You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சதம் அடித்த கோலியை ரசிகர்கள் விமர்சிப்பது ஏன்? அஸ்வின் பெயரும் ட்ரெண்டாக என்ன காரணம்?
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஐபிஎல் தொடரில் அதிகமான சதங்கள், டி20 போட்டிகளில் 3வது அதிகபட்ச சதங்கள் என சாதனைகள் படைத்தும், அணியின் ஸ்கோர் உயர்வுக்காக தனி ஒருவனாகப் போராடி சதம் அடித்தும் விராட் கோலி சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருவது வியப்பாகவும், பரிதாபமாகவும் இருக்கிறது.
GOAT பேட்டர் வரிசையில் விராட் கோலி உண்டு என்பதை அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஏற்றுக்கொண்டாலும், அவரின் சமீபத்திய பேட்டிங்கில் ரன் குவிக்கும் வேகம் அதிகரித்த போதிலும் அவர் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறார். விராட் கோலி 20 ஓவர்களையும் தனக்கானதாக மாற்றி களமாடி, ரன்களை குவித்தாலும் அது அவரின் சுயநலமாகவே ரசிகர்களில் ஒரு தரப்பினரால் பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணி தோற்றதுகூட சமூக ஊடகங்களில் பெரிதாக விமர்சிக்கப்படவில்லை, கிங் கோலி அடித்த சதமும், அவர் எடுத்துக்கொண்ட பந்துகளும் கடுமையாக விமர்சிக்கப்பட்டும், கிண்டல் செய்யப்பட்டும் வருகிறது.
“ஆங்கர் ரோல்” அவதாரம் எடுக்கும் கோலியின் பேட்டிங் நிச்சயமாக டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடத்தைப் பெற்றுத் தராது என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டித் தொடரின் 20வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்தது. 184 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
வீணடித்த ராஜஸ்தான்
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து 4வது வெற்றியைப் பெற்று புள்ளி அட்டவணையில் 8 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. ஆனால் நிகர ரன்ரேட் 1.120 ஆக மட்டுமே வைத்துள்ளது.
இரண்டாவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி 6 புள்ளிகள் பெற்றிருந்தாலும், நிகர ரன்ரேட் 2.518 ஆக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி விரைவாக சேஸிங் செய்திருந்தால், நிகர ரன்ரேட் உயர்ந்திருக்கும். ஆனால், 15 ஓவர்களுக்கு பின் ராஜஸ்தான் ரன் குவிப்பு வேகம் குறைந்து கடைசி ஓவர் வரை இழுத்து வந்துவிட்டனர்.
ஆர்சிபி அணி 5 போட்டிகளில் 4 தோல்வி, ஒரு வெற்றி என 2 புள்ளிகளுடன் 8வது இடத்தில் நீடிக்கிறது. அதன் நிகர ரன்ரேட் மைனஸ் 843 ஆகச் சரிந்துவிட்டது.
ஃபார்முக்கு வந்த பட்லர்
கடந்த ஐபிஎல் சீசனில் இருந்து இங்கிலாந்து பேட்டர் ஜாஸ் பட்லர் சரியாக எந்தப் போட்டியிலும் ஆடவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து இருந்து வந்தது. இதற்குப் பதில் அளிக்கும் வகையில் அற்புதமான சதத்தை பட்லர்(100) அடித்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமானார்.
தொடக்க வீரராகக் களமிறங்கிய பட்லர் 20 ஓவர்கள் வரை களமாடி 58 பந்துகளில் இந்த சத்ததை நிறைவு செய்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அது மட்டுமல்லாமல் பட்லருக்கு நேற்றைய ஐபிஎல் ஆட்டம் 100வது போட்டி. தனது 100வது போட்டியில் சதம் அடித்து மறக்க முடியாத நினைவுகளை வைத்துள்ளார்.
இரண்டாவது விக்கெட்டுக்கு கேப்டன் சஞ்சு சாம்ஸனுடன் இணைந்து பட்லர் 148 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தார். இதுதான் இந்த சீசனில் அதிகபட்ச பாட்னர்ஷிப் ஸ்கோராக அமைந்தது. இருவரின் ஆட்டம்தான் ஆர்சிபியின் வெற்றிக் கனவை சுக்குநூறாக உடைத்தது. கேப்டனுக்குரிய பொறுப்புடன் ஆடிய சாம்ஸன்(69) அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.
பந்துவீச்சுக்கு 9 மார்க்
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்ஸன் கூறுகையில் “190 ரன்களுக்கு குறைவாக வரும் என நினைத்தேன், கடைசி நேரத்தில் பனிப்பொழிவு இருந்தது.
எங்களின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. சில போட்டிகளுக்குப் பின் பட்லர் ஃபார்முக்கு வந்தது மகிழ்ச்சி. எங்களின் பந்துவீச்சும் அபாரமாக இருந்தது. எங்களுக்குக் கிடைத்த சிறிய இடைவெளியால்தான் நாங்கள் புத்துணர்ச்சியுடன் வர முடிந்தது. பேட்டிங்கிற்கு 8.7 மார்க், பந்துவீச்சுக்கு 9 மதிப்பெண் கொடுப்பேன்,” எனத் தெரிவித்தார்.
விராட் கோலிக்கு ஏன் இந்த நிலை?
ராஜஸ்தான் அணியைப் போன்றே ஆர்சிபி அணியிலும் விராட் கோலி(113) சதம் அடித்தார், கேப்டன் டூப்ளெஸ்ஸியுடன் சேர்ந்து 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளம் அமைத்தார்.
கோலி இவ்வளவு சிறப்பாக ஆடியும், பிரயத்தனம் செய்தும் அவரின் சதமும் புகழப்படவில்லை, பார்ட்னர்ஷிப்பும் மதிக்கப்படவில்லை. மாறாக ரசிகர்களில் ஒரு தரப்பினரின் கிண்டலுக்கும், விமர்சனத்துக்கும் ஆர்சிபியும், கோலியும் ஆளாகியுள்ளனர்.
விராட் கோலி தனது ஐபிஎல் வாழ்க்கையில் அடித்த 8வது சதம். தொடர்ந்து 7 ஐபிஎல் இன்னிங்ஸில் கோலி அடித்த 3வது சதம். இருப்பினும் கோலியின் ரசிகர்கள் தவிர மற்றவர்களால் நகைப்புக்கு உள்ளாகிறார்.
கோலியால்தான் ஆர்சிபி தோற்றது, கோலிக்கு பதிலாக வேறு பேட்டர் கடைசி நேரத்தில் களமிறங்கி இருந்தால், கூடுதலாக 20 ரன்கள் கிடைத்திருக்கும் என ரசிகர்கள் சமூக ஊடகங்களில் விமர்சிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் ஜெய்ப்பூர் ஆடுகளம் மெதுவான விக்கெட்டை கொண்டது. இங்கு 183 ரன்கள் ஸ்கோர் என்பது டிபெண்டபிள் ஸ்கோர்தான். இந்த அளவு பெரிய ஸ்கோரை அடித்தும் ஆர்சிபியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்றால் எங்கோ பெரிய தவறு இருக்கிறது என்று ரசிகர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் விமர்சிக்கிறார்கள்.
பதிலடி கொடுத்த பட்லர்
பட்லர் கடந்த 3 போட்டிகளாக அடித்த ஸ்கோர், 11,11,13.
அதிலும் கடந்த சீசனில் ஒரு அரைசதம் மட்டுமே, பெரிதாக எந்த ஸ்கோரும் செய்யவில்லை. இதனால் பட்லரின் அதிரடி பேட்டிங்கும், அவரின் தொடக்க வரிசை பேட்டிங்கும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. ஆனால் அனைத்துக்கும் நேற்றைய ஆட்டத்தில் அவரின் பேட்டால் பதில் அளித்துள்ளார்.
ஆனால், கடந்த சீசனில் கலக்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்னும் ஃபார்முக்கு வர முடியாமல் தவிக்கிறார். கடந்த 4 போட்டிகளிலும் ஜெய்ஸ்வால் பெரிதாக இதுவரை எந்த ஸ்கோரும் செய்யவில்லை, இந்த ஆட்டத்தில் டாப்லி பந்துவீச்சில் டக்-அவுட்டில் வெளியேறினார்.
இரண்டாவது விக்கெட்டுக்கு சாம்ஸனுடன் பட்லர் ஜோடி சேர்ந்தபின் மெல்ல தனது ரிதத்துக்கு திரும்பினார். யாஷ் தயால் ஓவரையும், மயங்க் தாகர் ஓவரையும் குறிவைத்து பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசி பட்லர் தனது ஃபார்மை மெல்ல மீட்டார். குறிப்பாக அனுபவமில்லாத சுழற்பந்துவீச்சாளர்களான மயங்க் டாகர், ஹிமான்சு ஷர்மா ஓவர்களை பட்லர் வெளுத்து வாங்கிவிட்டார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்தது.
அதிரடியாக ஆடிய பட்லர் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். பட்லருக்கு துணையாக பேட் செய்த கேப்டன் சாம்ஸனும் தனது பங்கிற்கு அவ்வப்போது பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி, 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரும் சேர்ந்து ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர், இருவரையும் பிரிக்க பல பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் டுப்ளெஸ்ஸியால் முடியவில்லை.
சிராஜ் 15-வது ஓவரை வீச அழைக்கப்பட்டார். சிராஜ் தான் வீசிய 4வது பந்தை பவுன்ஸராக வீச அதை சாம்சன் தூக்கி அடித்து பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அங்கு நின்றிருந்த யாஷ் தயால் கேட்ச் பிடிக்கவே சாம்சன் 42 பந்துளில் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 148 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
கடந்த சில போட்டிகளாக ராஜஸ்தான் ஹீரோவாக வலம் வரும் ரியான் பராக் ஒரு பவுண்டரி அடித்த நிலையில் யாஷ் தயால் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். துருவ் ஜூரெல் 2 ரன்னில் டிகேவிடம் கேட்ச் கொடுத்து டாப்லி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஐந்தாவது விக்கெட்டுக்கு ஹெட்மயர் களமிறங்கி, பட்லருடன் சேர்ந்தார். இருவரும் வெற்றி நோக்கி அணியை நகர்த்தினர். 24 பந்துகளில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. டாப்லி வீசிய 17வது ஓவரில் பவுண்டரியுடன் 10 ரன்களை ஹெட்மயர் விளாசினார். கேமரூன் கிரீன் வீசிய 18வது ஓவரில் பவுண்டரி இல்லாமல் ராஜஸ்தான் 5 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சிராஜ் வீசிய 19வது ஓவரிலும் ஹெட்மயர் பவுண்டரி அடித்து 8 ரன்கள் சேர்த்தார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. 94 ரன்களுடன் களத்தில் இருந்த பட்லர் சதத்துக்காகக் காத்திருந்தார். கிரீன் வீசிய முதல் பந்தில் டீப் ஸ்குயர் லெக் திசையில் சிக்ஸர் விளாசி சதத்தை நிறைவு செய்து அணியையும் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஹெட்மயர் 11 ரன்களுடனும், பட்லர் 100 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
அஸ்வின், சஹல் மிரட்டல் பந்துவீச்சு
ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் போல்ட், பர்கர் இருவரும் பவர்ப்ளேவில் வழக்கமாக விக்கெட்டை வீழ்த்திவிடுவார்கள். ஆனால் நேற்று கோலி, டுப்ளெஸ்ஸியை வீழ்த்த முடியவில்லை. பவர்ப்ளேவில் விக்கெட் இழப்பின்றி ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆனால், நடுப்பகுதியில் யஜூவேந்திர சஹல், அஸ்வின் இருவரையும் கேப்டன் சாம்சன் மாறி, மாறி பயன்படுத்தி, ஆர்சிபி பேட்டர்கள் டுப்ளெஸ்ஸி, கோலியை சித்ரவதை செய்தார். இதில் சஹல் பந்துவீச்சில் மட்டும் கோலி 2 சிக்ஸர்களை விளாசினார்.
ஆனால், அஸ்வின் பந்துவீச்சில் ஒரு பவுண்டரிகூட அடிக்க முடியில்லை. இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 62 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில் 13 டாட் பந்துகள் அடங்கும். இருவரும் 7.75 எக்கானமி வைத்தனர்.
தரமற்ற பந்துவீச்சு
ஆனால், ஆர்சிபி அணியில் மயங்க் டாகர், ஹிமான்சு சர்மா இருவரும் சேர்ந்து 4 ஓவர்கள் வீசி 63 ரன்களை வாரி வழங்கினர். இருவரும் பல பந்துகளை லைன் லென்த்தில் இருந்து தவறி வீசி பட்லரிடமும், சாம்சனிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டனர்.
இதில் ஆர்சிபி அணியிடம் இருந்த ஷான்பாஸ் அகமதுவை சன்ரைசர்ஸிடம் வழங்கிவிட்டு அங்கிருந்து மயங்க் டாகரை ஆர்சிபி வாங்கி கையைச் சுட்டுக்கொண்டது.
இதிலிருந்து ஆர்சிபி அணியிடம் தரமான வேகப்பந்துவீச்சாளர்களும் இல்லை, சுழற்பந்துவீச்சாளர்களும் இல்லை என்பது தெரிய வருகிறது.
அனுபமில்லாத இதுபோன்ற பந்துவீச்சாளர்களை வைத்துக் கொண்டு பட்லர், சாம்சன் போன்ற பெரிய பேட்டர்களுக்கு பந்துவீசினால் கையில் இருக்கும் வெற்றி வாய்ப்பையும் இழக்க வேண்டியதிருக்கும்.
கோலியை ‘காலி’ செய்த அஸ்வின்
கோலியின் சதம் எந்த அளவு சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்படுகிறதோ அதே அளவு அஸ்வினை வைத்து கோலியை கிண்டல் செய்கிறார்கள்.
ஏனென்றால், நேற்றைய ஆட்டத்தில் கோலிக்கு தண்ணி காட்டும் விதத்தில் அஸ்வின் பந்துவீச்சு அமைந்திருந்தது. அஸ்வின் பந்துவீச்சில் பவுண்டரி, சிக்ஸர் அடிக்க கோலி பல பிரயத்தனங்கள் செய்தும், பலவிதமான ஷாட்களுக்கு முயன்றும் கடைசி வரை நடக்கவில்லை.
அஸ்வின் வீசிய 15 பந்துகளை கோலி எதிர்கொண்டு பேட் செய்து அதில் 14 ரன்கள் சேர்த்தார். அதில், ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட கோலியால் அடிக்க முடியவில்லை என்பதே நிதர்சனம். கோலிக்கும், அஸ்வினுக்கும் இடையிலான போரில் இறுதியில் அஸ்வின் வென்றார்.
அஸ்வின் பந்துவீச்சில் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 93.33 என்று குறைந்திருந்தது. ஆனால், ஆவேஷ் கான் பந்துவீச்சை வெளுத்த கோலி 17 பந்துகளில் 39 ரன்கள் குவித்து 8 பவுண்டரிகள் அடித்தார்.
அஸ்வின் தனது கடைசி ஓவரில் ஒரு சிக்ஸரை அடிக்கவிட்டுவிட்டார். அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால், அஸ்வின் ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட வழங்காமல் தனது ஸ்பெல்லை சிறப்பாக முடித்திருப்பார். ஒட்டுமொத்ததில் கோலிக்கு சிம்மசொப்னமாக அஸ்வின் பந்துவீச்சு இருந்தது.
கோலி ஏன் விமர்சிக்கப்படுகிறார்?
ஜெய்ப்பூரில் இதற்கு முன் கோலி ஆட வந்தபோது அவர் இந்த மைதானத்தில் சராசரி 21.90 ரன்கள்தான். இதனால் இந்த மைதானத்தில் இந்த முறையும் கோலி சொதப்புவார் என்று ரசிகர்கள் எண்ணினர்.
ஆனால், யாரும் எதிர்பாரா வகையில் 20 ஓவர்கள் களமாடி 8வது சதத்தை கோலி நிறைவு செய்தார். தொடக்க ஆட்டக்கார் டுப்ளெஸ்ஸியுடன் 125 ரன்கள் கோலி பார்ட்னர்ஷிப் அமைத்தாலும், அதில் பெரும்பங்கு கோலி சேர்த்ததுதான்.
ஆர்சிபி அணி நேற்று சேர்த்த 183 ரன்களில் கோலியின் பங்கு 61.70 சதவீதம். இவ்வளவு சிறப்பாக கோலி பேட் செய்தும் ஏன் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறார் என்பதுதான் கேள்வி.
ஏனென்றால் கோலி ஆங்கர் ரோல் எடுக்கிறேன் என்று கூறிக்கொண்டு பந்துகளை வீணாக்குகிறார் என்ற குற்றச்சாட்டு ரசிகர்களாலும், கிரிக்கெட் விமர்சிகர்களாலும் வைக்கப்படுகிறது. அதாவது சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் வாய்ப்புள்ள பந்துகளைக்கூட கோலி பெரிய ஷாட்களாக மாற்றத் தயங்குகிறார்.
இருபது ஓவர்களையும் தானே ஆக்கிரமிக்க வேண்டும், சுயநலத்துடன் ஆடி சதம் அடிக்க வேண்டும், தன்னை யாரும் பேட்டிங்கில் குறை கூறிவிடக்கூடாது என்ற கோணத்தில்தான் கோலி பேட் செய்கிறார் என்று விமர்சிக்கப்படுகிறது.
இந்த ஆட்டத்தில் கோலி 67 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார். இது ஐபிஎல் வரலாற்றில் மெதுவாக அடிக்கப்பட்ட சதம். கடந்த 2009ஆம் ஆண்டில் மணிஷ் பாண்டே 67 பந்துகளில் சதம் அடித்ததுதான் மெதுவான சதமாக இருந்து வந்தது, அதோடு கோலியும் இணைந்துவிட்டார்.
கோலி ஒட்டுமொத்தமாக 72 பந்துகளில் 113 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள், ஸ்ட்ரைக் ரேட்டும் 156.94 ஆக இருந்தது. ஆனால், ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக பந்துகளை சந்தித்ததில் 3வது பேட்டர் கோலிதான்.
கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் மெக்கல்லம் 73 பந்துகளைச் சந்தித்து 158 ரன்களை விளாசினார். ஆனால் கோலி 72 பந்துகளில் 113 ரன்கள்தான் சேர்த்தார். 2009இல் மணிஷ் பாண்டேவும் 73 பந்துகளில் 113 ரன்கள் சேர்த்திருந்தார்.
விராட் கோலியின் சிக்ஸர், பவுண்டரிகளை மட்டும் கொண்டாடும் அவரின் ரசிகர்கள் அவர் பவுண்டரி அடிக்கும் முன், எத்தனை பந்துகளைச் சந்தித்தார் என்பதைக் கணக்கிடுவதில்லை.
களத்தில் கோலி செட்டில் ஆவதற்கு எத்தனை பந்துகளை வீணாக்குகிறார் என்பதையும் பார்ப்பதில்லை. இந்த ஆட்டத்தில்கூட கோலி முதல் 25 பந்துகளைச் சந்தித்து 32 ரன்கள் சேர்த்தார், அதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 128 ஆக இருந்தது.
கோலி சந்தித்த அடுத்த 25 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரி உள்பட 39 ரன்கள் சேர்த்து, 156 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். கடைசி 22 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரி என 42 ரன்கள் சேர்த்து 191 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடினார்.
மெதுவான ஆடுகளம், பந்து பேட்டரை நோக்கி மெதுவாக வருகிறது என்று பேட்டியில் கூறிய கோலியால், தொடக்கத்தில் ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்த முடியவில்லை.
கடைசி 22 பந்துகளில் மட்டும் ஸ்ட்ரைக் ரேட்டை எவ்வாறு உயர்த்த முடிந்தது, 42 ரன்கள் எவ்வாறு சேர்க்க முடிந்தது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். கோலியின் ஆங்கர் ரோல் ஆர்சிபி அணிக்கு பெரிய வலியாகவே முடிந்துள்ளது என்பதுதான் சமீபத்திய நிதர்சனமாக இருந்து வருகிறது.
இதுபோன்று மெதுவாக பேட் செய்யும் பேட்டரை, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் எவ்வாறு இடம் பெறச் செய்வது என்று ரசிகர்கள் தரப்பில் கேட்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கோலி, அஸ்வின், ஆர்சிபி பெயர் எக்ஸ் தளத்தில் டிரண்டாகியுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)