'சமணர் கால தூண்' : திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் நீதிமன்றத்தில் விவாதம் - என்ன நடக்கிறது?

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

(இந்த பக்கம் புதுப்பிக்கப்படுகிறது)

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள, தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ள தூண், சமணர்கள் தொடர்பானது என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் அறநிலையத் துறை கூறியிருக்கிறது. மற்ற தரப்புகள் என்ன வாதங்களை முன்வைத்தன?

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்தது என்ன?

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை, திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம், மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் ஆகியவை மேல் முறையீடு செய்துள்ளன. இந்த வழக்கை நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு விசாரித்துவருகிறது.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை 2வது நாளாக நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் திங்கட்கிழமையன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் மூத்த வழக்கறிஞர் என். ஜோதி தனது வாதங்களை முன்வைத்தார்.

"திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத்தை ஏற்றும் முழு உரிமை கோவில் நிர்வாகத்திற்குத்தான் உள்ளது. எந்தத் தனிநபரும் அதற்கு உரிமை கோர முடியாது. பல ஆண்டு காலமாக மலை மீது உள்ள உச்சிப் பிள்ளையார் கோவிலில்தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அந்த வழக்கத்தை மாற்ற மனுதாரர் கோரியிருக்கிறார். மனுதாரர் மலை மீது ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை வீட்டில் ஏற்றும் தீபத்தைப் போல நினைக்கிறார்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நடைமுறை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகம விதிகளின் அடிப்படையில்தான் நடந்துவருகிறது. பொதுவாக அர்ச்சனைகள், பூஜைகளில் எப்படி தனி நபர்களின் தலையீடு இருக்கக் கூடாதோ, அதுபோல மலை மீது தீபமேற்றுவதும் ஆகம விதிகள் சம்பந்தப்பட்டது. இதனைத் தனி நபர் உரிமையாக கோர முடியாது. இந்த விவகாரத்தில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது" என்றார் அவர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் கோவிலில் அறங்காவலர் குழு செயல்பாட்டில் உள்ளதா என்று கேட்டனர். அதற்கு அவர், "கோவில் அறங்காவலர்கள் குழு செயல்பாட்டில்தான் உள்ளது. ஆனால், அவர்கள் கோவிலின் மீது பற்று இல்லாதவர்களைப் போல சித்தரிக்கப்படுகின்றனர். ஆகம விதிகளை மீறி புதிய பழக்கத்தை உருவாக்கும் போது பல தரப்பினரையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் அறநிலையத் துறை மற்றும் கோவில் தரப்பு வாதங்களை தனி நீதிபதி ஏற்கவில்லை" என்று கூறினார்.

"தமிழ்நாடு தொல்லியல் ஆய்வுத் துறை வெளியிட்ட நூல் ஒன்றில் 'மலையில் பாதி தூரம் இறங்கி சென்றால் தீபத்தூண் ஒன்று இருப்பதை காணலாம். அது நாயக்கர் கால தீபத்தூண். அந்த தீபத்தூணில் அனுமான் உருவம் உள்ளது. அது ஆண்டவன் தலைமீது உள்ள தூண் என மக்கள் நினைக்கின்றனர். அங்கு விளக்கேற்றினால் நன்மை நடக்கும்' எனக் கூறப்பட்டுள்ளது. அந்த தூண்தான் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகேயுள்ள தீபத் தூண். இதைத் தவிர மலையில் உள்ள பிற தூண்கள் தீபத் தூண்கள் அல்ல. தற்போது தீபம் ஏற்றப்பட்டுவரும் தூணில் காலம் காலமாக தீபம் ஏற்றப்பட்டதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. ஆனால் மனுதாரர் குறிப்பிடும் தூணில் தீபம் ஏற்றப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

மதுரையின் பல மலைகளிலும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது போன்ற தூண்கள் உள்ளன. இந்த தூண்கள் சமணர் காலத்தைச் சேர்ந்தவை. மதுரையைச் சுற்றியுள்ள பல மலைகளில் சமணர்கள் வாழ்ந்துள்ளனர். இதற்கான கல்வெட்டுகள், படுகைகள், எழுத்துகள், சிற்பங்கள் உள்ளன. சமணர்கள் மக்களை விட்டு விலகி மலைப் படுகைகளில் வாழ்ந்து வந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினியில் இருந்து திகம்பரர்கள் மதுரைக்கு வந்தனர். அவர்கள் திருப்பரங்குன்றம் உள்பட மதுரையைச் சுற்றியுள்ள பல்வேறு மலைப் பகுதிகளில் வசித்தனர். இரவில் அவர்கள் வெளிச்சத்துக்கு இந்த தூண்களை பயன்படுத்தியிருக்கலாம்" என்று அறநிலையத் துறையின் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

அப்போது நீதிபதிகள், "சமணர்கள் விளக்கு ஏற்றத்தானே அந்தத் தூண்களை பயன்படுத்தி உள்ளனர். சில புத்தகங்களில் அது விளக்கேற்றும் தூண் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது" என்றனர்.

அப்போது அறநிலையத் துறையின் வழக்கறிஞர், "அந்த தூண்கள் சமணர்கள் காலத்தை சேர்ந்தவை. இந்துக்களுக்கும் அந்த தூண்களுக்கும் தொடர்பு இல்லை. அந்த தூண்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவும் இல்லை. இரு இடங்களில் கார்த்திகை தீபம் ஏற்றுவது சரியல்ல. இந்த விவகாரத்தால் திருப்பரங்குன்றம் மக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்" என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பிறகு திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவின் சார்பில், மூத்த வழக்கறிஞர் டி.மோகன் தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார். "திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரத்தில் இதற்கு முன் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். விளக்கம் தருவதற்கு எங்களுக்கு போதுமான அவகாசம் தரப்படவில்லை. எங்கள் தரப்பு வாதங்களைக் கேட்கவும் இல்லை. தர்காவிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் எங்கு வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம் என்பதை ஏற்க முடியாது.

தர்காவில் ஆடு, கோழி பலியிட அனுமதி கோரப்பட்ட வழக்கில் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்திலும் உரிமையியல் நீதிமன்றத்திலேயே தீர்வு காணப்பட வேண்டும். மாறாக, இது தொடர்பான மனுவை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், தீபம் ஏற்ற அனுமதித்து உத்தரவிட்டுள்ளது. இத்தனைக்கும், அந்தத் தூண் அதற்காக பயன்படுத்தப்பட்டதா என்பது உறுதிப்படுத்தப்படவே இல்லை" என்றார்.

அப்போது நீதிபதிகள், "தர்காவிலிருந்து 15 மீட்டர் தொலைவில் தீபம் ஏற்றலாமா" எனக் கேள்வி எழுப்பினர்.

தர்கா தரப்பில், "இதுவரை முறையாக எல்லைகள் வரையறுக்கப்படவில்லை. திருப்பரங்குன்றம் மலை முழுவதும் அளவீடு செய்தால் மட்டுமே தனி நீதிபதி உத்தரவை அமல்படுத்த முடியும். தர்காவை அடுத்துள்ள ஒரு மரம் அருகே கொடியேற்ற தர்கா நிர்வாகம் முடிவு செய்தபோது கோயில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது" என்றார்.

இதற்குப் பிறகு இடையீட்டு மனுதாரர் கனகவேல் பாண்டியன் சார்பில் மூத்த வழக்கறிஞர் லஜபதி ராய் வாதிட்டார். அவர் வாதிடும் போது, "திருப்பரங்குன்றம் மலை தொல்லியல் துறையின் வசம் உள்ளது. மலை மீது எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு முன்பாக தொல்லியல் துறையினரிடம் அனுமதி பெறுவது அவசியம். ஆனால் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தொல்லியல் துறையிடம் எந்த ஆலோசனையும் பெறப்படவில்லை" என்று குறிப்பிட்டார்.

கோவில் நிர்வாகம், தர்கா தரப்பின் வாதங்கள் முடிந்த நிலையில், வக்ஃப் வாரியம், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையர் தரப்பில் வாதங்களை முன்வைப்பதற்காக விசாரணையை செவ்வாய்க் கிழமைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

செவ்வாய்க்கிழமையன்று வழக்கின் விசாரணை துவங்கியபோது, அருணாச்சலம் என்ற வழக்கறிஞர் மேலும் சில இடையீட்டு மனுக்களை ஏற்க வேண்டும் என்று கோரினார். இதற்கு நீதிபதிகள் மறுப்புத் தெரிவித்தனர். அவர் தொடர்ந்து இதனை வலியுறுத்திய நிலையில், அந்த வழக்கறிஞரை வெளியேற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

செவ்வாய்க்கிழமை விசாரணையில் நடந்தது என்ன?

செவ்வாய்க் கிழமையன்று தொடர்ந்து நடந்த விசாரணையில், வக்ஃப் வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அப்துல் முபீன், "தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் அந்தத் தூண் அமைந்துள்ளது. கடந்த கால நீதிமன்ற உத்தரவுகளில் தீபத் தூண் என எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த விவகாரத்தில் மத்தியஸ்தர்களுடன் அமர்ந்து பேசி ஒரு தீர்வை எட்டத் தயாராக இருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

இதற்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல்துறையின் சார்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதிட்டார். "1920ஆம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பில், தர்காவை ஒட்டியுள்ள பகுதிகள் தர்காவுக்கே சொந்தம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1966ஆம் ஆண்டு தீர்ப்பில், வேறு இடத்தில் தீபம் ஏற்றுவது குறித்து கோவில் நிர்வாகம் பரிசீலிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கோவில் நிர்வாகத்திற்கு அத்தகைய அவசியம் ஏற்படவில்லை.

மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டுமென்று மட்டுமே கோவில் நிர்வாகத்துக்கு அளித்த மனுவில் ராம ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார். அவர் கோரிய நிவாரணத்தை தாண்டி தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். தனி நீதிபதியின் உத்தரவால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தனி நீதிபதி எதை நோக்கிச் செல்கிறார் எனத் தெரியவில்லை." என்று குறிப்பிட்டார்.

இதற்கு மனுதாரரின் வழக்கறிஞர்கள், இந்தக் கருத்து துரதிர்ஷ்டவசமானது எனக் கூறினர்.

அதைத் தொடர்ந்து வாதிட்ட விகாஸ் சிங், "அது தீபத் தூணாகவே இருந்தாலும் அங்கு தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட முடியாது. தீபம் ஏற்றுவது குறித்துப் பரிசீலிக்கலாம் என கோவில் தரப்பிடம் கூற மட்டுமே முடியும்" என்று குறிப்பிட்டார்.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார், "இந்த விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து வழக்குகள் நடந்து வருவதே, அது சர்ச்சைக்குரிய விவகாரம் என்பதற்கு ஆதாரம். இதுபோன்ற வழக்கமே இல்லை என்று சொல்வது சரியானதாக இருக்காது" என்று குறிப்பிட்டார்.

மேலும், "1920ஆம் ஆண்டு தீர்ப்பின்படி, தர்கா அமைந்துள்ள இடம் தவிர்த்துப் பிற இடங்கள் கோவிலுக்குச் சொந்தமானவை. 1996ஆம் ஆண்டு தீர்ப்பின்படி, உச்சிப் பிள்ளையார் கோவில் தவிர, பிற இடங்களிலும் தீபம் ஏற்ற முடியும். தர்காவில் இருந்து 15 மீட்டர் தூரத்தில் தீபம் ஏற்றவும் அந்த உத்தரவு அனுமதிக்கிறது. அந்தத் தீர்ப்பு இதுவரை எதிர்க்கப்படவில்லை" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்குப் பிறகு, கோவில் தரப்புக்கும் தர்கா தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடலாமா என மனுதாரரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பேச்சுவார்த்தை நடத்துவது இந்த விவகாரத்தில் தீர்வு கிடைப்பதைத் தாமதப்படுத்தும் என மனுதாரர்கள் தரப்பு பதில் அளித்தது. இதற்குப் பிறகு வழக்கின் விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இது தவிர, இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான தனி நீதிபதியின் விசாரணைக்குத் தடை விதிக்கப்பட மாட்டாது என்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது தலைமைச் செயலாளர், ஏ.டி.ஜி.பி. ஆஜராக விலக்கு அளிக்கவும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர். அதோடு, நேரில் ஆஜராக விலக்கு வேண்டும் என்றால் தமிழ்நாடு அரசு தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை அணுகலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதுவரை நடந்தது என்ன?

  • மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதர் ஆலயமும் மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன.
  • ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை தீப நாளில் சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அமைப்பினர் முன்வைத்துள்ளனர்.
  • இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென உத்தரவிட்டார்.
  • அதன்படி, டிசம்பர் 3, மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும், தவறும்பட்சத்தில் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
  • இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திருப்பரங்குன்றம் முருகன் கோவில் செயல் அலுவலர் டிசம்பர் 2 அன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.
  • ஆனால், டிசம்பர் 3 அன்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே வழக்கம் போல தீபம் ஏற்றப்படும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் தீபத்தூணில் மகா தீபத்தை ஏற்ற எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை (டிசம்பர் 3) தொடர்ந்தார்.
  • இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற, மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். தன்னுடன் அவர் 10 பேரை அழைத்துச் செல்லலாம் என்றும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
  • இந்த உத்தரவை எதிர்த்து, மதுரை மாவட்ட ஆட்சியர், நகர காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் செயல் அதிகாரி ஆகியோர் ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
  • இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக டிசம்பர் 4 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பின் மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
  • அதேசமயம், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை, திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம், மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் ஆகியவை தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு விசாரித்துவருகிறது.
  • இந்த வழக்கு டிசம்பர் 15 அன்று விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சமணர்கள் வட மாநிலங்களில் இருந்து மதுரைக்கு வந்தனர் என்றும் அவர்களால் உருவானதே இந்தத் தூண் என்றும் குறிப்பிட்டார். இது மீண்டும் விவாதங்களை எழுப்பியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு