You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை விமான சாகசத்தை காண மெரினா சென்ற 5 பேர் உயிரிழக்க என்ன காரணம்? கள ஆய்வு
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்று, உயிரிழந்த கார்த்திகேயனின் குடும்பம் நிலைகுலைந்து நிற்கிறது. இந்த நிகழ்வையொட்டி மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்திருக்கின்றனர். எங்கே பிரச்னை ஏற்பட்டது?
சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகசத்தைப் பார்ப்பதற்காக திருவொற்றியூரில் இருந்து கணவருடனும் குழந்தையுடனும் வந்த சிவரஞ்சனி இப்போது நொறுங்கிப் போய் நிற்கிறார். விமான சாகச நிகழ்ச்சி முடிந்த பிறகு, கூட்டம் அதிகமாக இருந்ததால் மனைவியையும் குழந்தையையும் ஓரிடத்தில் நிற்கச் சொல்லிவிட்டு, இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்ற கணவர் கார்த்திகேயன் திரும்ப வரவேயில்லை.
திருவொற்றியூர் ஆர்.எம்.வி. நகர் பகுதியைச் சேர்ந்த 34 வயதான கார்த்திகேயன் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். அவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவியும் வேதிக் கிருஷ்ணா என்ற இரண்டரை வயது மகனும் இருக்கின்றனர். விமான சாகசக் காட்சியைப் பார்ப்பதற்காக தங்களுடைய இரு சக்கர வாகனத்தில் கார்த்திகேயன், சிவரஞ்சனி, அவர்களுடைய குழந்தை ஆகிய மூவரும் மெரினாவுக்கு வந்தனர்.
விமான சாகசம் முடிந்ததும், எல்லோரும் ஒரே நேரத்தில் வெளியேறியதால் பல இடங்களிலும் நெரிசல் ஏற்பட்ட நிலையில், மனைவியை சென்னை பல்கலைக்கழகத்திற்கு எதிரில் நிற்கச் சொல்லிவிட்டு, சற்று தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துவருவதற்காகச் சென்றிருக்கிறார் கார்த்திகேயன்.
‘ஒட்டுமொத்த குடும்பமும் நிலைகுலைந்து விட்டது’
ஆனால், ஒன்றரை மணி நேரம் ஆகியும் அவரிடம் இருந்து தகவல் ஏதும் வரவில்லை. அந்தப் பகுதியில் லட்சக்கணக்கானவர்கள் குவிந்திருந்ததால், கார்த்திகேயனை சிவரஞ்சனியால் செல்போனிலும் தொடர்புகொள்ள முடியவில்லை. இரண்டரை மணிவாக்கில் கார்த்திகேயனின் செல்போனைத் தொடர்புகொள்ள முடிந்தாலும், அதனை யாரும் எடுக்கவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு, அதனை எடுத்துப் பேசிய ஒருவர், கார்த்திகேயன் தரையில் மயங்கி விழுந்திருப்பதாக சொன்னார்.
பதறியடித்து சிவரஞ்சனி அங்கே சென்றபோது, கார்த்திகேயன் ஒரு பிளாட்பாரத்தில் விழுந்து கிடந்தார். "நாங்கள் நின்ற இடத்திலிருந்து சிறிது தூரத்திலேயே அவர் கிடந்தார். அப்படியானால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக யாரும் அவரைக் கவனிக்கவில்லை. காவல்துறையையும் மற்றவர்களையும் நம்பித்தானே இந்த நிகழ்ச்சிக்கு வந்தோம்?" எனக் கேள்வியெழுப்புகிறார் சிவரஞ்சனி.
இதற்குப் பிறகு அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சைக்கென சேர்க்கப்பட்டார். ஆனால், சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
கார்த்திகேயனின் தந்தை கொரோனா காலகட்டத்தில்தான் மரணமடைந்திருந்த நிலையில், தாய் கீதாவும் கார்த்திகேயனை நம்பியே வாழ்ந்துவந்தார். "எங்கள் ஒட்டுமொத்தக் குடும்பமும் கார்த்தியை நம்பித்தான் வாழ்ந்துவந்தோம். இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. இரண்டரை வயதுக் குழந்தைக்கு யார் பதில் சொல்வது?" என்கிறார் கீதா.
கார்த்திகேயனின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவருடைய மரணத்திற்கு என்ன காரணம் என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை. வெயிலின் தாக்கமா அல்லது நீரிழப்பா அல்லது வேறு காரணங்களா என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவரக்கூடும்.
சென்னை மெரினா கடற்கரையில் என்ன நடந்தது?
சென்னையில் ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த விமான சாகச நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்று உயிரிழந்த ஐந்து பேரில் கார்த்திகேயனும் ஒருவர். ஸ்ரீநிவாஸன், ஜான் பாபு, தினேஷ் உள்ளிட்ட மேலும் நான்கு பேரும் இதேபோல மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கின்றனர்.
விமானக் காட்சி முடிந்த பிறகு, கடற்கரையில் கூடியிருந்த அனைவரும் ஒரே நேரத்தில் அங்கிருந்து வெளியேற முயன்றபோது, கடற்கரையை ஒட்டியுள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமையன்று வெயிலின் தாக்கமும் வழக்கத்தைவிட அதிகமாகவே அதாவது, 34.3 முதல் 35 டிகிரி அளவுக்கு இருந்தது. இது இயல்பான அளவைவிட 0.8 முதல் 1.5 டிகிரி அளவுக்கு அதிகம் என சென்னை வானிலை ஆய்வுமையத்தின் வெப்பநிலை அறிக்கை குறிப்பிடுகிறது.
நெரிசல், வெயில், குடிக்க குடிநீர் கிடைப்பதில் ஏற்பட்ட சிரமம் ஆகியவற்றால் விமானக் காட்சியைப் பார்க்க வந்தவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர். இருநூற்றுக்கும் மேற்பட்டோர் மயங்கிவிழுந்தனர். இவர்களில் 90-க்கும் மேற்பட்டோர் ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சைபெற்று வீடு திரும்பினர்.
விமான சாகச நிகழ்ச்சியை ஒட்டி மெரினா கடற்கரை, அதனை ஒட்டிய சாலைகள், ரயில் நிலையங்களில் ஏற்பட்ட நெரிசல் குறித்து நேற்று விளக்கமளித்த மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்திய விமானப் படை கேட்டுக்கொண்ட எல்லா ஏற்பாடுகளையும் செய்துதந்ததாக குறிப்பிட்டார். ஆனால், மரணங்கள் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி துவங்கி பல்வேறு அரசியல் கட்சியினரும் உயிரிழப்புகள் குறித்து அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்த நிலையில், திங்கட்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த மா. சுப்பிரமணியன், மரணங்களை உறுதிசெய்தார்.
போதிய ஏற்பாடுகள் இல்லையா?
சென்னை மெரினா கடற்கரையில் விமானக் காட்சிக்கு லட்சக்கணக்கானவர்கள் வந்து குவிந்த நிலையில், ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தாலும் அது போதுமானதாக இல்லை. வைக்கப்பட்டிருந்த பல தொட்டிகளில் ஒரே ஒரு குழாய் மட்டுமே பொருத்தப்பட்டிருந்ததால், அதில் நீரைப் பிடிக்க பார்வையாளர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியிருந்தது.
மெரினா கடற்கரையில் கடை வைத்திருந்தவர்கள் கூட்டத்தை எதிர்பார்த்திருந்தனர் என்றாலும் இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கவில்லையென்பதால், அவர்களிடம் இருந்த தண்ணீர், குளிர் பானங்கள் போன்றவையும் ஒன்றிரண்டு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன. இதனால், பலர் குடிநீருக்காக அலைபாய்ந்தனர்.
"எங்களுக்கு ஒரு அடையாள அட்டை கொடுத்து, வெளியில் போக, வர அனுமதித்திருந்தால் தண்ணீர் தீரத்தீர எடுத்துவந்திருப்போம்," என அந்தப் பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் தெரிவித்தனர்.
விமான சாகசத்தை ஒட்டி லட்சக்கணக்கானோர் கடற்கரையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்தும்கூட, சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையிலான வழித்தடத்தில் இயங்கிய பறக்கும் ரயில் சேவை, இந்தக் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் இயக்கப்படாதது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.
மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலை, அண்ணா சாலை, வாலஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட சாலைகளில் விமான சாகசம் முடிந்து பல மணி நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தப் போக்குவரத்து நெரிசலில் பல ஆம்புலன்சுகளும் சிக்கிக்கொண்டன.
ஒரே நேரத்தில் இத்தனை லட்சம் பேர் ஒரு விமான சாகச நிகழ்ச்சியை கண்டு ரசித்தது சாதனையாக முன்னிறுத்தப்பட்டாலும், இந்த நிகழ்வு தொடர்பாக ஏற்பட்ட உயிரிழப்புகள் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)