இயற்பியலுக்கான நோபல் பரிசு கூட்டாக 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு - மூவரும் சாதித்தது என்ன?

நோபல் பரிசு யாருக்கு?

பட மூலாதாரம், DETLEV VAN RAVENSWAAY/SCIENCE PHOTO LIBRARY

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒளியில் மிகக் குறுகிய, கண நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்வது குறித்த ஆய்வுக்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது ஆய்வு தான் எலக்ட்ரான்கள் குறித்து புரிந்து கொள்வதற்கான கதவுகளை திறந்துள்ளது.

பியர்ரி அகோஸ்டினி, ஃபெரன்க் கிரௌஸ், ஆன்னி எல் ஹூய்லியர் ஆகிய 3 விஞ்ஞானிகள் இயற்பியலுக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.

அணுக்களுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதை பதிவு செய்யவும், புரிந்ந்து கொள்ளவும் உதவக் கூடிய மிகமிகக் குறுகிய அதிர்வு கொண்ட ஒளியை உருவாக்குவது எப்படி என்பதை அவர்களது ஆய்வு செய்து காட்டியது.

மூவருக்கும் கூட்டாக இந்திய மதிப்பில் சுமார் 8.26 கோடி ரூபாய் பரிசாக கிடைக்கும்.

நோபல் பரிசு யாருக்கு?

பட மூலாதாரம், Getty Images

கோவிட் தொற்றுநோய்க்கான எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளை கண்டுபிடிக்க வழிவகுத்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய இரண்டு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர் கேட்டலின் கரிகோ மற்றும் டாக்டர் ட்ரூ வேஸ்மேன் ஆகியோர் இதைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

இந்தத் தொழில்நுட்பம் பெருந்தொற்றுப் பேரிடருக்கு முன்பு சோதனை கட்டத்திலேயே இருந்தது. ஆனால், தற்போது அது உலகம் முழுக்கப் பல கோடி உயிர்களைக் காப்பாற்றி வருகிறது.

கோவிட் தொற்றுநோய்க்காக உருவாக்கப்பட்ட இந்த எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பம் தற்போது புற்றுநோய் உட்படப் பல்வேறு நோய்களுக்கும் பலன் தருமா என்பது குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன.

வைரஸ், பாக்டீரியா போன்ற அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு எதிர்செயலாற்ற நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தயார்படுத்தும் வேலையை தடுப்பூசிகள் செய்கின்றன.

கோவிட் தடுப்பூசி உருவாக்க உதவிய விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

பட மூலாதாரம், The Nobel Prize

பாரம்பரிய தடுப்பூசி தொழில்நுட்பமானது அசல் வைரஸ் அல்லது பாக்டீரியாவின் இறந்த அல்லது பலவீனமான பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டது.

அதற்கு மாறாக, mRNA தடுப்பூசிகள் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையைப் பயன்படுத்துகின்றனர்.

கோவிட் பேரிடரின்போது உருவாக்கப்பட்ட, மாடர்னா, ஃபைசர்/பயோஎன்டெக் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை.

தடுப்பூசி ஒரு குறிப்பிட்ட நோய்க்கிருமிக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கத் தூண்டுகிறது. இது பிற்கால வெளிப்பாட்டின்போது நோய்க்கு எதிராக எதிர்செயலாற்ற நம் உடலுக்கு ஒரு தொடக்கத்தைக் கொடுக்கிறது.

எந்தெந்த தேதிகளில் என்னென்ன நோபல் பரிசுகள் வழங்கப்படும்?

கோவிட் தடுப்பூசி உருவாக்க உதவிய விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

பட மூலாதாரம், Getty Images

  • மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இனி அடுத்தடுத்து அக்டோபர் 9ஆம் தேதி வரை வெவ்வேறு துறைகளில் நோபல் பரிசு வழங்கப்படும்.
  • அக்டோபர் 4ஆம் தேதியன்று, இந்திய நேரப்படி மதியம் 3:15 மணிக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும்.
  • அக்டோபர் 5ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும்.
  • அக்டோபர் 6ஆம் தேதி, மதியம் 2:30 மணிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும்.
  • அக்டோபர் 9ஆம் தேதியன்று, மதியம் 3:15 மணிக்கு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும்.

நோபல் பரிசு வென்றவர்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்?

நோபல் பரிசு வென்றவர்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்?

இந்த ஆண்டு நோபல் பரிசு வெல்பவர்களுக்கு கூடுதலாக சுமார் எழுபது லட்சம் ரூபாய் கொடுக்கப்படும். இந்த ஆண்டு பரிசு பெறுவோர் மொத்த வெகுமதியாக 8 கோடியே 20 லட்சம் ரூபாய் பெறுவார்கள் என்று நோபல் விருதுகளை நிர்வகிக்கும் நோபல் அறக்கட்டளை கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் பரிசுத் தொகை சரி செய்யப்பட்டு வருகிறது. மேலும், அறக்கட்டளையின் வலுவான நிதி நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த ஆண்டு தொகையின் அளவை அதிகரிப்பதாக விருது வழங்குவோர் தெரிவித்தனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)