மக்கள் தொகை கணக்கெடுப்பு: 1951-க்குப் பிறகு முதன் முறையாக இடம் பெறும் கேள்வி எது தெரியுமா?

    • எழுதியவர், பிரியங்கா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியாவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான 'ரெஃப்ரன்ஸ் டேட்' 2027 மார்ச் முதல் நாள் என்று, இந்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை அன்று (ஜூன் 4) தெரிவித்தது.

இருப்பினும், மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும் என்றோ, எப்போது முடியும் என்றோ குறிப்பிட்ட தேதியை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

மக்கள் தொகை தரவுகளின் அடிப்படையில், 'ரெஃப்ரன்ஸ் டேட்' என்பது தரவைச் சேகரித்து பகுப்பாய்வு செய்வதற்கான குறிப்புப் புள்ளியாகப் பயன்படுத்தப்படும் தேதியாகும். இது மக்கள் தொகை எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்ட தேதி அல்லது பிற மக்கள் தொகை தகவல்கள் தொடர்புடைய தேதியாகும்.

நாட்டில் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படும்.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.

பனிப்பொழிவு இருக்கும் பகுதிகளான ஜம்மு காஷ்மீர், லடாக், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான 'ரெஃப்ரன்ஸ் டேட்' 2026 அக்டோபர் 1 என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரண்டாவது கட்ட கணக்கெடுப்புக்கான குறிப்புத் தேதி மார்ச் 1, 2027.

மக்கள் தொகை கணக்கெடுப்பு என்றால் என்ன?

நாட்டின் வளர்ச்சிக்கும் இங்கு வாழும் மக்களுக்கும், நாட்டில் வாழும் மக்கள் யார் என்பதை அறிந்து கொள்வது முக்கியம். மக்களின் நிலை என்ன, எவ்வளவு பேர் படித்தவர்கள், யார் என்ன செய்கிறார்கள், எத்தனை பேருக்கு சொந்த வீடு உள்ளது, எத்தனை பேருக்கு வீடு இல்லை, அவர்களின் சமூக நிலை என்ன? மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது இந்தத் தரவுகள் அனைத்தையும் சேகரிக்கும் செயல்முறை.

ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது பிராந்தியத்தில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை, பொருளாதார மற்றும் சமூக தரவுகளைச் சேகரித்தல், தொகுத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பொதுவெளியில் வெளியிடுதல் ஆகியவை மக்கள் தொகை கணக்கெடுப்பு எனப்படும்.

மக்களின் வயது, பாலினம், மொழி, மதம், கல்வி, தொழில் மற்றும் வசிப்பிடம் பற்றிய விரிவான தகவல்கள் இந்தக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும். கொள்கை உருவாக்கம் மற்றும் நலத்திட்டங்கள் போன்றவற்றுக்கு இந்தக் கணக்கெடுப்பின் தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் 1872 முதல் தொடங்கிய மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறை சுதந்திர இந்தியாவில் இப்போது வரை தொடர்கிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் தாமதம் ஏன்?

இந்தியாவில், 1948ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம், முழு செயல்முறைக்கும் சட்டக் கட்டமைப்பை வழங்குகிறது.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 1948ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்ட விதிகளின் கீழ் நடத்தப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துகிறது.

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2011ஆம் ஆண்டு, இரண்டு கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021இல் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா பேரிடர் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது சுமார் 6 ஆண்டுகள் தாமதமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி முதல் தேதியன்று சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டில், மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக ரூ.574.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், இதற்காக ரூ.3,768 கோடி ஒதுக்கப்பட்டது.

பட்ஜெட் குறைப்பு குறித்த தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது வழங்கியுள்ளது.

"மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021இல் நடத்தப்படவிருந்தது, கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் நிறைவடைந்தன. ஆனால், நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றுநோய் பரவியதால், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. கோவிட் பேரிடரின் தாக்கம் நீண்ட காலமாகத் தொடர்ந்தது" என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

"கோவிட் தாக்கத்திற்குப் பிறகு உடனடியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்திய நாடுகளில், கணக்கெடுப்பு தரவுகளின் தரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறையை உடனடியாகத் தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது மக்கள் தொகை கணக்கெடுப்பின் குறிப்புத் தேதியான மார்ச் 01, 2027க்குள் நிறைவடையும்."

"மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பட்ஜெட் ஒருபோதும் தடையாக இருந்தது இல்லை. ஏனெனில் அதற்குத் தேவையான நிதி ஒதுக்கப்படுவதை அரசாங்கம் எப்போதும் உறுதி செய்கிறது" என்று எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.

1951-க்குப் பிறகு முதன் முறையாக இடம் பெறும் கேள்வி எது?

மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறையை விரைவாகவும் சுமூகமாகவும் முடிக்க, இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் ஊடகம் மூலம் நடத்தப்படும் என்று தெரிகிறது.

கடந்த 1931ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கேட்கப்பட்ட கேள்விகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளன. ஆனால் 1951 முதல் ஒரு நபரின் சாதி தொடர்பான கேள்வி கேட்கப்படவில்லை.

இருந்தபோதிலும், கணக்கெடுப்பில் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் தொடர்பான தகவல்கள் இருந்தன. பிற சாதிகளைப் பற்றிய தகவல்கள் வழங்கப்படவில்லை.

ஆனால் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், ஒவ்வொரு நபருக்கும் தங்கள் சாதியைத் தெரிவிக்கும் விருப்பம் வழங்கப்படும், இதுவொரு பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது.

சுதந்திரத்திற்குப் பிறகு அல்லது 1931க்கு பிறகு சாதியும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக இருப்பது இதுவே முதல்முறை.

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நீண்ட காலமாகக் கோரி வந்தன. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பும் அடங்கும் என்று இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசு அறிவித்தது.

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு பிரச்னையில் தாக்கம்

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற தொகுதி மறுவரையறை மட்டுமல்ல, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தின்படி, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடானது, தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் நடைமுறைக்கு வரும்.

மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு, தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். பல தென் மாநிலங்கள் மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுவரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், விரிவான கலந்தாலோசனைகள் தேவைப்படலாம்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "தொகுதி மறுவரையறை செயல்பாட்டில் தென் மாநிலங்களின் கவலைகள் கவனிக்கப்படும் என்றும் உரிய நேரத்தில் அனைவருடனும் கலந்தாலோசிக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பலமுறை தெளிவுபடுத்தியுள்ளார்" என்று தெரிவித்தார்.

2029 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா?

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு ஒவ்வொரு முறையும் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் செயல்முறை 1951, 1961 மற்றும் 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.

இந்த விவகாரம் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸின் மூத்த பத்திரிகையாளர் ஷியாம்லால் யாதவ் கூறுகையில், "1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 1976ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்ட போது, வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையே ஒரு பெரிய தகராறு எழுந்தது" என்று கூறினார்.

"தென்னிந்தியாவில் மக்கள் தொகை மெதுவாக அதிகரித்து வந்த அதே நேரத்தில் வட இந்தியாவில் மக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வந்தது. குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களைச் செயல்படுத்தி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதால், தங்கள் மாநிலங்களுக்கு இழப்புகள் ஏற்படுவதாக தென் மாநிலங்கள் கவலைப்பட்டன. ஏனென்றால் மக்களவை மற்றும் சட்டமன்ற இடங்களின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பதில் மக்கள் தொகை ஒரு பெரிய அளவுகோல்" என்று அவர் கூறினார்.

"இந்தத் தகராறால், 1976க்கு பிறகு தொகுதி மறுவரையறை நிறுத்தப்பட்டது. எனவே, இப்போது 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும்" என்று ஷ்யாம்லால் யாதவ் கூறுகிறார்.

"இந்த முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இதுவே புதிய தொகுதி மறுவரையறைக்கு அடிப்படையாக மாறும். 2027ஆம் ஆண்டில், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். இறுதித் தரவுகள் வருவதற்கு நேரம் எடுக்கும்.

எனவே, 2029 மக்களவைத் தேர்தல் வரை இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பால் தற்போதைய நிலையில் மாற்றம் ஏற்படாது. ஆனால் அதன் பிறகு நடைபெறும் தேர்தல்களில், இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு தொகுதி மறுவரையறைக்கான அடிப்படையாக மாறும்" என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு