You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரானுக்கு இந்தியா கண்டனம் - இந்திய முஸ்லிம்கள் பற்றி ஆயதுல்லா அலி காமனெயி கூறியது என்ன?
இந்திய முஸ்லிம்கள் குறித்த இரான் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கருத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிறுபான்மையினர் குறித்து அறிக்கை வெளியிடும் நாடுகள், பிறரைப் பற்றி கருத்து தெரிவிப்பதற்கு முன் தங்கள் நாட்டில் நடப்பதை முதலில் பார்க்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 16ஆம் தேதி காமனெயி, காஸா மற்றும் மியான்மருடன் இந்தியாவையும் சேர்த்து, "முஸ்லிம்கள் மோசமான நிலைமையில் போராடுகிறார்கள்" என்று கருத்து வெளியிட்டார்.
இருப்பினும், இந்தியா பற்றி இரான் உச்ச தலைவர் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவது இது முதல் முறை அல்ல.
2020-ஆம் ஆண்டில் தலைநகர் டெல்லியில் கலவரம் வெடித்தபோது, "முஸ்லிம்களின் இனப்படுகொலையை" நிறுத்த வேண்டும் என்று காமனெயி குறிப்பிட்டார்.
காமனெயி அறிக்கையும் இந்தியாவின் பதிலும்
முகமது நபி பிறந்த நாளான மிலாது நபியை முன்னிட்டு இரான் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி திங்களன்று சன்னி அறிஞர்களை சந்தித்தார்.
"இந்த சந்திப்பின் போதும் காஸா உட்பட உலகின் எந்தப் பகுதியிலும் வாழும் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த பிற மக்களின் துன்பங்களை பற்றி முஸ்லிம்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. ஏனெனில் இது இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரானது என்று காமனெயி வலியுறுத்தினார்" என்று இரானின் அரசு செய்தி முகமையான இர்னா வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.
இஸ்லாமிய சமூகத்தின் கண்ணியத்தை, ஒற்றுமையின் மூலமாக மட்டுமே அடைய முடியும் என்றும் அவர் கூறினார்.
தற்போது காஸா மற்றும் பாலத்தீனத்தின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிப்பது முக்கிய கடமை. இந்த கடமையை புறக்கணிக்கும் எவரும் சர்வவல்லமை பொருந்திய அல்லாவிடம் பதில் சொல்லவேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காமனெயி இதை எக்ஸ் தளத்தில் பதிவிட்டபோது, அவர் மியான்மர் மற்றும் காஸாவுடன் இந்தியாவையும் குறிப்பிட்டார்.
"இஸ்லாத்தின் எதிரிகள் எப்போதுமே ஒரு இஸ்லாமிய சமூகம் என்ற நமது பகிரப்பட்ட அடையாளத்தை அலட்சியப்படுத்த முயற்சிக்கின்றனர். மியான்மர், காஸா, இந்தியா அல்லது வேறு எங்கும் உள்ள முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் துன்பத்தை நாம் அறியவில்லை என்றால், நாம் நம்மை முஸ்லிம்களாகக் கருத முடியாது,” என்று அவர் அந்தப் பதிவில் எழுதியுள்ளார்.
இதற்குப் பிறகு செப்டம்பர் 16-ஆம் தேதி இரவு இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் இரான் உச்ச தலைவரின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் கூறினார்.
"இந்தியாவின் சிறுபான்மையினர் குறித்து இரான் உச்ச தலைவர் தெரிவித்த கருத்துகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இவை தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை மட்டுமல்லாமல் ஏற்றுக்கொள்ள முடியாதவையும் ஆகும். சிறுபான்மையினர் குறித்து கருத்து தெரிவிக்கும் நாடுகள் மற்றவர்களைப் பற்றி எந்த அறிக்கையும் வெளியிடுவதற்கு முன் தங்கள் நாட்டில் நடப்பதை முதலில் பார்க்க வேண்டும்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய முஸ்லிம்கள் பற்றிய காமனெயி கருத்து
2020 மார்ச் மாதம் வடகிழக்கு டெல்லியில் கலவரம் வெடித்தது. இந்த வன்முறையில் 53 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
"இந்தியாவில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதால் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் வருத்தமடைந்துள்ளனர். இந்திய அரசு அடிப்படைவாத இந்துக்கள் மற்றும் அவர்களது கட்சிகளை கட்டுப்படுத்தி, முஸ்லிம்களின் படுகொலையை நிறுத்த வேண்டும். இஸ்லாமிய உலகத்திடமிருந்து இந்தியா தனிமைப்படுத்தப்படாமல் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்,” என்று காமனெயி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதற்கு சில மாதங்களுக்கு முன்பு அதாவது 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவை இந்தியா ரத்து செய் தபோது அந்த நடவடிக்கை பற்றியும் காமனெயி விமர்சித்திருந்தார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களின் நிலை குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம். இந்தியாவுடன் எங்களுக்கு நல்லுறவு உள்ளது. ஆனால் காஷ்மீரில் உள்ள சாமானிய மக்களுக்காக இந்திய அரசு நியாயமான கொள்கையை கடைப்பிடிக்கும் என்றும் இந்தப் பிராந்தியத்தில் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தும் என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
2022 இல் முன்னாள் பாஜக தலைவர் நூபுர் ஷர்மா, முகமது நபியைப் பற்றி தரக்குறைவான கருத்துகளை தெரிவித்திருந்தார்.
அப்போதும் இந்திய தூதரை வரவழைத்து இரான் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இது நடந்து சில நாட்களிலேயே அப்போதைய இரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான் டெல்லி வந்தார்.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்போதைய இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தனது முதல் பாகிஸ்தான் பயணத்தை மேற்கொண்டபோது, இரு நாடுகளின் கூட்டறிக்கையில் காஷ்மீர் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கும் இந்தியா இரானிடம் எதிர்ப்பு தெரிவித்தது.
காஷ்மீர் பிரச்னைக்கு அப்பகுதி மக்களின் விருப்பப்படி அமைதி வழியில் தீர்வு காணப்படவேண்டும் என்று இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தான் மற்றும் இரானின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் கேட்ட போது, “இந்தப் பிரச்னையை இரான் அதிகாரிகளிடம் எழுப்பியுள்ளோம்” என்றார்.
இப்ராஹிம் ரைசியும், ஹுசைன் அமீர் அப்துல்லாஹியானும் இந்த ஆண்டு ஒரு விமான விபத்தில் உயிரிழந்தனர்.
இந்தியா - இரான் உறவு எப்படி உள்ளது?
இந்தியாவுக்கும் இரானுக்கும் இடையே நட்புறவு நிலவுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி 14-15 தேதிகளில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இரான் சென்றிருந்தார்.
இது மட்டுமின்றி, இப்ராஹிம் ரைசியின் மறைவுக்குப் பிறகு இரானின் புதிய அதிபராக மசூத் பெஜேஷ்கியன் ஜூலை 30-ஆம் தேதி பதவியேற்ற போது, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்தியா சார்பாக இரான் சென்றிருந்தார்.
அணுசக்தி திட்டங்களால் இரான் மீது சர்வதேச தடைகள் உள்ளன. ஆனால் இரானின் முதல் ஐந்து வர்த்தக கூட்டாளி நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது.
இந்தியா முக்கியமாக அரிசி, தேநீர், சர்க்கரை, மருந்து பொருட்கள், மின்சார இயந்திரங்கள் மற்றும் கவரிங் நகைகள் போன்ற பொருட்களை இரானுக்கு ஏற்றுமதி செய்கிறது. இரானில் இருந்து உலர் பழங்கள், கனிம/கரிம ரசாயனங்கள், கண்ணாடி பொருட்கள் போன்றவற்றை இறக்குமதி செய்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த ஆண்டு மே மாதம் இந்தியா மற்றும் இரான் இடையே ஒரு முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் கீழ் சாபஹாரில் அமைந்துள்ள ஷாஹித் பெஹெஸ்டி துறைமுகத்தை இந்தியா 10 ஆண்டுகளுக்கு இயக்கும்.
ஷாஹித் பெஹெஸ்டி இரானின் இரண்டாவது மிக முக்கியமான துறைமுகமாகும்.
இரானின் கடலோர நகரமான சாபஹாரில் துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா மற்றும் இரான் இடையே 2003 இல் ஒப்பந்தம் ஏற்பட்டது.
2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி இரான் சென்றார். 15 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் இரானுக்குச் சென்றது அதுவே முதல்முறை. இந்த ஒப்பந்தம் அதே ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்த துறைமுகம் மூலமாக ஆப்கானிஸ்தானில் இருந்து பொருட்கள், பாகிஸ்தானை தவிர்த்தபடி இந்தியாவிற்கு வந்தன.
2020 ஆம் ஆண்டில் ஒரு திட்டத்தில் இருந்து இந்தியாவை வெளியேற்றுவது பற்றி இரானில் இருந்து அறிக்கைகள் வெளிவந்தன.
சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்திற்கு அதாவது INSTC-க்கு சாபஹார் துறைமுகம் மிகவும் முக்கியமானது.
அரபிக்கடலில் செல்வாக்கை அதிகரிக்க முயற்சித்து வரும் சீனாவுக்கு சவால் விடுப்பதில் இந்தியாவுக்கு சாபஹார் துறைமுகம் உதவிகரமாக இருக்கக் கூடும்.
பாகிஸ்தானில் உள்ள குவாதர் துறைமுகத்தை சீனா மேம்படுத்தி வருகிறது.
இந்த துறைமுகம் சாபஹார் துறைமுகத்திலிருந்து சாலை வழியாக 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கடல் வழியாக அது வெறும் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
எனவே குவாதர் மற்றும் சாபஹார் துறைமுகம் தொடர்பாகவும் இந்தியா - சீனா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
குவாதர் துறைமுகத்தில் சீனாவின் இருப்பு இந்தியாவிற்கு பிரச்சனைகளை உருவாக்கலாம். இத்தகைய சூழ்நிலையில் சாபஹார் துறைமுகத்தில் இந்தியாவின் இருப்பு இந்தியாவுக்கு சாதகமாக கருதப்படுகிறது. இந்த துறைமுகம் மூலம் இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுக்கான பெரிய சந்தையையும் அணுக முடியும்.
முன்பு ஆப்கானிஸ்தானுக்கு உணவு தானியங்களை வழங்க பாகிஸ்தானின் சாலைகளை இந்தியா பயன்படுத்த வேண்டியிருந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)