கங்கனாவை முதல்முறையாக வெளிப்படையாக எச்சரித்த பாஜக- அவர் கூறிய சர்ச்சை கருத்து என்ன?

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கங்கனா ரனாவத்தின் சமீபத்திய கருத்தில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டது பாஜக. கங்கனாவை எச்சரித்த அக்கட்சி இது போன்ற கொள்கை தொடர்பான விவகாரங்களில் கருத்து தெரிவிக்க அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர் பாலிவுட் நடிகை கங்கனா ரானவத். சமீபத்தில் செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அதனை வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தோடு இணைத்து பேசியுள்ளார்.

அமெரிக்கா, சீனா உள்ளிட்ட அந்நிய சக்திகள் இந்தியாவில் வேலை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

கங்கனா ரனாவத்திற்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்திருக்கும் பாஜக, இனிமேல் அவர் இது போன்ற கருத்துகளை வெளியிடக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

பாஜகவின் மத்திய ஊடகத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் விவசாயிகள் போராட்டம் தொடர்பான கங்கனா ரனாவத்தின் கருத்து கட்சியின் கருத்தல்ல என்று குறிப்பிட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கங்கனா கூறியது என்ன?

கங்கனா ஒரு பாலிவுட் நடிகை. அவரின் கருத்துகளால் பல முறை சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாஜக இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கியது.

தேர்தலில் வெற்றி பெற்ற அவர் முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரானார்.

சமீபத்தில் செய்திதாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நம் நாட்டின் தலைவர் பலமாக இல்லையென்றால் வங்கதேசத்தில் நடைபெற்றது இங்கே (இந்தியாவில்) நடக்க நீண்ட காலம் ஆகாது என்று கூறியிருந்தார்.

வங்கதேசத்தில் நடைபெற்ற போரட்டத்தையும் அதன் பின்னால் அங்கே ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையும், இந்தியாவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்துடன் ஒப்பீட்டு பேசிய அவர், "இங்கு விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. அங்கு இறந்தவர்களின் உடல்கள் தொங்கிக் கொண்டிருந்தன. பாலியல் வன்கொடுமை அரங்கேறியது...," என்று கூறினார்.

வங்கதேசத்தில் நடைபெற்றது போன்று இங்கேயும் நிகழ்த்த விவசாயிகள் மத்தியில் நீண்ட ஒரு திட்டம் இருந்தது என்றும் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட அந்நிய சக்திகள் இங்கே வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றன என்றும் கங்கனா கூறியிருந்தார்.

கட்சியின் நிலைப்பாடு என்ன?

பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கங்கனாவின் கருத்தில் இருந்து வேறுபடுகிறோம். கட்சி சார்பாக, கட்சியில் கொள்கைகள் தொடர்பான விவகாரங்களில் கருத்து சொல்ல அங்கீகாரமோ அனுமதியோ கங்கனா ரனாவத்துக்கு அளிக்கவில்லை," என்று குறிப்பிட்டிருந்தது.

மேலும், இது போன்ற கருத்துகளை வருங்காலத்தில் வெளியிட வேண்டாம் என்று பாஜக கட்சி கங்கனாவுக்கு வலியுறுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது.

எல்லாருக்கும் எல்லாவற்றையும் கிடைக்க செய்வோம் என்ற கொள்கையை பாஜக பின்பற்றுகிறது என்றும் அந்த அறிக்கையில் பாஜக குறிப்பிட்டுள்ளது.

மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டிருக்கிறார் கங்கனா ரனாவத்.

கங்கனாவின் சர்ச்சைக்குரிய கருத்துகள்

கங்கனா ரனாவத், நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகி முதல்முறையாக டெல்லி சென்ற போது, மொஹாலி விமான நிலையத்தில் இருந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலர் ஒருவர் கங்கனாவை அறைந்ததாகக் செய்திகள் வெளியானது.

குல்விந்தர் கவுர் என்ற அந்த காவலர், விவசாயிகள் போராட்டத்தின் போது கங்கனா ரனாவத் வெளியிட்ட கருத்துகளால் அவர் மீது கோபம் அடைந்ததாக தெரிவித்திருந்தார்.

கங்கனா கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகள் என்னென்ன?

விவசாயிகள் போராட்டம்

2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் மஹிந்தர் கவுர் என்ற 88 வயதான பெண் விவசாயி ஒருவரின் வீடியோவை பிபிசி வெளியிட்டிருந்தது. கூன் விழுந்த முதுகுடன் மஹிந்தர் பஞ்சாபில் இருந்து வந்த விவசாயிகளுடன் பேரணியில் கலந்து கொண்டார்.

அவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான பிறகு, ஷாஹீன் பாக் போராட்டத்தை வழி நடத்திய பில்கிஸ் தாதியுடன் ஒப்பிடப்பட்டார்.

பில்கிஸ் மற்றும் மஹிந்தர் கவுர் ஆகியோரின் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில், "இவர் தான் டைம்ஸ் இதழின் செல்வாக்கான 100 நபர்களில் இடம் பெற்ற பாட்டி. வெறும் நூறு ரூபாய்க்கு இவர் கிடைப்பார்," என்று கங்கனா பதிவிட்டிருந்தார்.

கங்கனாவை அறைந்த விமான நிலைய பெண் காவலர் குல்விந்தர், இந்த கருத்தால் தான் கோபம் அடைந்ததாக கூறினார். மேலும் அதே போராட்டத்தில் குல்விந்தரின் அம்மாவும் பங்கேற்றதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

ராகுல் காந்தி குறித்து சர்ச்சை பேச்சு

ஜூலையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிவனைக் குறித்தும், மகாபாரதத்தில் இடம் பெறும் சக்ரவியூகம் குறித்தும் பேசியிருந்தார்.

கங்கனா இது குறித்து பேசும் போது, "என்னென்ன விஷயங்களை இவர் பேசுகிறார்... அவர் போதை வஸ்துகள் ஏதேனும் பயன்படுத்துகிறாரா என்று சோதிக்க வேண்டும்," என்று கூறியிருந்தார்.

அந்த கருத்து தொடர்பான வீடியோ ஒன்றையும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்தார்.

சங்கராச்சாரியார் குறித்து கேள்வி எழுப்பிய கங்கனா

ஜூலை மாதம் சங்கராச்சாரியார் குறித்து கேள்விகளை எழுப்பினார் கங்கனா ரனாவத்.

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அரசியல் கட்சிகளின் பிளவு மற்றும் ஏக்நாத் ஷிண்டே முதல்வரான விவகாரங்கள் குறித்து பேசிய அவர், "அரசியல்வாதிகள் அரசியல் செய்யாமல் பானிப்பூரியா விற்பனை செய்வார்கள்," என்று கேள்வி எழுப்பினார்.

எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்ட அவர், "மகாராஷ்டிர முதல்வரை துரோகி, ஏமாற்றுக்காரர் என்று மரியாதைக்குறைவாக பேசி சங்கராச்சாரியார் நம் அனைவர் மனதையும் புண்படுத்திவிட்டார். இது போன்ற அபத்தமான விவகாரங்களைப் பேசி இந்து மதத்தின் மரியாதைக்கு களங்கம் விளைவித்துவிட்டார் சங்கராச்சாரியார்," என்று குறிப்பிட்டிருந்தார்.

சங்கராச்சாரியாரின் ஆதரவாளர்களும், கங்கனாவின் ஆதரவாளர்களும் வாதத்தில் ஈடுபட்டனர்.

'உண்மையான சுதந்திரம் கிடைத்தது 2014ல்தான்'

2021ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற கங்கனா ரானவத், "1947ம் ஆண்டு ஒரு பிச்சைக்காரரை போன்று இந்தியா சுதந்திரத்தைப் பெற்றது. உண்மையாகவே நாடு விடுதலை அடைந்தது 2014ம் ஆண்டுதான்," என்று கூறினார்.

இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அன்று சுதந்திரம் அடைந்தது. நீண்ட நெடிய போராட்டம் மற்றும் சண்டைகளுக்கு பிறகுதான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.

2014ம் ஆண்டு நரேந்திர மோதி முதன்முறையாக இந்த நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.

கங்கனாவின் இந்த கருத்து கடுமையான விமர்சனத்துக்கு ஆளானது.

நடிகைகள் குறித்து பேசி சர்ச்சை

நடிகைகள் தாப்ஸி பன்னு மற்றும் ஸ்வரா பாஸ்கர் குறித்து கங்கனா வெளியிட்ட கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விவாதத்தை ஏற்படுத்தியது.

தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், கங்கனா அந்த இரண்டு நடிகைளையும் பி-கிரேட் நடிகைகள் என்று குறிப்பிட்டிருந்தார்.

பாஜகவை தாக்கும் எதிர்கட்சியினர்

கங்கனாவின் சமீபத்திய கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பாஜக மீது தங்களின் விமர்சனங்களை வைத்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டத்தில் பெரிய அளவில் பங்கேற்றவர்கள் பஞ்சாபில் இருந்து வந்தவர்கள். பஞ்சாபின் ஆளும் கட்சியாக உள்ளது ஆம் ஆத்மி. அது மட்டுமின்றி, ஹரியாணாவில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் விவசாயிகள் நிறைய கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினெட், செய்தியாளர்கள் சந்திப்பில், ''விவசாயிகள் போராட்டத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவின் பங்கு என்ன என்று பாஜக விளக்க வேண்டும். அது தவறாக இருக்கும் பட்சத்தில் இந்த கருத்துகளை கூறிய பாஜக எம்.பியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்'' என்று கூறினார்.

''இதுநாள் வரையில் விவசாயிகள் குறித்து ஒருவரும் இந்தியாவில் இவ்வாறாக பேசியதில்லை. தங்களின் கருத்து இதுவல்ல என்று கூறி பாஜக இதில் இருந்து அவ்வளவு எளிதாக வெளியேற இயலாது'' என்று கூறினார் அவர்.

கங்கனாவின் கருத்துக்கு முதல்முறையாக வெளிப்படையாக பாஜக எச்சரிக்கை விடுத்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)