You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எடைக் குறைப்பு அறுவை சிகிச்சையில் என்ன ஆபத்து? சென்னை இளைஞர் இறந்தது ஏன்?
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
சென்னையில் உடல் பருமன் குறைக்கும் அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்த விவகாரம் இதுபோன்ற சிகிச்சைகள் பற்றிய கேள்வியை எழுப்பியுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த 26 வயது ஹேமச்சந்திரன், 142 கிலோ எடை கொண்டவராக இருந்தார். அவருக்கு சென்னை குரோம்பேட்டையையில் இருக்கும் தனியார் மருத்துவமனையின் மருத்துவர் பம்மலில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய சென்றுள்ளார்.
“சிகிச்சைக்கு உள்ளே அழைத்து சென்ற சில நிமிடங்களிலேயே ரத்த அழுத்தம் குறைந்துவிட்டது, குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறி ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அந்த மருத்துவமனையில் அனுமதித்த பிறகு, எனது மகன் வெண்டிலேட்டரில் இருப்பதாக தெரிவித்தனர். சிறிது நேரம் கழித்து அவன் இறந்ததாக கூறினர்” என்று ஹேமச்சந்திரனின் தந்தை செல்வநாதன் தெரிவித்தார்.
இளைஞரின் மரணத்துக்கு என்ன காரணம் என்று கண்டறிய தமிழக சுகாதாரத்துறை இரண்டு இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
எடை குறைப்பு அறுவை சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது?
உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை (Bariatric surgery) எனப்படுவது, உணவு குழாய் மற்றும் வயிற்றுப்பகுதியை சுருக்குவதாகும். இந்த அறுவை சிகிச்சைக்கு பின் ஒருவரால் அதிக அளவு உணவு உட்கொள்ள முடியாது. சிலருக்கு நிரந்தரமாகவும், சிலருக்கு தற்காலிகமாவும் சுருக்கப்படும். இந்த அறுவை சிகிச்சை செய்வதால் உடனடியாக எடை குறைந்துவிடாது.
உணவு உட்கொள்ளுதல் குறைந்து, உடற்பயிற்சி மேற்கொண்டு, அதற்கு ஏற்றவாறு உடல் தன்னை தகவமைத்துக்கொள்ளும் போது படிப்படியாக எடை குறையும். இந்த அறுவை சிகிச்சைக்கு பின், உடலில் வித்தியாசத்தை காண, குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகும். இதனை இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மேற்கொள்வார்கள்.
சென்னையில் உள்ள இரைப்பை குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் ரவீந்திர குமரன், “இந்த அறுவை சிகிச்சை ஒரு துளையிட்டு செய்யப்படுவது என்றாலும் இது சாதாரணமானது அல்ல. இருதய அறுவை சிகிச்சை போன்றது. ஒரு நாள் மருத்துவரை பார்த்து விட்டு, அடுத்த வாரம் அறுவை சிகிச்சை செய்யக் கூடாது. அறுவை சிகிச்சை அல்லாத வழிகளில் எடையை குறைக்க நோயாளி முயன்றும் அவரால் குறைக்க முடியாமல் இருந்திருக்க வேண்டும்."
"அறுவை சிகிச்சைக்கு முன், மனநல மருத்துவரின் ஆலோசனை கண்டிப்பாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். நீரிழிவு மருத்துவர், மயக்கவியல் மருத்துவர் ஆகியோரின் ஆலோசனைகள் 100% அவசியம். உடல் பருமனாக இருப்பவர்களுக்கு எந்த அறுவை சிகிச்சை செய்தாலும் அது உயர் ஆபத்துள்ள சிகிச்சையே. உடலின் உள்ளே ஒரு குழாய் செலுத்துவது, நோயாளியை அடுத்த படுக்கைக்கு மாற்றுவது என எல்லாமே சவாலாக இருப்பதால், எந்த கட்டத்திலும் தவறு ஏற்படலாம்.” என்றார்.
'எளிதான அறுவை சிகிச்சை என்று கூறினார்கள்'
பிபிசி தமிழிடம் பேசிய ஹேமச்சந்திரனின் தந்தை செல்வநாதன், “எனது மகன் யூடியூபில் ஒரு மருத்துவரின் வீடியோக்களை பார்த்து, அவரிடம் அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள விருப்பப்பட்டான். கடந்த ஆண்டு புதுச்சேரியிலிருந்து சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை நேரில் சந்தித்தோம். ஒரு காகிதத்தில் எப்படி வயிற்றுபகுதி சுருக்கப்படும் என்று வரைந்து காட்டி, இது மிக எளிதான அறுவை சிகிச்சை என்றும் பயப்பட வேண்டாம் என்றும் அவர் கூறினார். "
"அவரை பார்த்து விட்டு ஊருக்கு திரும்பும் வழியிலேயே அவரது உதவியாளர் செல்போனில் அழைத்து எப்போது அறுவை சிகிச்சை செய்து கொள்ள விருப்பப்படுகிறீர்கள் என்றார். அப்போது முதல் தொடர்ச்சியாக மருத்துவமனையிலிருந்து எனது மகனுக்கு அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன. கடந்த மாதம் மீண்டும் அந்த மருத்துவரை நேரில் வந்து பார்த்தோம்."
"ஏப்ரல் 22ம் தேதி அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கான உடற்தகுதிகள் பரிசோதனைகள் அதே மருத்துவமனையில் செய்யப்பட்டன. எனது மகனுக்கு சர்க்கரை நோய் இருந்தது. எனவே நீரிழிவு மருத்துவர் இன்சுலின் போட்டுக் கொள்ள வேண்டும் என்றார். ஆனால் அறுவை சிகிச்சை மருத்துவர் இன்சுலின் வேண்டாம் என்று கூறிவிட்டார். "
"இருதய அறுவை சிகிச்சை நிபுணரின் ஆலோசனை பெற்றோம். மயக்கவியல் மருத்துவரை கடைசி வரை பார்க்கவில்லை. குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.8 லட்சம் ஆகும் என்றனர். பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இதே மருத்துவரிடம் ரூ.4 லட்சத்துக்கு இதே சிகிச்சை செய்துக் கொள்ளலாம் என்றனர். எனவே பம்மலில் உள்ள மருத்துவமனையில் எனது மகனை 21ம் தேதி அனுமதித்தோம்” என்றார்.
தமிழக அமைச்சர் கூறியது என்ன?
ஹேமச்சந்திரனின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், மரணத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.
ஒருவரது உயரத்துக்கு தகுந்த எடை இருக்கிறதா என்பதை குறிக்கும் அளவு Body Mass Index – பிஎம்ஐ எனப்படும். அந்த பிஎம்ஐ ஒருவருக்கு 35 முதல் 40 வரையில் இருந்தால் அவர் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இருப்பவராக கருதப்படுவார். சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணை நோய்கள் இருந்தால் இந்த அறுவை சிகிச்சை மேலும் அவசியமாகலாம்.
ஏற்கெனவே எடை குறைப்பு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர் எப்படி இருக்கிறார்?
சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 30 வயதாகும் புருஷோத்தமன் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்துக் கொண்டு தனது எடையை வெகுவாக குறைத்திருந்தார்.
“எனக்கு 24 வயதாக இருக்கும் போது 143 கிலோ எடையுடன் இருந்தேன். எனது உடம்பில் கொழுப்பு அளவுக்கு அதிகமாக இருந்தது. நடந்தாலே மூச்சு வாங்கும். படிகட்டு ஏற முடியாது. எனது வீட்டில் எனக்கு தேவையான வசதிகள் இருந்ததால், வீட்டை தவிர வேறு எங்க சென்றாலும் சிரமமாகவே இருந்தது. எதிர்காலத்தில் இருதய பிரச்னை, சர்க்கரை நோய் ஏற்பட அதிக வாய்ப்பிருந்தது” என்றார்.
சென்னையில் தனியார் மருத்துவமனையில், எடை குறைப்பு அறுவை சிகிச்சை முடிந்து ஆறு மாதங்களில் 77 கிலோவாக அவரது எடை குறைந்தது.
“அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் நான் ஐந்து கிலோ எடை குறைக்க வேண்டும் என்று மருத்துவர் கூறினார். என்னால் மூன்று கிலோ வரை குறைக்க முடிந்தது. அறுவை சிகிச்சைக்கு முன் நான் பத்து இட்லிகள் ஒரே நேரத்தில் சாப்பிடுவேன். சிகிச்சைக்குப் பிறகு இரண்டு இட்லிகளுக்கு மேல் சாப்பிட முடியாது."
"சிறு சிறு இடைவெளியில் உணவு எடுத்துக் கொண்டேன். நான் சாப்பிடும் அளவு குறைக்கப்பட்டதால், சத்தான உணவுகளை மட்டுமே எடுத்துக் கொண்டேன். இப்போது எனது கொழுப்பு சரியான அளவில் இருக்கிறது, தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடிகிறது” என்றார்.
'இது கொழுப்பு நீக்கும் அறுவை சிகிச்சை அல்ல'
சில நேரங்களில் இந்த அறுவை சிகிச்சை கொழுப்பு நீக்கும் அறுவை சிகிச்சை என தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. Liposuction எனப்படும் கொழுப்பு நீக்கும் அறுவை சிகிச்சை, உடலில் உள்ள கொழுப்பை உடனடியாக உறிஞ்சு வெளியேற்றுவதாகும். இந்த சிகிச்சையின் மூலமும் எடை குறையும். இது உடம்பின் வயிற்றுப் பகுதி, தொடையின் பின் பகுதி சில நேரங்களில் கைகளில் இருக்கும் கொழுப்பை நீக்க பயன்படுகிறது.
சென்னையில் உள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர் ரமாதேவி, “ஒருவரின் உடல் முழுவதும் பருமனாக இருந்தால் முதலில் அவர் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து உடல் எடையை குறைத்துக் கொள்ளலாம். அதன் பிறகு கொழுப்பு நீக்குதல் சிகிச்சை தேவைப்பட்டால் செய்துக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் எல்லா கொழுப்பையும் நீக்காமல், தவணை முறையில் அகற்றுவது, தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கும்.” என்றார்.
இந்த சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது ஏற்படும் அபாயங்களை மருத்துவர் ரமாதேவி விளக்குகிறார். “உடல் பருமன் குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது, உடல் முழுவதும் மறத்து போவதற்கான மயக்க மருந்து வழங்கப்படும். அது சரியான அளவில் வழங்கப்படவில்லை என்றால், அந்த சிகிச்சை உயிருக்கு ஆபத்தாகும்” என்றார்.
மேலும், “கொழுப்பு நீக்கும் சிகிச்சையின் போது, உடலில் உள்ள ரத்த குழாய்கள் அறுபடலாம். அதை தவிர்ப்பதற்காக அட்ரினலின் கலக்கப்பட்ட திரவம் உடலில் செலுத்தப்படும். சில நேரங்களில் இந்த திரவத்தின் அளவு தேவைக்கு அதிகமாக இருந்தால் அது இருதயத்தை பாதித்து மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு."
"ஏற்கெனவே இருதய நோய்கள் இருப்பவர்களுக்கு கூடுதல் ஆபத்தாக இருக்கலாம். இது அல்லாமல் சிலருக்கு உடலில் செலுத்தப்படும் மருந்துகள் காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டால் அதுவும் உயிருக்கு ஆபத்தாக முடியலாம்.” என்றார்.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் இந்த சேவைகள் வழங்கப்படுவதில்லை. இந்த சிகிச்சைகளுக்கு சுமார் 2 லட்சம் முதல் எட்டு லட்சம் வரை செலவாகக் கூடும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)