வைபவ் சூர்யவன்ஷி: 14 வயதில் உலக கிரிக்கெட்டை திரும்பிப் பார்க்க வைத்த விவசாயி மகன்

ஐபிஎல், பிசிசிஐ, சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ், கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐபிஎல் ஏலத்தில் வைபவ் சூர்யவன்ஷி வாங்கப்படும்போது அவருக்கு 13 வயதுதான்
    • எழுதியவர், க. போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

வைபவ் சூர்யவன்ஷி. 14 வயது 23 நாட்களில் ஐபிஎல் டி20 தொடரில் அறிமுகம், தான் சந்தித்த முதல் பந்திலேயே சர்வதேச பந்துவீச்சாளரான ஷர்துல் தாக்கூரின் பந்தில் சிக்ஸர், முதல் ஆட்டத்தில் சேர்த்த 34 ரன்களில் 26 ரன்கள் சிக்ஸர், பவுண்டரிகளாக சேர்த்து ஆட்டமிழந்தபோது கண்ணீருடன் பெவிலியன் நோக்கிச் சென்றார் அந்தச் சிறுவன்.

ஆனால் நேற்று (ஏப்ரல் 28) 17 பந்துகளில் அரைசதம், 35 பந்துகளில் சதம் அடித்து ஐபிஎல் தொடரில் உச்சம் தொட்டு ஆட்டமிழந்தபோது, எதிரணி வீரர்கள் (குஜராத் டைட்டன்ஸ்) அனைவரும் கை கொடுத்து, தலையிலும், தோளிலும் தட்டிக் கொடுத்து வழியனுப்பினர். அரங்கமே எழுந்து நின்று கரகோஷத்தோடு அந்தச் சிறுவனுக்கு வரவேற்பு கொடுத்தது.

13 வயதில் ஐபிஎல் அறிமுகம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஐபிஎல் ஏலத்தில் ரூ.1.10 கோடிக்கு போட்டி போட்டு வாங்கப்பட்ட சூர்யவன்ஷிக்கு அடிப்படை விலையாக ரூ.35 லட்சம்தான் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவரின் பேட்டிங் திறமையைப் பார்த்து டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் போட்டியிட்டபோது ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் வாங்கியது.

ஐபிஎல், பிசிசிஐ, சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ், கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த வருடம் துபையில் நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூர்யவன்ஷி

ஐபிஎல் ஏலத்தில் வைபவ் சூர்யவன்ஷி வாங்கப்படும்போது அவருக்கு 13 வயதுதான். 13 வயது சிறுவனை ஏலத்தில் எடுத்து ராஜஸ்தான் அணி என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி பலதரப்பிலும் எழுந்தது.

ஆனால், 13 வயது சிறுவன் சூர்யவன்ஷிக்கு இப்படியொரு அபாரமான பேட்டிங் திறமை ஒளிந்திருப்பதைக் கண்டறிந்து அவரைக் காத்திருந்து தூக்கியது ராஜஸ்தான் அணி.

உலக கிரிக்கெட்டின் கவனம்

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயித்த 210 ரன்கள் இலக்கை 15.5 ஓவர்களில் சேஸ் செய்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் சூர்யவன்ஷியின் மிரட்டலான சதம்தான்.

ஜெய்ஸ்வாலுடன் முதல் விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்தபோதே ஏறக்குறைய ராஜஸ்தான் வெற்றியை உறுதி செய்து கொடுத்துவிட்டு 38 பந்துகளில் 101 ரன்கள் (11 சிக்ஸர், 7 பவுண்டரிகள்) எடுத்து சூர்யவன்ஷி ஆட்டமிழந்தார். 265 ஸ்ட்ரைக் ரேட்டில் சூர்யவன்ஷி பேட் செய்தார்.

சூர்யவன்ஷி நேற்றைய ஒரே ஆட்டத்தில் உலக கிரிக்கெட்டின் கவனத்தைத் தன்மீது குவியச் செய்துவிட்டார். உலகளவில் விளையாடப்படும் டி20 லீக் தொடர்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர் மிகவும் பிரபலமானது. அதில் 14 வயது சிறுவன் 35 பந்துகளில் அடித்த சதம் உலக கிரிக்கெட்டை ஈர்த்துள்ளது.

வின்டேஜ் நினைவுகள்

ஐபிஎல், பிசிசிஐ, சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ், கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டி20 போட்டியில் மிக இளம் வயதில் 50 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி பெற்றார்

சர்வதேச அளவில் 100 டெஸ்ட்களுக்கும் மேல் ஆடிய அனுபவமுள்ள இஷாந்த் ஷர்மா ஓவரில் 28 ரன்கள், ஆப்கானிஸ்தான் வீரர் கரீம் ஜனத் (நேற்றுதான் அறிமுகமானார்) ஓவரில் 30 ரன்கள் மற்றும் 1000 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய ரஷித் கான் ஓவரில் பெரிய சிக்ஸரை விளாசித்தான் சூர்யவன்ஷி சதத்தையே எட்டினார்.

குஜராத் அணியின் 7 சர்வதேச பந்துவீச்சாளர்களையும் சூர்யவன்ஷி ஓடவிட்டு அவருக்கு யார் பந்துவீசுவது என்ற குழப்பத்தை ஏற்படுத்தினார்.

வின்டேஜ் மேற்கிந்தியத் தீவுகள் பேட்டர்களின் பேட்டிங்கை பார்த்த நினைவுகளும், பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் அப்துல் காதிரின் பந்துவீச்சை சச்சின் டெண்டுல்கர் இளம் வயதில் வெளுத்த நினைவுகளும் நேற்று சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பார்த்தபோது ஏற்பட்டது.

வைபவ் சூர்யவன்ஷி டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் டி20 தொடரிலும் ஏராளமான சாதனைகளைச் செய்துள்ளார்.

சூர்யவன்ஷியின் சாதனைகள்

உலக டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் 14 வயது 32 நாட்களில், 35 பந்துகளில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றார். இதற்கு முன் விஜய் ஜோல் (18 வயது, 118 நாட்கள்) வைத்திருந்த சாதனையையும் சூர்யவன்ஷி முறியடித்தார்.

ஐபிஎல் தொடரில் அதிவிரைவாகவும், இளம் வயதிலும் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை சூர்யவன்ஷி பெற்றார். இதற்கு முன் யூசுப் பதான் 37 பந்துகளில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 2010இல் சதம் அடித்திருந்தார். அதையும் அவர் தற்போது முறியடித்துள்ளார்.

ஐபிஎல், பிசிசிஐ, சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ், கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

ஐபிஎல் டி20 தொடரில் அதிவேகமாக சதம் அடித்த வகையில் கிறிஸ் கெயிலுக்கு (30 பந்துகள்) அடுத்ததாக 35 பந்துகளில் சதம் அடித்த 2வது வீரராக சூர்யவன்ஷி இடம் பெற்றார்.

டி20 போட்டியில் மிக இளம் வயதில் 50 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி பெற்றார். இதற்கு முன் ஆப்கன் வீரர் முகமது நபியின் மகன் ஹசன் இஷகில் 15 வயது 360 நாட்களில் அரைசதம் அடித்திருந்ததுதான் சாதனையாக இருந்தது.

சூரியவன்ஷி 17 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் ராஜஸ்தான் அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

சூர்யவன்ஷி நேற்றைய ஐபிஎல் (ஏப்ரல் 28) ஆட்டத்தில் மட்டும் 11 சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் ஐபிஎல் டி20 தொடரில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்களை விளாசிய தமிழக வீரர் முரளி விஜயின் சாதனையைச் சமன் செய்தார். சூர்யவன்ஷி நேற்று அடித்த சதத்தில் 93 சதவீத ரன்கள் பவுண்டரி, சிக்ஸர் மூலமே கிடைத்தன.

ஐபிஎல் தொடரில் இளம் வயதில் சதம் அடித்த வீரர்களில் 4வது வீரராக வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்றார். இளம் வயதில் சதம் அடித்தவர்களில் மணிஷ் பாண்டே (19 வயது, 253 நாட்கள்), ரிஷப் பந்த் (20 வயது 218 நாட்கள்), தேவ்தத் படிக்கல் (20 வயது 289 நாட்கள்) இவர்கள் வரிசையில் சூர்யவன்ஷி உள்ளார்.

யார் இந்த சூர்யவன்ஷி?

ஐபிஎல், பிசிசிஐ, சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ், கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வைபவ் சூர்யவன்ஷி

பிகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் இருந்து 100 கி.மீ தொலைவில் இருக்கும் சமஸ்திபூர் மாவட்டத்தில் மோதிபூர் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் வைபவ் சூர்யவன்ஷி.

கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி சூர்யவன்ஷி பிறந்தார். இவரின் தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி ஒரு விவசாயி. தனது மகனின் கிரிக்கெட் கனவுக்காகத் தனக்கு இருந்த நிலத்தையும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விற்று, அந்தக் கனவுகளை நனவாக்க உழைத்தவர்.

சஞ்சீவ் சூர்யவன்ஷி பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "சூர்யவன்ஷி என் மகன் மட்டுமல்ல, பிகார் மாநிலத்தின் மகன். என் மகன் கடினமான உழைப்பாளி, 8 வயதிலேயே கிரிக்கெட் மீது தீவிரமாக இருந்தார்.

எட்டு வயதிலேயே மாவட்ட அளவில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிக்கு சூர்யவன்ஷி தேர்வானார். 12 வயதிலேயே ரஞ்சிக் கோப்பையில் ஆடினார். என் மகனின் கனவை நனவாக்க என் நிலத்தையே விற்றேன்" என்று தெரிவித்தார்.

விவிஎஸ் லட்சுமண், திராவிட் பார்வை

ஐபிஎல், பிசிசிஐ, சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ், கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'ஐபிஎல் தொடரில் ராகுல் திராவிட் தலைமையின் கீழ் சென்ற பிறகு சூர்யவன்ஷியின் பேட்டிங் திறமை பன்மடங்கு மெருகேறியது'

கடந்த 2023-24 ரஞ்சிக் கோப்பை தொடரில் பிகார் அணிக்காக 12 வயது 284 நாட்கள் ஆகியிருந்தபோது வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாகி விளையாடினார். வினூமன்கட் கோப்பையில் பங்கேற்ற சூர்யவன்ஷி 5 இன்னிங்ஸ்களில் 96 ரன்களை விளாசினார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான சாலஞ்சர் முத்தரப்பு தொடரில் இங்கிலாந்து, வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமானார்.

இந்தத் தொடர்தான் சூர்யவன்ஷியை திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தத் தொடரில் சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பார்த்து விவிஎஸ் லட்சுமண் மெய்சிலிர்த்துப் போனார்.

அதன் பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 19 வயதுக்கு உட்பட்டோர் 4 நாட்கள் ஆட்டத்தில் 58 பந்துகளில் சூர்யவன்ஷி அடித்த சதம், ராஜஸ்தான் அணியைக் காந்தம் போல் ஈர்த்தது. இந்த ஆட்டத்துக்குப் பிறகு சூர்யவன்ஷியை எப்படியாவது ஐபிஎல் ஏலத்தில் வாங்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு இறங்கி, இவரை வாங்கியது ராஜஸ்தான் அணி.

ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் திராவிட்டிடம் வைபவ் சூர்யவன்ஷியின் திறமையைக் கூறி அவரை ஏலத்தில் எடுக்கக் கோரியது விவிஎஸ் லட்சுமண்தான்.

சூர்யவன்ஷியை ஏலத்தில் எடுத்த பிறகு ராஜஸ்தான் அணியின் தலைமை செயல் அதிகாரி ஜேக் லஷ் மெக்ரம் கூறுகையில், "நாக்பூரில் உள்ள எங்கள் உயர் பயிற்சி மையத்துக்கு சூர்யவன்ஷியை அனுப்புகிறோம். அங்கு எங்களுடைய பயிற்சி அவரை மேலும் சிறப்பாக்கும்.

சூர்யவன்ஷி அற்புதமான திறமை கொண்டவர், அவரைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி, ஐபிஎல் விளையாட நம்பிக்கையளிக்க வேண்டும். வரும் மாதங்களில் சூர்யவன்ஷிக்கு தீவிரமான பயிற்சியளிப்போம். அவரது திறமையை மெருகேற்றுவோம். எங்கள் அணிக்கு சூர்யவன்ஷி வந்தது உற்சாகமளிக்கிறது" எனத் தெரிவித்தார்.

விவிஎஸ் லட்சமணின் பரிந்துரை

ஐபிஎல், பிசிசிஐ, சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ், கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சூர்யவன்ஷி நேற்றைய ஐபிஎல் (ஏப்ரல் 28) ஆட்டத்தில் மட்டும் 11 சிக்ஸர்களை விளாசினார்

வைபவ் சூர்யவன்ஷியின் பயிற்சியாளர் மனோஜ் ஓஜா ஸ்போர்ட்ஸ்டார் தளத்துக்கு அளித்த பேட்டியில், "வைபவ் சூர்யவன்ஷி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான முத்தரப்புத் தொடரில் விளையாடியபோது அவரது ஆட்டத்தைப் பார்த்த விவிஎஸ் லட்சுமண் மெய்சிலிர்த்துவிட்டார். அவர்தான் ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் திராவிட்டிடம் கூறி ஏலத்தில் சூர்யவன்ஷியை எடுக்குமாறு பரிந்துரைத்தார். முதல் ஆட்டத்தில் 36 ரன்களில் சூர்யவன்ஷி ஆட்டமிழந்து வந்தபோது அழுதுகொண்டே பெவிலியன் திரும்பினார்.

இதைப் பார்த்த விவிஎஸ் லட்சுமண், சூர்யவன்ஷியியிடம் சென்று அழுகையைத் தேற்றிவிட்டு, இங்கு யாரும் உன்னுடைய ரன்களை பார்க்கவில்லை, நீண்டகாலத்திற்கு விளையாடக்கூடிய ஒரு வீரரின் திறமையைப் பார்க்கிறார்கள் என்றார்" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "சூர்யவன்ஷியின் திறமையை விரைவாக லட்சுமண் புரிந்துகொண்டார், பிசிசிஐ அமைப்பும் சூர்யவன்ஷிக்கு ஆதரவு அளித்தது. சூர்யவன்ஷியின் தந்தை ஒரு விவசாயி. மகனின் கிரிக்கெட் பயிற்சிக்காக தினமும் என் பயிற்சி மையத்துக்கு அழைத்து வருவார்.

காலை 7.30 மணிக்கு பயிற்சியைத் தொடங்கும் வைபவ், மாலை வரை தொடர்ந்து பேட்டிங்கில் ஈடுபடுவார். கடந்த 4 ஆண்டுகளாக சூர்யவன்ஷிக்கு பயிற்சி அளித்து வருகிறேன். சூர்யவன்ஷியின் எதிர்காலத்துக்காக பெற்றோர் அதிக தியாகம் செய்துள்ளனர்.

சூர்யவன்ஷியின் தாயார் அதிகாலை 4 மணிக்கு எழுந்து உணவு தயாரித்துக் கொடுத்த அனுப்புவார். எங்கு போட்டி நடந்தாலும் சூர்யவன்ஷியுடன் அவரின் தந்தையும் வருவார். சூர்யவன்ஷி தந்தையும் கிரிக்கெட் விளையாட விரும்பினார். அவரின் காலத்தில் குடும்பச் சூழலால் முடியவில்லை, தனது கனவை மகன் மூலம் நிறைவேற்றினார்" என்று கூறினார்.

'சூர்யவன்ஷியை ஒரு கட்டத்தில் மறுத்த பிசிசிஐ'

ஐபிஎல், பிசிசிஐ, சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ், கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

"பிகார் மாநிலத்தில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்குச் சரியான ஆதரவு இருக்காது என்பது தெரியும். இதனால் பிசிசிஐ அமைப்பும் ஒரு கட்டத்தில் இவரைக் கவனிக்க மறந்துவிட்டது, சூர்யவன்ஷிக்கு இது அதிர்ச்சியாக இருந்தது" என்று கூறியுள்ளார் அவரது பயிற்சியாளர் மனோஜ் ஓஜா.

"இதனால் உடனடியாக சூர்யவன்ஷியை வேறு மாநிலத்துக்கு விளையாட வைக்க முடிவு செய்தேன். பல மாநிலங்களில் ரஞ்சி அணியை அணுகி சூர்யவன்ஷிக்காக வாய்ப்பு தேடினேன். வேறு மாநிலத்துக்காக சூர்யவன்ஷி ஆடினால் நிச்சயம் பார்க்கப்படுவார், வளர்க்கப்படுவார், ஆதரவு கிடைக்கும் என நம்பினேன்.

ஐபிஎல் தொடரில் ராகுல் திராவிட் தலைமையின் கீழ் சென்ற பிறகு சூர்யவன்ஷியின் பேட்டிங் திறமை பன்மடங்கு மெருகேறியது. சிறப்பான பயிற்சியை திராவிட் அளித்து வருகிறார். சக வீரர்களும் சூர்யவன்ஷியை உற்சாகப்படுத்துகிறார்கள். நிச்சயமாக சூர்யவன்ஷிக்கு இது புதிய அனுபவமாக இருக்கும். விவிஎஸ் லட்சமணுடன் சந்திப்பு, ராகுல் திராவிட் பயிற்சி சூர்யவன்ஷிக்கு பெரிய எதிர்காலத்தை அளித்துள்ளது" எனத் தெரிவித்தார்.

அடுத்து வரவுள்ள முக்கிய ஆட்டங்கள்

இன்றைய ஆட்டம்

  • டெல்லி கேபிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • இடம்: டெல்லி
  • நேரம்: இரவு 7.30
  • சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்

சிஎஸ்கே-வின் அடுத்த ஆட்டம்

  • சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
  • நாள் - ஏப்ரல் 30
  • இடம் – சென்னை
  • நேரம்- இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

  • மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • நாள் – மே 1
  • இடம் – ஜெய்பூர்
  • நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

  • ஆர்சிபி vs சிஎஸ்கே
  • நாள் – மே 3
  • இடம் – பெங்களூரு
  • நேரம்- இரவு 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு

  • சாய் சுதர்ஸன் (குஜராத் டைட்டன்ஸ்)- 456 ரன்கள் (9 போட்டிகள்)
  • விராட் கோலி (ஆர்சிபி) 443 ரன்கள் (9 போட்டிகள்)
  • சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்) 427 (10 போட்டிகள்)

நீலத் தொப்பி

  • ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள் (10 போட்டிகள்)
  • பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 17 விக்கெட்டுகள் (9 போட்டிகள்)
  • நூர் அகமது (சிஎஸ்கே) 14 விக்கெட்டுகள் (9 போட்டிகள்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.