You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சத்தீஸ்கர் தேர்தல்: காங்கிரசிடமிருந்து ஆட்சியைக் கைப்பறுகிறது பா.ஜ.க
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கிறது.
பாஜக 56 தொகுதிகளிலும் காங்கிரஸ் 34 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.
தற்போது முதலமைச்சராக இருக்கும் பூபேஷ் பாகெல், பின்னடைவைச் சந்தித்து வருகிறார். அவர் தனது உறவினரும் பா.ஜ.க வேட்பாளருமான விஜய் பாகெலை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
முன்னாள் முதல்வரும் பா.ஜ.க வேட்பாளருமான ரமன் சிங், ராஜ்னந்த்காவ் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.
சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17-ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை.
சத்தீஸ்கர் சட்டமன்றத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை சரியாக காலை 8:00 மணிக்குத் தொடங்கியது.
வெற்றிக்குப் பிறகு ரமன் சிங் என்ன சொன்னார்?
இந்நிலையில் பேசிய முன்னாள் முதல்வரும் பா.ஜ.க வேட்பாளருமான ரமன் சிங், தற்போதைய முதல்வர் பூபேஷ் பகல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் அதனால்தான் மக்கள் பிரதமர் மோதியின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
பிபிசியிடம் பேசிய அவர், பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் நம்பியிருக்கின்றனர் என்றார். மேலும் அவர் காங்கிரஸ் ஆட்சியின் மீது ஊழல் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
பெண்களுக்கான நலத்திட்டங்களும், முன்னேற்றத்திறகான திட்டங்களும் தங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்ததாக அவர் கூறினார்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு என்ன சொன்னது?
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பின் படி, காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என பெரும்பாலான கணிப்புகள் தெரிவித்துள்ளன.
ஏபிபி நியூஸ்-சி கணிப்பின்படி, பாஜக 36 முதல் 48 இடங்களிலும், காங்கிரஸ் 41 முதல் 53 இடங்களிலும், மற்ற கட்சிகள் 0 முதல் 4 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
நியூஸ் 24 மற்றும் டுடே சாணக்யாவின் படி, மாநிலத்தில் காங்கிரஸ் முழு பெரும்பான்மை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கருத்துக்கணிப்பின்படி, பாஜக 25 முதல் 41 இடங்களையும், காங்கிரசுக்கு 49 முதல் 65 இடங்களையும், மற்றவை 0 முதல் 3 இடங்களையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பின்படி, பாஜக 36-46 இடங்களையும், காங்கிரஸுக்கு 40-50 இடங்களையும், மற்ற கட்சிகள் 1 முதல் 5 இடங்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா டிவியின் கருத்துக்கணிப்பின்படி, காங்கிரசுக்கு 46-56 இடங்களும், பாஜக 30-40 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 3 முதல் 5 இடங்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டைம்ஸ் நவ் இ.டி.ஜி. கருத்துக்கணிப்பின்படி, காங்கிரஸ் 48 முதல் 56 இடங்களையும், பாஜக 32 முதல் 40 இடங்களையும், மற்ற கட்சிகள் 2 முதல் 4 இடங்களையும் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)