மேற்கு வங்கத்தில் வன்முறையாக மாறிய வக்ஃப் சட்ட எதிர்ப்பு போராட்டம் – என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, மேற்குவங்கம்
மேற்கு வங்கத்தில் வன்முறையாக மாறிய வக்ஃப் சட்ட எதிர்ப்பு போராட்டம் – என்ன நடந்தது?

மேற்கு வங்கத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர். பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. என்ன நடந்தது?

சனிக்கிழமை மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் மாணவர் இஜாஸ் அகமது, ஹர்கோவிந்த தாஸ் மற்றும் அவரது மகன் சந்தன் தாஸ் என 3 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன.

பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசியிடம் பேசிய முக்கிய வங்க பத்திரிக்கையில் பணியாற்றும் ஒரு செய்தியாளர், தந்தை மகன் வெட்டி கொல்லப்பட்டதற்கான அடையாளங்கள் அவர்களின் உடலில் இருந்ததாக கூறுகிறார். அதே போல மாணவர் இஜாஸ் அகமது சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். எனினும், போலீஸார் இதை உறுதிப்படுத்தவில்லை.

இந்த வன்முறையில் பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வீடு, கடைகள் சூறையாடப்பட்டன. சில இடங்களில் கோயில் மற்றும் மசூதி குறிவைக்கப்பட்டன. இந்து, முஸ்லிம் இரு தரப்பும் மாறிமாறி குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த விவகாரத்தில் குறைந்தது 150 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஏ.என்.ஐ. செய்தி கூறுகிறது. மக்கள் அமைதியை கடைபிடிக்குமாறு மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். அரசியல் லாபத்துக்காக வன்முறைகளை தூண்டாதீர்கள்," என அவர் தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது வாக்கு வங்கியை திருப்திப்படுத்த வன்முறையை தூண்டுவதாக திரிணாமுல் காங்கிரஸ் மீது பாஜக குற்றம் சாட்டுகிறது. வன்முறையை அடுத்து மத்திய பாதுகாப்புப் படைகளை உடனடியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துமாறு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு