You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழ்நாட்டிற்கு எதிரான சதி என்று ஸ்டாலின் விமர்சிப்பது ஏன்?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027 மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக, இந்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை அன்று (ஜூன் 4) தெரிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித் திட்டத்தை பா.ஜ.க வெளிப்படையாக அறிவித்துள்ளதாக விமர்சித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழ்நாட்டிற்கு எதிரான சதி என்று ஸ்டாலின் விமர்சிப்பது ஏன்?
இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரும் 2027 ஆம் ஆண்டு இரு கட்டங்களாக நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
பனிப்பொழிவு பகுதிகளாக இருக்கும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், லடாக், இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் 2026 அக்டோபர் 1 முதல் கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948, மக்கள்தொகை கணக்கெடுப்பு விதிகள் 1990 ஆகியவற்றின்படி இவை நடத்தப்பட உள்ளதாக மத்திய அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டம் பிரிவு 3ன்படி வரும் ஜூன் 16 ஆம் தேதியன்று அரசிதழில் வெளியிடப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"முன்பே எச்சரித்தேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், ' 2026 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027 ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது' எனக் கூறியுள்ளார்.
தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே தான் எச்சரித்திருந்ததாகக் கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், 'அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பா.ஜ.க-வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், இதுதொடர்பாக எதுவும் பேசாமல் எடப்பாடி பழனிசாமி அமைதி காக்கிறார்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நியாயமான தொகுதி மறுவரையறை என்னும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்பதாகவும் இதுதொடர்பான விளக்கத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
சதி என ஸ்டாலின் கூறுவது ஏன்?
"மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யும்போது தமிழ்நாட்டுக்கான பிரதிநிதித்துவம் குறையும். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கூடும்" எனக் கூறுகிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன்.
மத்திய அரசின் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை தென்மாநிலங்கள் சிறப்பாக கையாண்டுள்ளதாக பிபிசி தமிழிடம் கூறிய பாலச்சந்திரன், "கணக்கெடுப்புக்குப் பிறகு தொகுதி மறுவரையறை மேற்கொள்ளும்போது தென்மாநிலங்கள் வெகுவாக பாதிக்கும். இதைத் தான் சதி என முதலமைச்சர் குறிப்பிடுகிறார்" என்கிறார்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிந்த பிறகு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.
இந்தியாவில் 1971 ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்டது. அதை அடிப்படையாக வைத்து 1973 ஆம் ஆண்டில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டது. 1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சியில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது.
அதேகாலகட்டத்தில், குடும்ப கட்டுப்பாடு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. இதன் காரணமாக அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறையை மேற்கொள்ளாமல் இருக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.
"வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது (2002) தொகுதி மறுவரையறையை மேலும் 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்தார். தற்போது மக்கள்தொகையைக் கணக்கெடுத்தால் நாடாளுமன்ற தொகுதிகளில் மறுவரையறை செய்யப்படும். இதன் பாதிப்பை உணர்ந்து, மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வகையில் திருத்தம் கொண்டு வரவேண்டும் ஸ்டாலின் கூறுகிறார்" என்கிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன்.
"1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை செயல்படுத்தினால் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்படாது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் சிகாமணி திருப்பதி.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தொகுதி மறுவரையறையின் மூலம் மாநிலத்தின் பிரதிநிதித்துவத்தை குறைப்பது பா.ஜ.க-வின் நோக்கமாக உள்ளது. உத்தரபிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களுக்கு இணையாக தமிழ்நாட்டுக்கு எம்.பி-க்கள் பிரநிதித்துவம் கிடைக்க வாய்ப்பில்லை" எனவும் குறிப்பிட்டார்.
"வட இந்திய மாநிலங்களில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டால், தென்மாநிலங்களின் ஆதரவு இல்லாமலேயே பா.ஜ.க ஆட்சியமைக்கும். இதைத் தான் சதி என முதலமைச்சர் குறிப்பிடுகிறார்" என்கிறார், சிகாமணி திருப்பதி.
தி.மு.க முன்வைக்கும் 7.18 சதவீதம்
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தொடக்கத்தில் இருந்தே தி.மு.க குரல் எழுப்பி வருகிறது. இதுதொடர்பாக கடந்த மார்ச் 5 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு நடத்தியது.
அந்தக் கூட்டத்தில், '1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் வரையறுக்கப்படும் என, 2000 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் உறுதியளித்தார்.
தற்போது தொகுதி வரையறையை 2026 ஆம் ஆண்டில் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோதி உறுதியளிக்க வேண்டும். அதற்கேற்ப, அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்' எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
'நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் என்பது 7.18% உள்ளது. இதை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு மாற்றக் கூடாது' என்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பான போராட்டங்களை முன்னெடுத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தென்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 உறுப்பினர்களின் பலத்தைக் கணக்கிட்டால் தமிழ்நாட்டுக்கு 7.18% என்ற கணக்கு வருகிறது. 'தொகுதிகளை மறுவரையறை செய்தாலும் இந்த சதவீதம் அளவுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும்' எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சுமத்தினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விகிதாச்சார அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும் எனப் பிரதமர் கூறிவிட்டார். தென்னிந்திய மாநிலங்கள் உள்பட எந்த மாநிலத்துக்கும் இதனால் பாதிப்பு ஏற்படாது" எனக் கூறினார்.
"இரண்டாம்தர குடிமக்களாக வடக்கு மாற்றும்"
அதேநேரம், "தென்னிந்திய மாநிலங்களில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி அமித் ஷா விளக்கவில்லை" என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி விமர்சித்திருந்தார்.
"தென்மாநிலங்களின் எண்ணிக்கை குறையாது என அமித் ஷா கூறினாலும் எத்தனை இடங்கள் அதிகரிக்கும் என்பதைப் பற்றி தெளிவுபடுத்தவில்லை" எனவும் ரேவந்த் ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து, தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநில முதலமைச்சர்களின் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தை மார்ச் 22 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டினார்.
இதில், கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
"மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை நடந்தால் அதை தெற்கு ஏற்கப் போவதில்லை. தென்னிந்திய மாநிலங்கள் அதன் அரசியல் வலிமையை இழந்துவிடும். தங்களை இரண்டாம்தர குடிமக்களாக வடக்கு மாற்றும்" என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசியிருந்தார்.
"பா.ஜ.க-வின் திட்டம் இதுதான்" - பாலச்சந்திரன்
"தென்மாநிலங்களின் தொகுதிகள் குறையாது என அமித் ஷா கூறினார். ஆனால், அதற்கான காரணத்தை அவர் தெளிவுபடுத்தவில்லை. இங்கு தொகுதிகள் குறையாமல் வடஇந்திய மாநிலங்களில் மட்டும் எண்ணிக்கை அதிகரித்தாலும் பாதிப்பு ஏற்படும்" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் சிகாமணி திருப்பதி.
தற்போது வரை பிரதமரும் உள்துறை அமைச்சரும் இதுதொடர்பாக எந்த விளக்கத்தையும் அளிக்காமல் உள்ளதாகக் கூறுகிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன்.
"அவர்களின் நோக்கம் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பிகார் ஆகிய நான்கு மாநிலங்களில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை கூட்டுவது தான்" என்கிறார் அவர்.
மேற்கண்ட நான்கு மாநிலங்களில் பெருவாரியான இடங்களைப் பா.ஜ.க வெற்றி பெற்றுவிட்டால், மக்களவையில் பெரும்பான்மை பலம் கூடும் என்பது அவர்களின் கணக்காக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டி.கே.எஸ்.இளங்கோவன் சொல்வது என்ன?
"பா.ஜ.க முடிவால், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை முறையாகப் பின்பற்றாத உத்தரபிரதேசம் உள்பட சில மாநிலங்கள் பலனடையும். இதனை முறையாக செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பாதிப்படையும்" எனக் கூறுகிறார், தி.மு.க செய்தித் தொடர்புத் துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன்.
இதையே சதி என முதலமைச்சர் கூறுவதாகக் குறிப்பிட்ட டி.கே.எஸ்.இளங்கோவன், "தொகுதி மறுவரையறை பிரச்னையை தொடக்கத்தில் இருந்தே தி.மு.க எழுப்பி வருகிறது" என்கிறார்.
"சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால், தொகுதி மறுவரையறை குறித்து எந்தத் தகவலும் வெளிவரவில்லை. அதுதொடர்பான அறிவிப்பு வெளிவரும்போது விவாதமாகும்" எனவும் அவர் தெரிவித்தார்.
"இது வெறுப்பு அரசியல்" - நாராயணன் திருப்பதி
ஆனால், இதனை மறுத்துப் பேசும் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "முதலமைச்சர் எந்த அடிப்படையில் இதைக் கூறுகிறார் எனத் தெரியவில்லை. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை எடுத்த பிறகு தான் தொகுதி மறுவரையறையை மேற்கொள்வார்கள். அதற்கான குழுவை அமைத்த பிறகு பேசுவது தான் சரியாக இருக்கும்" எனக் கூறுகிறார்.
பிபிசி தமிழிடம் தொடர்ந்து பேசிய அவர், "மக்கள்தொகைக் கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் எனக் கூறி வந்த ஸ்டாலின், இப்போது எடுக்க வேண்டாம் என்கிறார். பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெறுப்பு அரசியலைக் கையில் எடுத்துள்ளார்" என்கிறார்.
"மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவோம் என நாடாளுமன்றத்திலேயே மத்திய அரசு கூறியது. இதை வரவேற்க மனமில்லாமல் இவ்வாறு பேசுவது ஏற்புடையதல்ல" என்கிறார் நாராயணன் திருப்பதி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு