காணொளி: ஜன நாயகன் படத்துக்கு சான்றிதழ் வழங்கும் தீர்ப்புக்கு தடை
ஜன நாயகன் படத்துக்கு சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் தீர்ப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்கு விசாரணை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நீங்கள் அவசரநிலையை உருவாக்கி, நீதிமன்றத்தின் மீது அழுத்தம் கொடுக்கிறீர்கள். நீங்கள் தேதியை நிர்ணயித்துவிட்டு, இவ்வாறு அழுத்தம் கொடுக்க முடியாது என தலைமை நீதிபதி அமர்வு கூறியதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் பொங்கலையொட்டி ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. என்ன நடந்தது?
இயக்குநர் ஹச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் ஜன நாயகன் திரைப்படம் உருவாகி உள்ளது. இந்தப் படம் பொங்கலையொட்டி திரைக்கு வர இருந்தது. ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு படத்திற்கான முன்பதிவும் சில இடங்களில் தொடங்கின.
ஆனால் படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சான்று கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
கடந்த 7ம் தேதி இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை நீக்கினால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்படும் என மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் கூறியது. அதனையேற்று அந்தக் காட்சிகளை படக்குழு நீக்கியது. அதன்பிறகும் சான்றிதழ் வழங்கப்படவில்லை என படத் தயாரிப்பு குழு வாதிட்டது.
ஆனால், மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், படத்தை மறுஆய்வுக்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டதாகவும் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் வாதிட்டது.
மேலும், ஜனநாயகன் படத்தில் பாதுகாப்புப் படைகளின் சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கான நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் எனவும் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் வாதிட்டது.
வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் தீர்ப்பை ஜனவரி 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதனிடையே, படத்தின் ரிலீஸை தள்ளிவைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
இந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி பி.டி.ஆஷா, ஜன நாயகன் திரைப்படத்திற்கு உடனே யு/ஏ சான்று வழங்க மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திற்கு உத்தரவிட்டார்.
முன்னதாக, ஜன நாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவதற்கு எதிராக புகார் மனு வந்ததாக உயர் நீதிமன்ற விசாரணையில் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் தெரிவித்திருந்தது.
அதைக் குறிப்பிட்ட நீதிபதி, இதுபோன்ற புகார்களை ஏற்றுக்கொண்டால், அது ஒரு ஆபத்தான போக்கிற்கு வழிவகுக்கும் என கூறியதாக லைவ் லா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே யு/ஏ சான்று வழங்குவதாக தெரிவித்த பிறகு படத்தை மறு ஆய்விற்கு அனுப்ப முடியாது.
வாரிய தலைவர் பிறப்பித்த உத்தரவு அதிகார வரம்பை மீறியதால் நீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நிவாரணம் வழங்குகிறது. படத்தை மறு ஆய்விற்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து ஜன நாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்று வழங்க மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திற்கு உத்தரவிடுகிறோம் என கூறியதாகவும் லைவ் லா செய்தி கூறுகிறது.
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சில நிமிடங்களிலேயே மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்டது.
அப்போது, மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுவிட்டதா என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியதாகவும் அதற்கு உத்தரவு தற்போது தான் வெளியானதாக மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரிய தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததாகவும் லைவ் லா கூறுகிறது.
அதற்கு, முறையீடு செய்ய என்ன அவசரம் எனக் கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி முறையாக மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யுங்கள், நாங்கள் பரிசீலிக்கிறோம் என தெரிவித்ததாகவும் அந்த செய்தி கூறுகிறது.
இதையடுத்து, மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



