ஜென் 'ஸி' போராட்டத்தால் மேலும் ஒரு நாட்டில் அரசு கவிழ்ப்பா? ராணுவம் புதிய அறிவிப்பு

    • எழுதியவர், சாம்மி அவாமி
    • பதவி, பிபிசி ஆப்பிரிக்கா,அன்டானனாரிவோ
    • எழுதியவர், டானாய் நெஸ்டா குபெம்பா

இந்தியப் பெருங்கடல் தீவான மடகாஸ்கரில், ஜென் ஸி இளைஞர்கள் முன்னின்று வாரக்கணக்காக நடத்திய போராட்டங்களுக்குப் பிறகு, ஒரு சிறப்பு ராணுவப் பிரிவு, அதிபர் ஆண்ட்ரி ராஜோலினாவிடமிருந்து (Andry Rajoelina) ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை அதிபர் மாளிகைக்கு வெளியே நின்றபடி, கேப்சாட் (CAPSAT - பணியாளர் நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக சேவைகள் பிரிவு) தலைவர் கர்னல் மைக்கேல் ரான்ட்ரியனிரினா (Col Michael Randrianirina), ராணுவம் ஒரு அரசை அமைக்கும் என்றும், இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்தல் நடத்தும் என்றும் கூறினார். தேர்தல் ஆணையம் போன்ற முக்கிய ஜனநாயக அமைப்புகளின் செயல்பாட்டையும் அவர் இடைநிறுத்தம் செய்துள்ளார்.

ஜென் ஸி (Gen Z) போராட்டக்காரர்கள் மாற்றத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்றும், "இயக்கம் தெருக்களில் உருவாக்கப்பட்டது, எனவே அவர்களின் கோரிக்கைகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்" என்றும் அவர் மேலும் கூறினார்.

அதிபர் ராஜோலினா பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டதாக தெரியவந்ததைத் தொடர்ந்து, தலைநகர் அன்டானனாரிவோவில் கொடிகளை அசைத்து ராணுவத்தினரும், போராட்டக்காரர்களுமாக ஆயிரக்கணக்கானோர் கொண்டாடி வருகின்றனர்.

கேப்சாட் என்பது மடகாஸ்கரின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவப் பிரிவாகும்.

இந்த பிரிவுதான் 2009 இல் ராஜோலினா ஆட்சிக்கு வந்தபோது அவருக்கு ஆதரவளித்தது. ஆனால், சனிக்கிழமை அந்த ராணுப் பிரிவு போராட்டக்காரர்களுடன் இணைந்தது.

மடகாஸ்கரின் அரசியலமைப்பு நீதிமன்றம், கர்னல் ரான்ட்ரியனிரினாவை நாட்டின் புதிய தலைவராக அறிவித்துள்ளது. இருப்பினும், அதிபர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ராஜோலினா இன்னும் பொறுப்பில் இருப்பதாகவும், இது "ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி" என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ராஜோலினா எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை, ஆனால் "ராணுவப் பணியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளால்" தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகக் கூறப்படும் ஒரு கொலை முயற்சிக்குப் பிறகு, தான் ஒரு "பாதுகாப்பான இடத்தில்" தஞ்சம் புகுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இத்தகைய எந்தவொரு செயலிலும் தாங்கள் ஈடுபடவில்லை என்று CAPSAT ராணுவப் பிரிவு மறுத்துள்ளது.

பிரெஞ்சு ராணுவ விமானம் மூலம் நாட்டிலிருந்து அதிபர் ராஜோலினா பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்துள்ளன.

மடகாஸ்கர் "இப்போது குழப்பம் நிலவும் ஒரு நாடு" என்று கர்னல் ரான்ட்ரியனிரினா பிபிசியிடம் கூறினார்.

"அதிபர் இல்லை - அவர் வெளிநாடு சென்றுவிட்டார் என்பதால் குழப்பம் நிலவுகிறது."

நாடு முழுவதும் நிலவும் நீண்டகால நீர் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டுகளை எதிர்த்து, இளைஞர்கள் தலைமையிலான இயக்கம் போராட்டங்களைத் தொடங்கிய இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தக் குழப்பம் தொடங்கியது.

இந்த ஆர்ப்பாட்டங்கள் விரைவில் தீவிரமடைந்து, அதிக வேலையின்மை, ஊழல் மற்றும் விலைவாசி நெருக்கடி ஆகியவற்றால் ராஜோலினா அரசாங்கத்தின் மீதான பரவலான அதிருப்தியைப் பிரதிபலித்தது.

ஐ.நா.வின் கூற்றுப்படி, போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களில் குறைந்தபட்சம் 22 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இருப்பினும், மடகாஸ்கர் அரசாங்கம் இந்தத் தகவலை "வதந்திகள் மற்றும் தவறான தகவல்களின்" அடிப்படையில் இருப்பதாகக் கூறி நிராகரித்திருந்தது.

தொழில்முனைவோர் மற்றும் முன்னாள் டிஜே (DJ) ஆன அதிபர் ராஜோலினா, ஒரு காலத்தில் மடகாஸ்கருக்கு ஒரு புதிய தொடக்கமாகக் காணப்பட்டார்.

அவர் தனது 34 வயதில் அதிபரானார். ஆப்பிரிக்காவின் இளைய தலைவர் என்ற பெருமையைப் பெற்ற அவர், நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் 2018 தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.

ஊழல் மற்றும் அடியாட்களின் ஆதிக்கம் தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவர் செல்வாக்கை இழந்தார், அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

அதிகாரம் அவரிடமிருந்து விலகிச் சென்ற போதிலும், அவர் தொடர்ந்து தனது செல்வாக்கை செலுத்த முயற்சித்து வருகிறார்.

அவரை அதிபர் பதவியிலிருந்து நீக்க எதிர்க்கட்சிகள் வாக்களிப்பதற்கு முன்பு தேசிய சபையைக் கலைக்க ராஜோலினா முயன்றார், ஆனால் அது பலனளிக்கவில்லை.

செவ்வாயன்று, தேசிய சபை உறுப்பினர்கள் ராஜோலினாவை 130-க்கு ஒன்று என்ற வாக்குகள் வித்தியாசத்தில் பதவி நீக்கம் செய்தனர். அவரது சொந்தக் கட்சியான இர்மாரை (Irmar) சேர்ந்த உறுப்பினர்கள் கூட அவருக்கு எதிராகப் பெருமளவில் வாக்களித்தனர்.

இந்த வாக்கெடுப்பு "செல்லாது" என்று ராஜோலினா நிராகரித்தார்.

மடகாஸ்கரின் அரசியல் விவகாரங்களில் ராணுவம் "தலையிடுவதற்கு" எதிராக ஆப்பிரிக்க ஒன்றியம் (AU) எச்சரித்துள்ளதுடன், "அரசியலமைப்புக்கு முரணான அரசாங்க மாற்றங்களுக்கான எந்தவொரு முயற்சியையும்" நிராகரித்துள்ளது.

பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோங், இந்தச் சூழ்நிலை "மிகவும் கவலையளிக்கிறது" என்று கூறியுள்ளார்.

இந்தத் தீவு நாடு சமீபத்திய ஆண்டுகளில் பல அரசியல் எழுச்சிகளைக் கடந்து வந்துள்ளது.

உலக வங்கியின் கூற்றுப்படி, மடகாஸ்கர் உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும். அதன் 30 மில்லியன் மக்களில் 75% பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு