2026-ல் விளையாட்டு உலகில் காத்திருக்கும் முக்கிய தொடர்கள்!

2026 விளையாட்டு தொடர்கள்

பட மூலாதாரம், Getty Images

2025-ல் பல்வேறு முக்கியமான விளையாட்டுப் போட்டிகள் அரங்கேறின. சாம்பியன்ஸ் டிராஃபி, பெண்கள் உலகக் கோப்பை, ஆசிய கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற கிரிக்கெட் தொடர்கள் நடந்தன. ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை, ஸ்குவாஷ் உலகக் கோப்பை, கோ கோ உலகக் கோப்பை, பெண்கள் செஸ் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களும் நடந்தன.

இப்போது 2026-ல் இதைவிடப் பெரிய தொடர்கள் பல நடக்கப்போகின்றன. வருடம் முழுவதுமே விளையாட்டுத் திருவிழாக்கள் காத்திருக்கின்றன. அவற்றுள் முக்கியமான சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

வுமன்ஸ் பிரீமியர் லீக் சீசன் 4

வெற்றிகரமாக நடந்துவரும் வுமன்ஸ் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நான்காவது சீசன் வரும் ஜனவரி 9 முதல் ஃபிப்ரவரி 5 வரை நடக்கிறது. இம்முறை மெகா ஏலம் நடந்து அணிகள் மாறியிருக்கின்றன. இந்த சீசன் நவி மும்பை மற்றும் வதோதராவில் போட்டிகள் ஆடப்படுகின்றன. முதல் போட்டியில் இரண்டு முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸும், இரண்டாவது சீசன் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும் மோதுகின்றன.

மும்பை இந்தியன்ஸ் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீராங்கனை கமலினி இடம்பெற்றிருக்கிறார். விக்கெட் கீப்பர் பேட்டரான அவர், மெகா ஏலத்துக்கு முன்பு அந்த அணியால் தக்கவைக்கப்பட்டார். யஸ்திகா பாட்டியா இல்லாததால், இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரதான விக்கெட் கீப்பராக அவர் இருக்க வாய்ப்புண்டு.

19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை

ஜனவரி 15 முதல் ஃபிப்ரவரி 6 வரை 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 16 நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியா நாடுகளில் நடக்கிறது.

குரூப் சுற்றில் வங்கதேசம், நியூசிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஏ பிரிவில் இடம்பெற்றிருக்கிறது இந்திய அணி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓப்பனரான ஆயுஷ் மாத்ரே தான் இந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுகிறார். 14 வயது இளம் சென்சேஷனான வைபவ் சூர்யவன்ஷியும் இந்தத் தொடரில் இடம்பெற்றிருக்கிறார்.

தமிழ்நாட்டு வீரர்கள் தீபேஷ் தேவேந்திரன் மற்றும் ஆர்.எஸ்.அம்ப்ரிஷ் ஆகியோரும் இந்த உலகக் கோப்பை அணிக்குத் தேர்வாகியிருக்கிறார்கள். வேகப்பந்துவீச்சாளரான தீபேஷ், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராகத் திகழ்ந்தவர். அம்ப்ரிஷ் அணியின் முக்கிய ஆல்ரவுண்டர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

இதுவரை 5 முறை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றிருக்கும் இந்தியா, கடந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தோல்வியை சந்தித்திருந்தது.

குளிர்கால ஒலிம்பிக்ஸ்

25-வது குளிகால ஒலிம்பிக்ஸ் தொடர் இத்தாலியின் மிலன் மற்றும் கோர்டினா ஆகிய நகரங்களில் நடக்கிறது. 8 விளையாட்டுகளைச் சேர்ந்த 116 போட்டிகள் இந்த ஒலிம்பிக்ஸ் தொடரில் நடைபெறப்போகின்றன. ஃபிப்ரவரி 6 முதல் 22 வரை இந்தத் தொடர் நடக்கிறது.

இந்த தொடரில் இந்தியா சார்பாக 2 வீரர்கள் பங்கேற்கப்போகிறார்கள். ஆல்பைன் ஸ்கீயிங் மற்றும் கிராஸ்-கன்ட்ரி ஸ்கீயிங் ஆகிய போட்டிகளில் தலா 1 வீரருக்கான (ஆண்கள் பிரிவு) இடம் 'அடிப்படை கோட்டா' முறையில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த முறை ஆரிஃப் கான் என்ற வீரர் ஆல்பைன் ஸ்கீயிங் போட்டியில் பங்கேற்றிருந்தார்.

ஆண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்

இந்தியா மற்றும் இலங்கையில் ஃபிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை ஆண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 20 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. இந்த அணிகள் மொத்தம் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஏ பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய அனிகளோடு இடம்பெற்றிருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஃபிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்புவில் நடக்கிறது. தமிழ்நாட்டு வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

நடப்பு சாம்பியனான இந்திய அணி தங்களின் மூன்றாவது டி20 உலகக் கோப்பைத் தொடரை சொந்த மண்ணில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2026 விளையாட்டு தொடர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாட்டு வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் 15 பேர் கொண்ட உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து

ஏஎஃப்சி பெண்கள் ஆசியன் கோப்பை கால்பந்து தொடர் மார்ச் 1 முதல் 21 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இந்திய அணி இந்தத் தொடரில் பங்கேற்கப்போகிறது. அதன்பிறகு தொடர்ந்து 4 தொடர்களுக்குத் தகுதி பெறத் தவறியிருந்த இந்தியா, 2022-ல் தகுதிபெற்றிருந்தது. இருந்தாலும், அணிக்குள் கொரோனா பரவிய காரணத்தால், அத்தொடரிலிருந்து இந்திய அணி விலகியிருந்தது.

இந்தியன் பிரீமியர் லீக்

டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு இந்தியன் பிரீமியர் லீக் தொடர் நடக்கவிருக்கிறது. எந்தத் தேதியில் போட்டிகள் தொடங்கப்போகின்றன என்ற அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

கடந்த முறை கடைசி இடமே பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் இம்முறை பல்வேறு மாற்றங்களை சந்தித்திருக்கிறது. சஞ்சு சாம்சன் அணியில் இணைந்திருப்பதோடு, இரண்டு இளம் வீரர்களை தலா சுமார் 14 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி ஒரு புதிய திசையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது சிஎஸ்கே. அவர்களின் இந்த புதிய பயணம் எப்படி அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.

2026 விளையாட்டு தொடர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த முறை கடைசி இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ், இம்முறை பல மாற்றங்களை சந்தித்திருக்கிறது

ஃபிஃபா உலகக் கோப்பை

உலகின் மிகப் பெரிய தொடர்களுள் ஒன்றாகக் கருதப்படும் ஃபிஃபா உலகக் கோப்பை, 2026ம் ஆண்டு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. முதல் முறையாக இந்தத் தொடரில் 48 அணிகள் பங்கேற்கப்போகின்றன. ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை இந்தத் தொடர் நடக்கிறது.

மெஸ்ஸி தற்போது கிளப் போட்டிகளில் அமெரிக்காவில் விளையாடிக்கொண்டிருப்பதால் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணிக்கு அங்கு அதிக ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், இன்னும் உலகக் கோப்பையை வெல்ல முயற்சி செய்துகொண்டிருக்கும் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இது கடைசி உலகக் கோப்பையாக இருக்கும் என்பதால், அவர் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.

பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்

2025-ஆம் ஆண்டு பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பை முடிந்திருந்த நிலையில், 2026-ல் டி20 உலகக் கோப்பை தொடர் நடக்கப்போகிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை இந்தத் தொடர் நடைபெறுகிறது. மொத்தம் 12 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன.

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றிருக்கின்றன. போக, தகுதிச் சுற்றின் வாயிலாக இன்னும் 2 அணிகள் அந்தப் பிரிவில் இணைக்கப்படும். ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி நடப்பு சாம்பியனாகத் திகழ்வதால், இந்த ஃபார்மட்டிலும் அவர்களின் ஆதிக்கம் தொடரும் என்று ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

காமன்வெல்த் போட்டிகள்

2026 விளையாட்டு தொடர்கள்

பட மூலாதாரம், Getty Images

காமன்வெல்த் நாடுகள் பங்கேற்கும் 23வது காமன்வெல்த் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறுகிறது. இந்தத் தொடர் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடக்கிறது. சுமார் 74 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த 3000 வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்பார்கள் என்று கருதப்படுகிறது.

போட்டியை நடத்தும் நாட்டை முடிவு செய்வதில் குளறுபடிகள் நேர்ந்ததால் கடைசி கட்டத்தில் தான் கிளாஸ்கோ உறுதி செய்யப்பட்டது. அந்நகரம் முழுமையாக தயாராக முடியாத காரணத்தால் பல விளையாட்டுகள் இந்த தொடரிலிருந்து நீக்கப்பட்டன. கடந்த முறை 20 விளையாட்டுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இம்முறை அது பத்தாக குறைக்கப்பட்டிருக்கிறது.

டேபிள் டென்னிஸ், பேட்மின்டன், கிரிக்கெட், மல்யுத்தம் என இந்தியா அதிக பதக்கங்கள் வெல்லக்கூடிய முக்கிய விளையாட்டுகள் இம்முறை இடம்பெறப்போவதில்லை. 2022-ஆம் ஆண்டு பர்மிங்ஹமில் நடந்த தொடரில் இந்தியா 22 தங்கங்கள் உள்பட 61 பதக்கங்கள் வென்றிருந்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

ஜப்பானின் ஆய்சி பிரிஃபெக்சர் மற்றும் அதன் தலைநகரம் நகோயாவில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. சுமார் 42 விளையாட்டுகளைச் சேர்ந்த 460 போட்டிகள் இந்தத் தொடரில் நடக்கின்றன. கடந்த முறையைப் போல் இம்முறையும் டி20 போட்டிகளாக கிரிக்கெட்டும் நடத்தப்படுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் போட்டிகள்

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளிலும், 5 டி20ஐ போட்டிகளிலும் விளையாடுகிறது. ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 1 டெஸ்ட் போட்டியும், 3 ஒருநாள் போட்டிகளிலும் ஆடுகிறது. இவ்வொரு தொடர்களும் இந்தியாவில் நடக்கின்றன.

அதன்பிறகு ஜூலை மாதம் இங்கிலாந்து செல்லும் இந்தியா 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20ஐ போட்டிகளில் பங்கேற்கிறது. செப்டம்பர் மாதம் தலா 3 ஒருநாள் மற்றும் டி20ஐ போட்டிகளில் வங்கேசத்துக்கு எதிராக வங்கதேசத்தில் ஆடுகிறது.

இந்த தொடர்கள் போக, ஆகஸ்ட் மாதம் ஆண்கள் மற்றும் பெண்கள் எஃப்ஐஹெச் ஹாக்கி உலகக் கோப்பை தொடரும் நடைபெறுகிறது. ஆஃப்ரிக்கன் கப் ஆஃப் நேஷன்ஸ் கால்பந்து தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தப் பெரும் தொடர்களைத் தவிர்த்து, வழக்கமான கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்கள், ஃபார்முலா 1 உலக சாம்பியன்ஷிப் போன்ற முக்கிய தொடர்களும் எப்போதும் போல் ரசிகர்களுக்காக காத்திருக்கின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு