கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எஃப் காவலர் பணி இடைநீக்கம் – என்ன நடந்தது?

சண்டிகர் விமான நிலையத்தில் மண்டி மக்களவை உறுப்பினர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த குற்றச்சாட்டின்பேரில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் பெண் காவலர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஏ.என்.ஐ செய்தி முகமையின்படி, இந்த வழக்கை மேலும் விசாரிக்க சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கங்கனா ரனாவத் டெல்லி வரவிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள கங்கனா ரனாவத், தான் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“பாதுகாப்பு சோதனைக்குப் பிறகு நான் இரண்டாவது கேபின் வழியாகச் சென்றபோது சிஐஎஸ்எஃப் காவலராக இருந்த ஒரு பெண் என் முகத்தில் அறைந்தார்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏன் இப்படிச் செய்தீர்கள் எனக் கேட்டதற்கு, தான் விவசாயிகள் இயக்கத்தை ஆதரிப்பதாக அந்தப் பெண் பதில் கூறியதாக கங்கனா தெரிவித்துள்ளார்.

மேலும், தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஆனால் பஞ்சாபில் அதிகரித்து வரும் "தீவிரவாதத்தை எப்படிச் சமாளிப்பது என்று கவலை கொண்டுள்ளதாகவும் கங்கனா வீடியோவில் கூறியுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சிஐஎஸ்எஃப் காவலர் இடைநீக்கம்

கங்கனா ரனாவத்தை அறைந்ததாகக் கூறப்படும் காவலரின் பெயர் குல்விந்தர் கவுர். குல்விந்தரின் சகோதரர் ஷேர் சிங் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், குல்விந்தர் சண்டிகர் விமான நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாகப் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் 15-16 ஆண்டுகளாக சிஐஎஸ்எஃப்-இல் பணிபுரிவதாகவும் தெரிவித்தார்.

ஷேர் சிங் அனைத்திந்திய கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியுடன் தொடர்புடையவர். இதுகுறித்து பிடிஐ செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியில், குல்விந்தர் கவுர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அரசியல் எதிர்வினைகள்

இந்தச் சம்பவம் குறித்துப் பேசியுள்ள ஹரியாணா முதல்வர் நையப் சைனி சிங், பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்ட ஓர் ஊழியர் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்வது துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ளார்.

ஹரியாணா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் கர்னால் தொகுதி மக்களவை உறுப்பினருமான மனோகர் லால் கட்டார், இந்தச் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது எனத் தெரிவித்துள்ளார்.

“பாதுகாப்பு அமைப்புகளின் பணி பாதுகாப்பு கொடுப்பது. அவர்கள் தங்கள் வேலையைச் செய்ய வேண்டும். பொது மக்களின் உணர்வுகளுடன் அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. சிஐஎஸ்எஃப் துறைரீதியான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்,” என்றார்.

மண்டி தொகுதியில் இருந்து கங்கனாவிடம் தோல்வியடைந்த காங்கிரஸ் தலைவர் விக்ரமாதித்ய சிங், “இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, இது யாருக்கும், குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒரு பெண்ணுக்கு நடக்கக்கூடாது. விவசாயிகள் போராட்டம் குறித்து புகார்கள் வந்தாலும், ஒருவரை இப்படி அடிப்பது துரதிர்ஷ்டவசமானது,” என்று கூறியுள்ளார்.

மேலும், இந்தச் செயலைக் கண்டிப்பதாகவும் இதற்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகள் குறித்த கங்கனாவின் சர்ச்சைக் கருத்து

கடந்த 2020ஆம் ஆண்டில், மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் நடத்திய ஓராண்டு போட்டத்தின்போது கங்கனா கூறிய கருத்துகள் சர்ச்சையாகின.

செப்டம்பர் 2020இல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைப் பற்றி கங்கனா பதிவிட்ட ஒரு ட்வீட்டில், “கலவரத்திற்கு வழிவகுத்த, சிஏஏ பற்றித் தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்பிய அதே நபர்கள், இப்போது வேளாண் சட்டங்கள் பற்றியும் தவறான தகவல்களைப் பரப்புகிறார்,” என்று குறிப்பிட்டார்.

மேலும், “அவர்கள் நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்குகிறார்கள். அவர்கள் ‘பயங்கரவாதிகள்” என்றும் கூறினார்.

இந்தக் கருத்து சர்ச்சையானதைத் தொடர்ந்து, கங்கனா மீண்டும் ட்வீட் செய்து, விவசாயிகளை தான் ‘பயங்கரவாதிகள்’ எனக் குறிப்பிட்டதாக யாராவது நிரூபித்தால் தனது ட்விட்டர் கணக்கையே நீக்கிவிடுவதாகத் தெரிவித்தார்.

வேளாண் மசோதா குறித்து வதந்தி பரப்புபவர்களையே தான் ‘பயங்கரவாதிகள்’ என்று அழைத்ததாகவும், விவசாயிகளை அல்ல என்றும் கங்கனா தனது பதிவில் தெரிவித்திருந்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)