You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான்: ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தலில் சிக்கி மீண்ட பயணிகளின் திகில் அனுபவம்
- எழுதியவர், பிபிசி உருது சேவை & கெல்லி என்ஜி
- பதவி, பிபிசி
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் நேற்று (மார்ச் 11) பலூச் ஆயுதக் குழுவினரால் கடத்தப்பட்டது.
இந்த ரயிலில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள், தாங்கள் அனுபவித்த பயங்கரமான நிகழ்வுகளைப் பற்றி தெரிவித்துள்ளனர்.
"அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமல், துப்பாக்கிச்சூடு நடந்த நேரம் முழுவதும் நாங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்தோம்", என்று ரயிலில் பயணித்த இஷாக் நூர் பிபிசியிடம் கூறினார்.
இந்த ரயிலில் பயணித்த 400க்கும் மேற்பட்ட பயணிகளில் இவரும் ஒருவர். பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து, பெஷாவர் நோக்கிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை நேற்று பலூச் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த ஆயுதக் குழுவினர் கடத்தினர். அதில் பயணித்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இதுவரை 155 பேரை மீட்டுள்ளதாகவும், 27 தீவிரவாதிகளைக் கொன்றுவிட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தரவுகளை பிபிசியால் சுயாதீனமாக உறுதிபடுத்த முடியவில்லை. மீட்கப்பட்ட பயணிகளுள் ஒரு டஜனுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ரயிலில் இன்னும் சிக்கியுள்ள பயணிகளை பாதுகாப்பாக மீட்க நூற்றுக்கணக்கான படையினரை அனுப்பியுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறப்புப் படை வீரர்களையும் பயணிகளை மீட்கும் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பணயக்கைதிகளை மீட்க முயற்சித்தால் "கடுமையான விளைவுகளை" சந்திக்க நேரிடும் என்று பலூச் விடுதலை ராணுவம் எச்சரித்துள்ளது.
தீவிரவாதிகள் ஒரு சிலர் ரயிலை விட்டு வெளியேறி, சில பயணிகளை சுற்றியுள்ள மலைப்பகுதிக்குள் இழுத்துச் சென்றிருக்கலாம் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்ததாக சில செய்திகள் குறிப்பிடுகின்றன. ஆனால் அந்த பயணிகளின் எண்ணிக்கை குறித்து இன்னும் சரியாக தெரியவில்லை.
ரயிலில் இருந்தவர்களில் குறைந்தது 100 பேர் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயிலில் இருந்து மீட்கப்பட்ட பயணிகளுள் முகமது அஷ்ரப் ஒருவர் ஆவார். அவர் தனது குடும்பத்தினரைப் பார்க்க குவெட்டாவிலிருந்து லாகூர் சென்று கொண்டிருந்தார்.
"ரயிலில் இருந்த பயணிகளின் மத்தியில் மிகுந்த அச்சம் நிலவியது. அது ஒரு மோசமான அனுபவம்", என்று அவர் கூறினார்.
பின்னர் சில பயணிகள் சுமார் நான்கு மணி நேரம் நடந்தே சென்று அடுத்த ரயில் நிலையத்தை அடைந்தனர். நடக்க முடியாத நிலையில் இருந்த பயணிகளை, பல ஆண்கள் தங்கள் தோள்களில் சுமந்து சென்றனர்.
"நாங்கள் மிகவும் சோர்வாக இருந்தோம், அதனால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு அடுத்த ரயில் நிலையத்தை அடைந்தோம். எங்களுடன் குழந்தைகளும் பெண்களும் இருந்தனர்," என்று அவர் கூறினார்.
தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பயணம் செய்த இஷக் நூர், ஆரம்பத்தில் ரயிலில் ஏற்பட்ட வெடிப்பு "மிகவும் தீவிரமானது" என்றும் இதனால் அவரது குழந்தைகளில் ஒருவர் இருக்கையில் இருந்து விழுந்தார் என்றும் அவர் என்று கூறினார்
துப்பாக்கி சூட்டுக்கு மத்தியில் அவரும் அவரது மனைவியும் ஆளுக்கொருவர் குழந்தையைப் பாதுகாக்க முயன்றனர்.
"தோட்டா எங்களை வேண்டுமானால் தாக்கட்டும், ஆனால் எங்களது குழந்தைகளுக்கு எதுவும் ஆகக்கூடாது", என்று அவர் கூறினார்.
ஜாஃபர் எக்ஸ்பிரஸின் மூன்றாவது பெட்டியில் இருந்த முஷ்டாக் முகமது, இந்தத் தாக்குதல் மறக்க முடியாதது என்று குறிப்பிட்டார்.
"குண்டுவெடிப்பு தீவிரமாக இருந்ததால், ரயிலின் ஜன்னல்கள், கதவுகள் அதிர்ந்தன. என் அருகில் அமர்ந்திருந்த என் குழந்தைகளில் ஒருவர் கீழே விழுந்தார்" என்று அவர் நடந்ததை விவரித்தார்.
"பொதுமக்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் பலூச் மக்களிடம் அவர்கள் எதுவும் பேசவில்லை. தாக்குதல் நடத்தியவர்கள் பலுச்சி மொழியில் ஒருவருக்கொருவரிடம் பேசிக் கொண்டனர். அவர்களின் தலைவர் அவர்களிடம், 'பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்திக் கண்காணிக்குமாறு' கூறியதாகவும் பலமுறை கூறிக் கொண்டனர்," என்றும் முஷ்டாக் முகமது தான் எதிர்கொண்ட அனுபவத்தை விவரித்தார்.
இந்த கடத்தல் சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் பலுசிஸ்தானைச் சேர்ந்தவர்களையும், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகிய பயணிகளையும் விடுவிக்கத் தொடங்கினர் என்று இஷக் நூர் தெரிவித்தார். அவர் பலுசிஸ்தானில் உள்ள டர்பட் நகரத்தைச் சேர்ந்தவர் என்று கூறிய போது அவர் விடுவிக்கப்பட்டதாகவும், அவருடன் குழந்தைகளும் பெண்களும் விடுவிக்கப்படுவதை தான் பார்த்ததாகவும் அவர் கூறினார்.
பல பயணிகள் இன்னும் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
புதன்கிழமை (மார்ச் 12), குவெட்டா ரயில் நிலையத்தில் டஜன்கணக்கான சவப்பெட்டிகள் ரயில்களில் ஏற்றப்படுவதை பிபிசி பார்த்தது. அவை காலியாக இருப்பதாகவும், ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டால் பயன்படுத்துவதற்காக கொண்டு செல்வதாகவும் ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.
"மிகவும் கவலையளிக்கிறது"
பலுசிஸ்தான் என்ற தனி நாடு கேட்டு பலூச் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு போராடி வருகிறது. காவல் நிலையங்கள், ரயில் பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை குறிவைத்து ஏராளமான தாக்குதல்களையும் அது நடத்தியுள்ளது.
2000களின் முற்பகுதியில் இருந்து பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இந்த காணாமல் போனவர்கள் எங்குள்ளனர் என்பதைப் பற்றிய ஒரு தடயமும் இல்லை. பாதுகாப்புப் படையினர் மீது சித்திரவதை மற்றும் நீதிக்கு புறம்பான கொலைகள் உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுக்கின்றனர்.
பாகிஸ்தான் அதிகாரிகள், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளும் இந்தக் குழுவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.
தற்போது நடந்திருக்கும் ரயில் கடத்தல் குறித்து பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் "மிகவும் கவலை" தெரிவித்துள்ளது.
"பலுசிஸ்தானில் குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட, மக்களுக்கு ஆதரவான ஒருமித்த கருத்தை உடனடியாக உருவாக்க வேண்டும். அமைதியான, அரசியல் தீர்வைக் காண அனைத்து தரப்பினரையும் நாங்கள் கடுமையாக வலியுறுத்துகிறோம்," என்று அந்த அமைப்பு எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த கடத்தல் சம்பவத்தை கடுமையாகக் கண்டித்துள்ளார். எஞ்சியுள்ள பயணிகளை உடனடியாக விடுவிக்கவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)