ஆரவல்லி மலைத்தொடரில் புதிய சுரங்க குத்தகைக்கு தடை - மத்திய அரசின் அறிவிப்பு என்ன?

    • எழுதியவர், அபிஷேக் டே
    • பதவி,

ஆரவல்லி மலைத்தொடரில் எந்தவொரு புதிய சுரங்க குத்தகைக்கும் ஒப்புதல் அளிப்பதற்கு மாநிலங்களுக்கு தடை விதித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி முதல் குஜராத் வரை பரவியிருக்கும் ஆரவல்லி மலைத்தொடரை சட்டவிரோத சுரங்கங்களிலிருந்து பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கை இது என அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அந்த அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆரவல்லி முழுமைக்கும் இந்த தடை பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரவல்லி மலைத்தொடரை பாதுகாக்கும் பொருட்டும் ஒழுங்குபடுத்தப்படாத சுரங்க நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் பொருட்டும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்க நடவடிக்கைகள் தடை செய்யப்பட வேண்டிய கூடுதலான பகுதிகள்/மண்டலங்களை அடையாளம் காணுமாறு இந்திய வன ஆய்வு மற்றும் கல்வி மன்றத்திற்கு (ICFRE) மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஆரவல்லி பகுதியில் ஒருங்கிணைந்த மற்றும் அறிவியல் ரீதியான நிலையான சுரங்கத்திற்கான நிர்வாக திட்டம் (MPSM)ஒன்றை வகுக்கவும் ICFREக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அப்பகுதியில் நடந்துவரும் சுரங்க நடவடிக்கைகள் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கடுமையாக ஒழுங்குபடுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடர் ராஜஸ்தான் முதல் ஹரியாணா, குஜராத், டெல்லி ஆகிய பகுதிகள் வரை பரவி அமைந்துள்ளது.

இந்த மலைத்தொடர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் மறுவரையறை வழங்கியுள்ளதைத் தொடர்ந்து வட இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

மத்திய அரசின் பரிந்துரைகளைத் தொடர்ந்து நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய வரையறையின் கீழ், சுற்றியுள்ள நிலப்பரப்பில் இருந்து குறைந்தது 100 மீட்டர் (328 அடி) உயரத்தில் இருக்கும் நிலப்பரப்புகள் மட்டுமே 'ஆரவல்லி மலை' என்று அழைக்கப்படும்.

ஐந்நூறு மீட்டர் இடைவெளிக்குள் இத்தகைய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மலைகள் அமைந்திருந்தால், அவற்றுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியுடன் சேர்த்து அது 'ஆரவல்லி மலைத்தொடர்' எனக் கருதப்படும்.

ஆரவல்லி மலைத்தொடரை அதன் உயரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வரையறுப்பது, புதர்க்காடுகள் நிறைந்து சூழலியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் மலைத்தொடரின் பகுதிகளை, சுரங்க வேலைகள் மற்றும் கட்டுமான செயல்பாடுகளில் இருந்து பாதுகாப்பதைத் தடுக்கும் அபாயம் இருப்பதாக சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் வாதிடுகின்றனர்.

ஆனால், இந்தப் புதிய வரையறையின் நோக்கம் பாதுகாப்பைத் தளர்த்துவது அல்ல, மாறாக ஒழுங்குமுறைகளை வலுப்படுத்துவதும், நாடு முழுவதும் ஒரே சீரான முறையைக் கொண்டு வருவதுமே என்று மத்திய அரசு தரப்பில் முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மக்கள் போராட்டத்திற்கான காரணம் என்ன?

கடந்த வார இறுதியில் குருகிராம், உதய்பூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ளூர் மக்கள், விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஒன்றிணைந்து அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தினர்.

'பீப்பிள் ஃபார் ஆரவல்லிஸ்' (People for Aravallis) அமைப்பின் நிறுவன உறுப்பினர் நீலம் அலுவாலியா பிபிசியிடம் பேசியபோது, "இந்தப் புதிய வரையறை, வடமேற்கு இந்தியாவில் 'பாலைவனமாதலைத் தடுப்பதிலும், நிலத்தடி நீரைப் பெருக்குவதிலும், வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதிலும்' ஆரவல்லி மலைத்தொடர் கொண்டுள்ள முக்கியத்துவத்தைச் சீர்குலைக்கும் அபாயம் உள்ளது" என்றார்.

பாலைவனமாக்கலைத் தடுப்பதிலும், நிலத்தடி நீரைப் பெருக்குவதிலும், வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதிலும், தாழ்வான, புதர்களால் மூடப்பட்ட மலைகள் முக்கியப் பங்கு வகிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

"ஆரவல்லி மலைத்தொடரை வெறும் உயரத்தை மட்டும் வைத்து வரையறுக்கக் கூடாது. அதன் சுற்றுச்சூழல், நிலவியல் மற்றும் காலநிலை ரீதியான பங்களிப்பைக் கொண்டே வரையறுக்க வேண்டும்" என்று ஆரவல்லி மலைத்தொடரைப் பாதுகாக்கும் இயக்கத்துடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் ஆர்வலர் விக்ராந்த் டோங்காட் பிபிசியிடம் கூறினார்.

சர்வதேச அளவில், மலைகள் மற்றும் மலை அமைப்புகள் உயர வரம்புகளால் அல்ல, அவற்றின் செயல்பாடுகளால் அடையாளம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"உயரம் எவ்வளவு இருந்தாலும், நிலவியல் ரீதியாக ஆரவல்லி மலைத்தொடரின் ஒரு பகுதியாக இருந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் பாலைவனமாக்கலைத் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் எந்த நிலப்பரப்பும் ஆரவல்லி மலைத்தொடரின் பகுதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்."

நிலவியல் , சூழலியல், காட்டுயிர் வழித்தடம், காலநிலை மீள்தன்மை உள்ளிட்ட அறிவியல் அளவுகோல்களைப் பயன்படுத்தி ஆரவல்லி பகுதிகளை அரசாங்கம் வரையறுக்க வேண்டும் என்று ஆர்வலர்கள் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

நீதிமன்றத்தின் இந்தப் புதிய வரைமுறை சுரங்கத் தொழில், கட்டுமானம் மற்றும் வணிக நடவடிக்கைகளை ஊக்குவிக்கக்கூடும் என்றும், இதனால் சுற்றுச்சூழல் சேதமடையும் அபாயம் அதிகரிக்கும் என்றும் தொங்கட் எச்சரிக்கிறார்.

புதிய வரையறை கடுமையான சுற்றுச்சூழல் சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்து, எதிர்க்கட்சிகள் தங்கள் விமர்சனத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ஆரவல்லி மலைத்தொடரைப் பாதுகாப்பது என்பது "டெல்லியை பாதுகாப்பதற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்றார்.

ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் டிகா ராம் ஜூலி இந்த மலைத்தொடரை மாநிலத்தின் "உயிர்நாடி" என்று அழைத்தார். மேலும் இது இல்லையெனில், "டெல்லி வரையிலான ஒட்டுமொத்தப் பகுதியும் பாலைவனமாக மாறியிருக்கும்" என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசு முன்பு கூறியது என்ன?

மத்திய அரசாங்கம் இந்தக் கவலைகளைக் குறைத்து மதிப்பிட முயன்றது.

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், புதிய வரைமுறை, "ஒழுங்குமுறைகளை வலுப்படுத்துவது மற்றும் சீரான தன்மையைக் கொண்டு வருவதை" நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறியது. மேலும், மாநிலங்கள் முழுவதும் சுரங்கத் தொழிலை முறையாகக் கட்டுப்படுத்த ஒற்றை மற்றும் தெளிவான வரைமுறை தேவை என்றும் அரசு கூறியிருந்தது.

மேலும், புதிய வரைமுறையானது சரிவுகள், அதனுடன் தொடர்புடைய நில அமைப்புகள் மற்றும் இடைப்பட்ட பகுதிகள் உள்பட முழு மலை அமைப்பையும் உள்ளடக்கியதாகவும், இது மலைத்தொடர்களையும் அவற்றின் இணைப்புகளையும் வெளிப்படையாகப் பாதுகாப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

அதோடு, "நூறு மீட்டருக்கும் குறைவான அனைத்து நில அமைப்புகளிலும் சுரங்கத் தொழில் மேற்கொள்ள அனுமதியளிக்கப்படும் எனக் கருதுவது தவறு" என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்தது.

ஆரவல்லி மலைகள் அல்லது மலைத்தொடர்களுக்குள் இருக்கும் பகுதிகளில் சுரங்கத்திற்கான புதிய குத்தகைகள் வழங்கப்படாது என்று கூறியுள்ள அரசாங்கம், "நிலையான சுரங்க விதிமுறைகளைப் பின்பற்றினால் ஏற்கெனவே உள்ள சுரங்க நடவடிக்கைகள் தொடரலாம்" எனவும் தெரிவித்தது.

மேலும் அரசின் கூற்றுப்படி, பாதுகாக்கப்பட்ட காடுகள், சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்கள், சதுப்பு நிலங்கள் போன்ற முக்கியமான "பாதுகாக்கப்பட்ட" பகுதிகளில் சுரங்கத் தொழில் தடை செய்யப்பட்டுள்ளது. சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட சில முக்கியமான, உத்தி சார்ந்த கனிமங்கள் மற்றும் அணுக் கனிமங்களுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்படும்.

சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் இதுகுறித்துப் பேசியபோது, "1,47,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஆரவல்லி மலைத் தொடரில் சுமார் 2 சதவிகிதத்தில் மட்டுமே சுரங்கம் தோண்டப்பட வாய்ப்புள்ளது. அதுவும் விரிவான ஆய்வுகளைச் செய்து, அதிகாரபூர்வ ஒப்புதலைப் பெற்ற பிறகே சாத்தியமாகும்" என்று தெரிவித்தார்.

ஆனால், போராட்டக் குழுக்களில் பல, தங்கள் போராட்டங்கள் தொடரும் என்றும், நீதிமன்றத்தின் புதிய வரைமுறையை எதிர்த்து சட்ட ரீதியான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகவும் கூறுகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு