்க்கையில் மிகப் பெரிய சவால்களைச் சந்தித்தபோதும்கூட நான் அதில் மிக உறுதியாக இருந்தேன். இன்று என் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரு சிக்கலான கட்டத்தில் நிற்கிறேன். எனது கட்சியிலிருந்தோ, தலைவர்களிடமிருந்தோ எந்த ஆதரவும் கிடைக்கவில்லை என்பதோடு, யார் எனக்கு நம்பிக்கை மோசடி செய்தார்களோ, வாழ்நாள் சேமிப்பை ஏமாற்றினார்களோ அந்த நபருக்கு உதவி செய்கிறார்கள், ஆதரவளிக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது,” என்று தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
‘புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கத் தாமதம்’
மேலும், தனது அறிக்கையில் தான் 17 வயதிலிருந்து வேலை பார்த்து வருவதாகவும், 37 ஆண்டுகளாக சினிமா, டிவி, ரேடியோ, டிஜிட்டல் மீடியா என வேலை பார்த்ததாகவும், வாழ்வின் இந்த காலகட்டத்தில் நிதி ரீதியாக பாதுகாப்பாக இருக்கலாம் என்பதற்காகத்தான், வாழ்கை முழுவதும் வேலை பார்த்ததாகவும் கூறியிருக்கிறார்.
“நானும் என் மகளும் பாதுகாப்பாக இருந்திருக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில், சி. அழகப்பன் என் பணம், சொத்துகள், ஆவணங்களைத் திருடிவிட்டார் என்பதை அறிந்தேன்.”
“சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக நான் தனியாக, பலவீனமான சூழலில் இருந்தபோது அழகப்பன் என்னை அணுகினார். நான் என் இரண்டு பெற்றோரையும் இழந்து அனாதையாக இருந்ததோடு, கைக்குழந்தையுடன் தனியாக இருந்தேன். ஒரு பாதுகாப்பான மூத்த நபரைப் போல அவரும் அவரது குடும்பத்தினரும் என் வாழ்க்கைக்குள் நுழைந்தார்கள். இம்மாதிரியான சூழலில்தான் 20 ஆண்டுகளுக்கு முன்பாக எனது பல சொத்துகளின் ஆவணங்களையும் அவரிடம் ஒப்படைத்தேன். என்னையும் எனது மகளையும் அவரது குடும்பத்தில் ஒருவராக வைத்திருப்பதுபோல காட்டிக்கொண்டே, எனது சொத்துகளை அவர் ஏமாற்றியிருப்பதை இப்போதுதான் அறிந்தேன்,” என்று தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
மேலும் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், சொத்துகள், ஆவணங்களை மீட்க எல்லா இந்தியர்களையும் போல நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சட்டத்தை நாடியதாகவும், முதல்வர், காவல்துறை, நீதி அமைப்பை நம்பி, பல புகார்களை அளித்திருந்த போதும் நடவடிக்கைகள் தாமதமாவதாகவும் கூறியிருக்கிறார்.
‘நீதி கிடைக்காமல் செய்யும் பா.ஜ.க மூத்த உறுப்பினர்கள்’
மேலும், 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது ராஜபாளையம் தொகுதியை மேம்படுத்தும் பொறுப்பும் அந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வாக்குறுதியும் தனக்கு அளிக்கப்பட்டதாகவும், தான் ராஜபாளையம் மக்களுக்காக அர்ப்பணிப்புணர்வுடன் வேலை பார்த்து, கீழ்மட்ட அளவில் பா.ஜ.கவை வளர்த்தெடுத்ததாகவும் தனது அறிக்கையில் கூறியுள்ள கௌதமி, கடைசி நேரத்தில் தனக்குத், தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்.
“இருந்தபோதும் கட்சிக்கு அர்ப்பணிப்புணர்வுடன் இருந்தேன். ஆனால், 25 ஆண்டுகளாக கட்சிக்கு விசுவாசமாக இருந்தும் எனக்கு ஆதரவில்லாததும் எனக்கு நீதி கிடைக்காமல் செய்வதில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அழகப்பனுக்கு ஆதரவாக இருப்பதும் என்னை அதிரவைத்திருக்கிறது. முதலமைச்சர், காவல்துறை, நீதித் துறை ஆகியவை எனக்கு நீதியைப் பெற்றுத்தரும் என நம்புகிறேன்,” என்று கூறியிருக்கிறார்.
மேலும் “மிகுந்த வலியுடனும் வருத்தத்துடனும் இந்த ராஜினாமா கடிதத்தை எழுதுகிறேன்," என்று தனது அறிக்கையில் அவர் கூறியிருக்கிறார்.
கௌதமி கொடுத்த புகாரின் பின்னணி என்ன?
சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சி. அழகப்பன். இவருடைய மனைவி நாச்சாள். கடந்த செப்டம்பர் மாதம் கௌதமி இவர்கள் மீது ஒரு புகாரை அளித்தார். அதில் அழகப்பன் குடும்பத்தினர் தன்னுடைய சொத்துகளை அபகரித்திருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
கௌதமி திரைத்துறையில் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து அவருடைய தாயார் டி. வசுந்தரா தேவி ஸ்ரீ பெரும்புதூரில் 46 ஏக்கர் நிலத்தை வாங்கியிருந்தார். 2004-இல் கௌதமி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தச் சொத்துகளை விற்பதற்கான அதிகாரத்தை சி. அழகப்பனுக்கு அவர் அளித்தார். ஆனால், விரைவிலேயே நிலத்தின் உரிமையாளர் என்ற இடத்தில் அழகப்பனின் மனைவியான நாச்சாளின் பெயரும் இருந்ததை கௌதமி கண்டுபிடித்தார்.
இதையடுத்து, தனது சொத்து ஆவணங்களையும் சொத்துகளையும் திரும்பக் கேட்டபோது அழகப்பன் தன்னையும் தனது மகளையும் மிரட்டியதாகவும் அவரிடமிருந்து தனது சொத்துகளை மீட்டுக்கொடுக்க வேண்டுமென்றும் கௌதமி தனது புகாரில் கூறியிருந்தார்.
இது தொடர்பாக இரண்டு புகார்களை சென்னை நகர காவல்துறையில் அவர் அளித்திருந்தார். இது தொடர்பாக ஆறு பேர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விவகாரத்தில் கட்சிக்குள் தனக்கு ஆதரவில்லையென கௌதமி கருதுகிறார். இந்தப் பின்னணியில்தான் கட்சியிலிருந்து விலகும் முடிவை அவர் எடுத்திருக்கிறார்.
மூன்று மாநிலங்களில் பா.ஜ.க.வுக்குப் பணி செய்த கௌதமி
1997-இல் தனது திருமணத்திற்கு முன்பே பா.ஜ.கவில் இணைந்தார் கௌதமி. அதற்குப் பிறகு அந்தக் கட்சிக்காக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தீவிரப் பிரச்சாரம் செய்தார்.
திருமணமான பிறகு தீவிர அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த அவர், கடந்த சில ஆண்டுகளாக கட்சி விவகாரங்களில் மீண்டும் ஆர்வம் காட்டினார். இதையடுத்து, 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)