காணொளி: சிவகங்கை பேருந்து விபத்து - காயமடைந்தவர்கள் கூறியது என்ன?
கடந்த திங்களன்று தென்காசியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பலியான சோகம் மறைவதற்குள், ஒரே வாரத்தில் நிகழ்ந்த மற்றொரு பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஞாயிறன்று மாலை , அரசு பேருந்து ஒன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு சென்றுள்ளது. ஓட்டுநர் சுதாகர் இப்பேருந்தை இயக்கியுள்ளார்.
மறுபுறம், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூர் வழியாக காரைக்குடிக்கு மற்றொரு அரசு பேருந்து சென்றது. இந்த பேருந்தை சென்ராயன் இயக்கியுள்ளார்.
இரு பேருந்துகளும் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சென்றபோது நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் ஓட்டுநர் சென்ராயன், பயணிகள் செல்வம், மல்லிகா, முத்துமாரி, கல்பனா, குண லட்சுமி, தெய்வானை, லாவண்யா உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் திருப்பத்தூர், காரைக்குடி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக 10 பேர் மதுரை, சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குழந்தைகள் உட்பட பலரும் காயமடைந்திருந்ததால் முதலில் யாரை மீட்பது என பதற்றமடைந்ததாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆனந்த் கூறுகிறார்.
விபத்தின்போது என்ன நடந்தது என்பது பற்றி காயமடைந்தவர்கள் பிபிசி தமிழிடம் பேசினர்.
விபத்து தொடர்பாக நாச்சியாபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு தரப்பில் 3 லட்சம் ரூபாயும், பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத், மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பேருந்து இயக்கிய சுதாகர் மீது அதிவேகமாக, அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



