கருணா குமாரி: பார்வை மாற்றுத் திறனாளியாக கிரிக்கெட் உலகில் சாதித்தது எப்படி?

காணொளிக் குறிப்பு,
கருணா குமாரி: பார்வை மாற்றுத் திறனாளியாக கிரிக்கெட் உலகில் சாதித்தது எப்படி?

கருணா குமாரிக்கு 2 வயதாக இருந்த போது அவருக்கு கண் பார்வை இல்லை என்பது தெரிய வந்தது, இதனால் அவருடைய தந்தை ராம்பாபு மிகுந்த கவலையடைந்தார். ஆனால் இப்போது அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஏனெனில், அவரது மகள் இப்போது பார்வையற்றோருக்கான இந்திய டி20 மகளிர் அணியில் விளையாடுகிறார். அந்த அணி சமீபத்தில் மகளிர் பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பையை வென்றது. அதன் இறுதிப் போட்டியில் 42 ரன்கள் சேர்த்து கருணா குமாரி வெற்றிக்கு முக்கிய பங்களித்தார்.

ஆந்திர பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் மலைகளுக்கிடையே அமைந்திருக்கும் ஆதிவாசி கிராமமான வந்தலமமிடியில் (Vantlamamidi) பிறந்தவர் கருணா குமாரி. அவருக்கு ஒரு சகோதரர் மற்றும் இரு சகோதரிகள் உள்ளனர்.

மகளுக்கு கண் பார்வை இல்லை என தெரியவந்தபோது தாங்கள் அடைந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்கின்றனர் கருணா குமாரியின் பெற்றோர்.

தங்கள் கிராமத்துக்கு அருகே உள்ள படேரு எனும் சிறுநகரத்தில் 7ம் வகுப்பு வரை படித்தார் கருணா குமாரி. அதன் பின், விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு பார்வையற்றோர் மகளிர் உண்டு உறைவிட பள்ளியில் படித்தார். அங்குதான் அவருக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்பட்டதாக பெற்றோர் தெரிவித்தனர். அவரால் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க முடியவில்லை என்றாலும், தொலைக்காட்சியில் கிரிக்கெட் விளையாடுவதன் சத்தத்தைக் கேட்டு அதை கற்றுக்கொண்டதாக அவரின் பெற்றோர் தெரிவித்தார்.

கருணா குமாரி இருந்த இந்திய அணி உலகக் கோப்பையை வென்றபோது, அவரது வீட்டில் மகிழ்ச்சி பரவியது. இந்தளவு உயரத்தை தங்கள் மகள் அடைவாள் என தாங்கள் நினைக்கவில்லை என அவரது பெற்றோர் கூறினர்.

பிபிசியிடம் பேசிய கருணா குமாரி, உலகக் கோப்பை அணிக்கு தான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, கோப்பையுடன் திரும்புவேன் என பெற்றோரிடம் கூறியதாக தெரிவித்தார்.

செய்தியாளர்: லக்கோஜு ஸ்ரீநிவாஸ்

ஒளிப்பதிவு: லங்கா பிரபாஸ்

படத்தொகுப்பு: வெங்கட் பண்டா

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு