கன்னியாகுமரி: வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகம் அறிந்திராத பிரமிப்பூட்டும் சுற்றுலா தலங்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மகேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இயற்கை எழில் கொஞ்சும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்குப் பஞ்சமில்லை. கன்னியாகுமரி, திற்பரப்பு அருவி, பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டி பாலம் என அனைவருக்கும் தெரிந்த சுற்றுலா தலங்கள் ஏராளம்.
ஆனால் உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டும் சென்று வருகின்ற, வெளியூர் சுற்றுலாப் பயணிகள் அதிகம் அறியாத சுற்றுலா தலங்களும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளன.
லெமூர் கடற்கரை
நாகர்கோவில் நகரிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவிலும் கன்னியாகுமரியிலிருந்து 32 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது லெமூர் பீச்.
இங்குள்ள நீலக்கடலும் நீண்ட மணல் பரப்பைக் கொண்ட கடற்கரையும் பார்ப்பதற்கு ரம்மியம். கடற்கரை மணல் பரப்பு சுத்தமாக இருப்பது கூடுதல் சிறப்பு.
இந்தக் கடற்கரைக்கு ஆயிரம் கால் பொழிமுகம் என்ற பெயரும் உண்டு. பேச்சிப்பாறை அணையிலிருந்து கால்வாய் பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் கடலில் கலக்கும் கடற்கரைகளில் லெமூர் கடற்கரையும் ஒன்று.

சமீப காலம் வரை உள்ளூர் மக்கள் மட்டுமே அறிந்திருந்த இந்த கடற்கரைக்கு தற்போது வெளியூர் சுற்றுலா பயணிகளும் வரத் தொடங்கியுள்ளனர்.
நாகர்கோவிலில் இருந்து ராஜாக்கமங்கலம் வழியாக குளச்சல் செல்லும் சாலையில் கணபதிபுரம் பகுதியில் இக்கடற்கரை அமைந்துள்ளது.
நாகர்கோவிலில் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து குளச்சல், மண்டைக்காடு வழித்தடங்களில் செல்கின்ற அரசுப் பேருந்துகளில் ஏறி கணபதிபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஆட்டோவில் லெமூர் கடற்கரைக்கு செல்லலாம்.
சொத்தவிளை கடற்கரை

லெமூர் கடற்கரையைப் போலவே மிக நீண்ட மணல் பரப்பைக் கொண்ட அழகான மற்றொரு கடற்கரை சொத்தவிளை. 4 கி.மீ., க்கு மேல் நீண்டுள்ள இந்தக் கடற்கரை தமிழ்நாட்டில் உள்ள மிக நீண்ட இயற்கை எழில்மிக்க கடற்கரைகளில் ஒன்று.
பெரிய மணல் குன்று, சவுக்கு மரங்கள் என கடற்கரையின் அழகை மெருகூட்டும் அம்சங்கள் இங்கு உண்டு. இங்குள்ள காட்சி கோபுரத்தில் ஏறி கடற்கரையையும் நீலக்கடலையும் ரசிப்பது ஒரு தனி அனுபவம்.
நாகர்கோவிலில் இருந்து 14 கி.மீ., தொலைவில் புத்தளம் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது சொத்தவிளை கடற்கரை. விடுமுறை நாட்களில் மட்டுமே கூட்டம் காணப்படும் இக்கடற்கரை கன்னியாகுமரியில் இருந்து சுமார் 13 கி.மீ., தொலைவில் இருந்தாலும், இக்கடற்கரைக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் வருவது மிகக் குறைவே.
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து பறக்கை வழியாக பள்ளம் செல்கின்ற அரசுப் பேருந்தில் ஏறி அம்பலபதி பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து சுமார் 1.5 கி.மீ., தொலைவில் உள்ள கடற்கரைக்கு நடந்தோ அல்லது ஆட்டோவிலோ செல்லலாம்.
வட்டக்கோட்டை

கன்னியாகுமரியில் இருந்து அஞ்சுகிராமம் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது வட்டக்கோட்டை.
கடலோர பாதுகாப்பிற்கான முக்கியத் தளமாக விளங்கியுள்ள இக்கோட்டை திருவிதாங்கூர் மன்னர்களால் கட்டப்பட்டது. கருங்கல்லால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு தற்போது இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கோட்டையின் நடுவே ஒரு குளமும் சிறிய பூங்காவும் அமைந்துள்ளது. கோட்டையின் மேலிருந்து கடல் அழகை ரசிப்பதற்கென்றே சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம்.
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து அஞ்சுகிராமம் செல்கின்ற பேருந்தில் அஞ்சுகிராமம் சென்று, அங்கிருந்து கன்னியாகுமரி செல்கின்ற பேருந்தில் ஏறி வட்டக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.
கன்னியாகுமரியில் இருந்து செல்வதானால் அஞ்சுகிராமம் வழியாகச் செல்கின்ற பேருந்தில் ஏறி வட்டக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து செல்லவேண்டும். இல்லையேல், கன்னியாகுமரியில் இருந்து ஆட்டோ அல்லது வாடகை கார் மூலமாகவும் செல்லலாம்.
காளிகேசம்

நாகர்கோவிலில் இருந்து சுமார் 32 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது காளிகேசம். அடர்ந்த வனப்பகுதியான இங்கு காளிகேசம் நதியும் ஒரு காளி கோவிலும் உள்ளது.
குறைந்த ஆழம் உள்ள பாறைகள் நிறைந்த இந்த ஆற்றில் குளித்து மகிழவும், இங்குள்ள குளுமையான காலநிலையை அனுபவிக்கவும் சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்குச் செல்வது வழக்கம்.
மழைக் காலங்களில் காளிகேசம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் இப்பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்படுவதும் உண்டு.
இப்பகுதிக்குச் செல்ல காளிகேசம் வனத்துறை சோதனைச் சாவடியில் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து காளிகேசத்திற்கு நேரடி பேருந்து வசதி உள்ளது. ஆனால் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாத் தலம் என்பதால் சொந்த வாகனங்களில் செல்வதே வசதியாக இருக்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












