தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் யார் ஆட்சி அமைப்பார்கள்?

தொங்கு சட்டப்பேரவை, தவெக, அரசியல்

பட மூலாதாரம், TVK

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தொங்கு சட்டப்பேரவை அமையும் சூழல் உருவாகியுள்ளது.

தற்போது நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக அதிக இடங்களில் வென்றுள்ள கட்சி என்ற முறையில், அந்தக்கட்சிக்கே ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்று அரசியல் அறிவியல் பேராசிரியர்கள் கூறுகின்றனர்.

ஆனால் தவெக எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை என்ற நிலையில், திமுக அல்லது அதிமுக கூட்டணிகளை சேர்ந்த கட்சிகள் ஆதரவு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளின்படி, தவெக அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி மொத்தம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 118 இடங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

இதனால் தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமையுமென்ற நிலை உருவாகியுள்ளது.

தொங்கு சட்டப்பேரவை, தவெக, அரசியல்

பட மூலாதாரம், Tndipr

படக்குறிப்பு, கோப்புப் படம்

தொங்கு சட்டப்பேரவை என்றால் என்ன?

பெரும்பான்மை அரசை அமைப்பதற்குத் தேவையான குறைந்தபட்ச இடங்களை எந்தவொரு அரசியல் கட்சியும், தேர்தலுக்கு முந்தைய கூட்டணியும் பெறாதபட்சத்தில் ஏற்படுவது தொங்கு சட்டப்பேரவை எனப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் 234 தொகுதிகள் உள்ள நிலையில், தனிப்பெரும்பான்மைக்கு118 இடங்களில் வெற்றி பெறவேண்டும். இந்தத் தேர்தலில் எந்தத் தனிக்கட்சிக்கும், கூட்டணிக்கும் இந்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

இப்படியொரு நிலை ஏற்படும்பட்சத்தில் என்ன நடக்கும் என்பதை கோவை அரசு கலைக்கல்லூரியின் அரசியல் அறிவியல் துறை தலைவரும், ஓர் இலவச ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தின் நிறுவனருமான பேராசிரியர் கனகராஜ் பிபிசியிடம் விளக்கினார்.

"தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டால் எத்தகைய நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை அரசியல் அமைப்புச் சட்டம் விளக்கியுள்ளது. இதில் முதற்கட்டமாக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பார். அந்தக் கட்சிக்கு ஒரு காலஅவகாசம் வழங்கப்படும்."

"அப்போது சட்டப்பேரவையில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதை அந்தக் கட்சி அல்லது கூட்டணி உறுதி செய்ய வேண்டும். சில கட்சிகளில் வெளியிலிருந்து ஆதரவு அளிக்கலாம் அல்லது கூட்டணி ஆட்சி என்று தீர்மானிக்கப்பட்டு, அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் தரப்படலாம்." என்கிறார் அவர்.

"பெரிய கட்சி, தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்து, பேச்சுவார்த்தை மூலமாக அதிகாரப் பகிர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திடலாம். அதன் அடிப்படையில், கூடுதலாகத் தேவைப்படும் உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று, ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையை வாக்கெடுப்பின் மூலமாக நிரூபிக்கலாம்." என்கிறார் பேராசிரியர் கனகராஜ்.

"தேர்தலைத் தவிர்க்கும் பொருட்டு, வேறு கட்சிகள் ஆட்சியமைக்க உரிமை கோரும்பட்சத்தில் அதற்கு ஆளுநர் முடிவெடுத்து அழைப்பு விடுக்கலாம். எதற்குமே வாய்ப்பில்லாதபட்சத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, மீண்டும் ஒரு முறை தேர்தல் நடத்தப்படலாம்" என்றும் அவர் கூறுகிறார்.

தொங்கு சட்டப்பேரவை, தவெக, அரசியல்

தமிழக அரசியலில் இதற்கு முன்பு என்ன நடந்தது?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தமிழக அரசியலில் மெட்ராஸ் மாகாணத்தில் தொங்கு சட்டப்பேரவை என்ற நிலை ஏற்பட்டது. கடந்த 1952ல் நடந்த தேர்தலில் சட்டப்பேரவையில் 375 இடங்கள் இருந்தன. அப்போது பெரும்பான்மைக்கு 188 உறுப்பினர்கள் வேண்டுமென்ற நிலையில், காங்கிரஸ் 152 இடங்களில் மட்டுமே வென்றது. அதன்பின் சில கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

தமிழ்நாட்டில் கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு வித்தியாசமான சூழல் ஏற்பட்டது.

அப்போது திமுக தனியாக 96 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால் திமுக கூட்டணி மொத்தம் 163 இடங்களில் வெற்றி பெற்றதால், கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பாமக துணையுடன் ஆட்சி அமைத்தது.

தேர்தலுக்கு முந்தைய கூட்டணி என்ற முறையில், கூட்டணி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தனர். ஐந்தாண்டுகள் முழுமையாக அந்த ஆட்சி நீடித்தது.

ஆனால் திமுக தனிப்பெரும்பான்மை பெறாத காரணத்தால், அந்த ஆட்சியை அப்போதைய அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா, ''மைனாரிட்டி திமுக அரசு'' என்று தொடர்ந்து குறிப்பிட்டு வந்தார்.

அதற்கு அன்றைய முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி, ''இது மைனாரிட்டி அரசு அல்ல. மைனாரிட்டிகளுக்கான அரசு'' என்று விளக்கம் கொடுத்தார்.

இதுபற்றி பிபிசியிடம் குறிப்பிட்ட திமுக மாநிலங்களவை உறுப்பினரான பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ''அப்போது திமுக சிறுபான்மை அரசாக இருந்தது என்கிற கருத்து உள்ளது. ஆனால் திமுக கூட்டணி அப்போது 163 இடங்களில் வென்றது. கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களைக் கொடுத்ததால்தான் திமுக பெரும்பான்மை இடங்களைப் பெற முடியவில்லை." என்றார்.

தொங்கு சட்டப்பேரவை, தவெக, அரசியல்

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, கோப்புப் படம்

தற்போது என்ன நடக்கும்?

இதுபற்றி வெற்றி நிலவரம் முழுமையாக கிடைக்கப் பெறுவதற்கு முன்னதாக பிபிசியிடம் விளக்கிய பேராசிரியர் கனகராஜ், '' இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி, தவெக 100 இடங்களுக்கும் மேலாக முன்னிலையில் உள்ளது. அதனால் அந்தக் கட்சிக்குதான் முதலில் ஆளுநர் அழைப்பு விடுப்பார். அக்கட்சிக்கு இன்னும் சுமார் 10 எம்எல்ஏக்களின் ஆதரவுதான் தேவை. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தெரிவிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதனால் மீண்டும் தேர்தல் வரவாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.'' என்றார்.

பிபிசியிடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், ''தவெக ஆட்சி அமைப்பதில் பெரிய பிரச்னை எழ வாய்ப்பில்லை. ஏற்கெனவே காங்கிரசுக்கும், தவெகவுக்கும் இடையில் ஓர் இணக்கம் உள்ளது. அதனால் அவர்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள். கம்யூனிஸ்ட் கட்சி அப்படி மாறுமென்று நான் நினைக்கவில்லை. அதேபோன்று திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் ஜெயிக்காத வேறு சில கட்சிகளும் கூட ஆதரவு தெரிவிக்கலாம். அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் ஆதரிக்கலாம். அதன் காரணமாக தவெக நிச்சயமாக ஆட்சி அமைத்துவிடும் என்றே நம்புகிறேன். இப்போதே அதற்கான வேலைகள் துவங்கியிருக்கும்.'' என்றார்.

'ஆட்சி அதிகாரத்தில் பங்கு'

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடந்தபோது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோஷம் ஓங்கி ஒலித்தது. காங்கிரஸ் கட்சியின் கிரிஷ் சோடங்கர், பிரவீண் சக்கரவர்த்தி, எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆகியோர் இந்த கோரிக்கையை பலவிதமாக வலியுறுத்திக் கொண்டே இருந்தனர்.

அதிலும் மாணிக்கம் தாகூர், "மக்கள் முடிவு செய்வார்கள் கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை. 2006இல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தவறு" என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் 'கூட்டணி ஆட்சி கிடையாது' என்றும், 'ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது' என்றும் திட்டவட்டமாககக் கூறியிருந்தார்.

அதேநேரத்தில் தவெக தலைவர் விஜய், 'ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு