ஐபிஎல்: சன்ரைசர்ஸ் அணியை எளிதில் வீழ்த்தி கொல்கத்தா மூன்றாவது முறையாக சாம்பியன்

காணொளிக் குறிப்பு, ஐபிஎல் 2024: கொல்கத்தா சாம்பியன் ஆனது எப்படி?
ஐபிஎல்: சன்ரைசர்ஸ் அணியை எளிதில் வீழ்த்தி கொல்கத்தா மூன்றாவது முறையாக சாம்பியன்

கொல்கத்தாவுக்காக முதல் ஓவரை வீசினார் மிச்சல் ஸ்டார்க். ஸ்டிரைக்கில் நின்றது ஹைதராபாத்தின் அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மா. ஸ்டார்க்கிடம் இருந்து சீரிய 5வது பந்தை அபிஷேக்கால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆபத்தான வீரராக அறியப்பட்ட அபிஷேக்கை வழியனுப்பி வைத்தார் ஸ்டார்க்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட்-ம் முதல் பந்திலேயே டக் அவுட்டாக சன்ரைசர்ஸின் சரிவு உறுதியானது.

டிராவிஸ் ஹெட், அபிஷேக் பேட்டிங்கில் தோல்வி அடைந்தபோது, ஒட்டுமொத்த் சன்ரைசர்ஸ் அணியும் தோல்வி அடைகிறது என்ற ரகசியத்தை கொல்கத்தா அணி கண்டுபிடித்து அந்த அச்சாணிகளை பிடுங்கி சன்ரைசர்ஸ் வண்டியை கவிழ்த்தது.

ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் திரிபாதி 2 பவுண்டரிகளை அடித்து ஆறுதல் அளித்தார். ஸ்டார்க் வீசிய 5வது ஓவரில் அடுத்த சம்பவம் நடந்தது. ஸ்டார்க் வீசிய முதல் பந்தைச் சந்தித்த திரிபாதி ரன் ஏதும் எடுக்காத நிலையில் அவுட் சைட் ஆஃப் ஸ்டெம்பில் சென்ற 2வது பந்தை திரிபாதி பிளிக் ஷாட் அடிக்கவே அது தவறான ஷாட்டாக அமைந்து ஸ்குயர் லெக் திசையில் ராமன்தீப் சிங்கிடம் கேட்சானது. திரிபாதி 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கி, மார்க்ரத்துடன் சேர்ந்தார்.

ஆறாவது ஓவரை அரோரா வீசினார். இந்த ஓவரில் மார்க்ரம 2 பவுண்டரிகளும், நிதிஷ் குமார் ரெட்டி ஒரு சிக்ஸரும் விளாசினர். பவர்ப்ளே ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் சேர்த்தது.

ஏழாவது ஓவரை ஹர்சித் ராணா வீசினார். ராணா வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார் நிதிஷ் குமார். ஆனால், அந்த ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் கீப்பர் குர்பாஸிடம் கேட்ச் கொடுத்து 13 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கிளாசன் களமிறங்கி, மார்க்ரத்துடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆட்டத்தைக் கொண்டு சென்றனர். 10 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது.

ரஸல் 11வது ஓவரை வீச அழைக்கப்பட்டார். ரஸல் வீசிய 2வது பந்தில் மார்க்ரம் பவுன்ஸர் பந்தைச் சரியாக ஆடாமல் தூக்கி அடிக்கவே ஸ்டார்க்கிடம் கேட்சாகி 20 ரன்களில் விக்கெட்டை இழந்தார். சன்ரைசர்ஸ் அணி 5வது விக்கெட்டை இழந்து தடுமாறியது. அடுத்து வந்த ஷாபாஸ் அகமது வந்தவுடன் ரஸல் பந்துவீச்சில் சிக்ஸர் விளாசி அதிரடியாகத் தொடங்கினார்.

தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 12வது ஓவரை வீசினார். வருண் வீசிய முதல் ஓவரில் ஷாபாஸ் அகமது ஃபைன் லெக் திசையில் நரைனிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்னில் வெளியேறினார். அடுத்து இம்பாக்ட் ப்ளேயர் அப்துல் சமது களமிறங்கினார்.

ரஸல் வீசிய 13வது ஓவரில் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. ரஸல் வீசிய ஓவரில் 4வது பந்தில் விக்கெட் கீப்பர் குர்பாஸிடம் கேட்ச் கொடுத்து அப்துல் சமத் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து சன்ரைர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் களமிறங்கி, கிளாசனுடன் சேர்ந்தார்.

வருண் வீசிய 14வது ஓவரில் கம்மின்ஸ் பவுண்டரி அடித்து ரன்ரேட்டை உயர்த்த முயன்றார். இருவரையும் பிரிக்க ராணா பந்துவீச அழைக்கப்பட்டார். ஏற்கெனவே ராணா முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்திய நிலையில் 2வது ஓவரை வீசினார். ராணா வீசிய 15வது ஓவரின் முதல் பந்து ஸ்லோவர் பாலாக அமையவே, அதை கிளாசன் வேகமாக அடிக்கவே பந்து பேட்டில் பட்டு ஸ்டெம்பில் அடித்து போல்டானது. கிளாசன் 16 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய விக்கெட்டான கிளாசனை இழந்து 8 விக்கெட் இழப்புக்கு 90 ரன்களுடன் திணறியது.

அடுத்து உனத்கட் களமிறங்கி, கேப்டன் கம்மின்ஸுடன் சேர்ந்தார். இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய நரைன் பந்துவீச அழைக்கப்பட்டார். நரைன் வீசிய 16வது ஓவரில் கம்மின்ஸ் அடித்த ஷாட்டை லாங் ஆன் திசையில் ஸ்டார்க் கேட்ச் பிடிக்க தவறவிட்டார்.

நரைன் 18வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய உனத்கட், கால்காப்பில் வாங்கி 4 ரன்னில் ஆட்டமிழந்தார். 19வது ஓவரை ரஸல் வீசினார். 3வது பந்தில் கம்மின்ஸ் தூக்கி அடிக்க ஸ்டார்க்கிடம் கேட்சாகவே 24 ரன்னில் ஆட்டமிழந்தார். சன்ரைசர்ஸ் அணி 113 ரன்களில் இறுதிப்போட்டியில் ஆட்டமிழந்தது.

ஐபிஎல் இறுதிப்போட்டி வரலாற்றில் ஒரு அணி சேர்த்த குறைந்தபட்ச ஸ்கோர் இது. இதற்கு முன் குறைந்தபட்ச ஸ்கோர் 125 ஆக இருந்தது, அதைவிட மோசமாக சன்ரைசர்ஸ் அணி 113 ரன்களில் சுருண்டது.

ஹைதராபாத்தால் பந்துவீச்சிலும் பதில் தாக்குதலை தொடுக்க முடியவில்லை.

முழு விவரம் காணொளியில்...

KKR vs SRH

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)