இந்தியாவிடம் சரணடைவதை தவிர்க்க பாகிஸ்தான் விமானிகள் டாக்காவில் இருந்து தப்பியது எப்படி?

1971 போரில் தோல்வியடைந்த பிறகு சரணடைதல் ஆவணங்களில் பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாசி கையெழுத்திடுகிறார்.

பட மூலாதாரம், Bettmann via Getty Images

படக்குறிப்பு, 1971 போரில் தோல்வியடைந்த பிறகு சரணடைதல் ஆவணங்களில் பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாசி கையெழுத்திடுகிறார். இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் ஜக்ஜித் சிங் அரோராவும் (இடது) காணப்படுகிறார்.
    • எழுதியவர், முனாஸ்ஸா அன்வர்
    • பதவி, பிபிசி உருது, இஸ்லாமாபாத்

அது 1971ஆம் ஆண்டு டிசம்பர் 15 இரவு. பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் முறைப்படி சரணடையத் தயாராகிக் கொண்டிருந்தது.

டாக்காவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த பாகிஸ்தான் ராணுவத்தின் 4வது ஏவியேஷன் படைப் பிரிவுக்கு, தங்களிடம் இருந்த ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயுதங்களை அழித்துவிடுமாறு உத்தரவு வந்திருந்தது.

ஆனால், அந்த விமானிகள் பிடிபட விரும்பவில்லை. அவர்கள் டாக்காவில் இருந்து தப்பிக்கத் திட்டமிட்டனர். அந்தத் திட்டம் எளிமையாகத் தோன்றியது. ஹெலிகாப்டர்களை அழிப்பதற்குப் பதிலாக, அவற்றை பர்மாவுக்கு ஓட்டிச் செல்ல விமானிகள் விரும்பினர். அப்போது இந்திய விமானப் படை வான்வெளியை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

இந்திய ராணுவம் மற்றும் முக்தி பாஹினியால் டாக்கா முற்றுகையிடப்பட்டிருந்தது, வெளியேறும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டிருந்தன. இறுதியாக அந்த விமானிகள் ஹெலிகாப்டர்களில் பறந்து சென்றனர். ஆனால் அவர்கள் எப்படி உயிர் பிழைத்தார்கள்?

இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டறிய, 54 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த இரவுக்கு நாம் செல்ல வேண்டும்.

அந்த நேரத்தில், இந்தப் படைப் பிரிவுக்கு பாகிஸ்தானின் லெப்டினன்ட் கர்னல் சையத் லியாகத் புகாரி தலைமை தாங்கினார். இந்தப் பிரிவு டாக்காவில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்தப் படைப் பிரிவில் ஐந்து எம்ஐ-8 மற்றும் நான்கு அலூவேட்-3 ஹெலிகாப்டர்கள் இருந்தன.

பாகிஸ்தான் விமானப்படை 1971ஆம் ஆண்டு டிசம்பர் 3 மாலை இந்தியா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. அதைத் தொடர்ந்து அன்றிரவே இந்திய விமானங்கள் டாக்கா விமான நிலையத்தைத் தாக்கின. ஒவ்வோர் இரவும் இந்திய விமானங்கள் வந்து டாக்கா விமான நிலையத்தின் ஓடுதளத்தை தகர்க்கும்.

ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அலி குலி கான் அப்போது ஒரு மேஜராகவும், எம்ஐ-8 ஹெலிகாப்டர் விமானியாகவும் இருந்தார். அவர் 1971 ஏப்ரல் 10 அன்று டாக்கா வந்தடைந்தார்.

பிபிசியிடம் பேசிய ஓய்வுபெற்ற ஜெனரல் அலி குலி கான், மார்ச் 26இல் கிளர்ச்சி தொடங்கிய பிறகு, முக்தி வாஹினி பல இடங்களைக் கைப்பற்றியதாகக் கூறினார்.

அந்த நேரத்தில் டாக்காவில் ஒரேயொரு விமான நிலையம் மட்டுமே இருந்தது. அலி குலி கானின் கூற்றுப்படி, டிசம்பர் 3ஆம் தேதி இரவு, இந்திய விமானப் படை போர் தொடங்கிய முதல் நாளிலேயே சுமார் 130 முறை டாக்காவை தாக்கியது.

"இந்திய விமானப் படை விமான நிலையத்தைத் தகர்த்தது. இதன் பிறகு, பாகிஸ்தான் விமானப் படை விமானங்களால் அங்கிருந்து புறப்பட முடியவில்லை. ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தின் 4வது விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் மட்டும் எஞ்சியிருந்தன" என்று குலி கான் விளக்குகிறார்.

டாக்கா வான்வெளி முழுவதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில்

பாகிஸ்தான் விமானப்படை 1971ம் ஆண்டு டிசம்பர் 3 மாலை இந்தியா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. அதைத் தொடர்ந்து அன்றிரவே இந்திய விமானங்கள் டாக்கா விமான நிலையத்தைத் தாக்கின.

பட மூலாதாரம், HISTORY OF PAKISTAN ARMY AVIATION

இந்திய விமானப்படை மீது இருந்த பயத்தின் காரணமாக, பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர்கள் பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே பறந்தன.

பாகிஸ்தானிய விமானிகள் சில நேரங்களில் உணவுப் பொருட்களையும், சில நேரங்களில் வெடிமருந்துகளையும் ஏற்றிச் சென்றனர். ஆனால், இந்த விமானங்கள் அனைத்தும் இரவின் இருட்டில் மட்டுமே இயக்கப்பட்டன.

டாக்காவின் வான்வெளி முழுவதும் இந்தியாவின் ஆதிக்கத்தில் இருந்தது. தரையிறங்கும்போது தங்களது சொந்தப் படைகளை சந்திப்போமா அல்லது எதிரிப் படைகளை சந்திப்போமா என்ற நிச்சயமற்ற நிலையிலேயே விமானிகள் இருந்தனர்.

ஹிஸ்டரி ஆஃப் பாகிஸ்தான் ஏவியேஷன் 1947 to 2007 என்ற புத்தகத்தில், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முகமது ஆசம், ஓய்வுபெற்ற மேஜர் அமீர் முஷ்டாக் சீமா ஆகியோர், 'சரியான வழிகாட்டும் கருவிகள் மற்றும் உபகரணங்கள் இல்லாமல், இருட்டில் மிகக் குறைந்த உயரத்தில் பறப்பது மிகவும் ஆபத்தானது' என்று குறிப்பிட்டுள்ளனர்.

'பாகிஸ்தான் ராணுவ விமானப் போக்குவரத்து வரலாறு 1947 to 2007' என்ற புத்தகத்தில், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முகமது ஆசம் மற்றும் ஓய்வுபெற்ற மேஜர் அமீர் முஷ்டாக் சீமா ஆகியோர், 'சரியான வழிகாட்டும் கருவிகள் (navigational equipment) மற்றும் உபகரணங்கள் இல்லாமல், இருட்டில் மிகக் குறைந்த உயரத்தில் பறப்பது மிகவும் ஆபத்தானது' என்று குறிப்பிட்டுள்ளனர்.

பட மூலாதாரம், HISTORY OF PAKISTAN ARMY AVIATION

படக்குறிப்பு, பாகிஸ்தானின் 4வது விமானப் படையின் விமானிகள்

தப்பிக்கும் திட்டம்

அலி குலி கானின் கூற்றுப்படி, "எங்கள் கமாண்டிங் அதிகாரி டிசம்பர் 15 மாலை கிழக்கு மண்டல கட்டுப்பாட்டுப் பிரிவு தலைமையகத்திற்கு வந்தபோது, ஜெனரல் நியாசி டிசம்பர் 16 அன்று சரணடைய முடிவு செய்துள்ளதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

கிழக்கு மண்டல கட்டுப்பாட்டுப் பிரிவு தலைமைத் தளபதி பிரிகேடியர் பக்கீர் சித்திக், சரணடைவதற்கான உத்தரவுகளை வழங்கினார். மேலும் பீரங்கிகள், டாங்கிகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட அனைத்து கனரக உபகரணங்களையும் அழிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்."

"இதைக் கேட்ட எங்கள் கமாண்டிங் அதிகாரி, சரணடைந்து ஹெலிகாப்டர்களை அழிப்பதற்குப் பதிலாக, நாம் இங்கிருந்து வெளியேறிவிடலாம் என்று கூறினார்."

அந்த நேரத்தில் அங்கிருந்து தப்பிக்க இரண்டு வழிகள் இருந்தன என்கிறார் அலி குலி கான்.

"ஒரு வழி பர்மாவில் உள்ள அக்யாப் பகுதி. இது சிட்டகாங்கிற்கு தெற்கே அமைந்திருந்தது. பாகிஸ்தானிய விமானிகளால் அங்கு பறந்து செல்ல முடியும். மற்றொரு வழி நேபாளம்."

ஆனால், ''அக்யாப் செல்வதே சிறந்ததாகக் கருதப்பட்டது.'' தற்போது 'சிட்வே' என்று அழைக்கப்படும் அக்யாப், மியான்மரில் ரக்கைன் மாகாணத்தின் தலைநகராகும்.

அலி குலி கானின் கூற்றுப்படி, ''ஆயுதங்களைக் கீழே போடக்கூடாது, ஹெலிகாப்டர்களை பர்மாவுக்கு எடுத்துச் செல்வோம்'' என்ற முடிவு எடுக்கப்பட்டது.

கமாண்டிங் அதிகாரி லியாகத் புகாரி முதல் விமானத்தை இயக்கவிருந்தார். ஆனால் விமானம் புறப்படுவதற்கு முன்பே, அவர்கள் தப்பிக்கப் போகும் செய்தி காட்டுத்தீ போல பரவி, இருநூறு அல்லது முந்நூறு பேர் அங்கு கூடியிருந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

பட மூலாதாரம், HISTORY OF PAKISTAN ARMY AVIATION

படக்குறிப்பு, லெப்டினன்ட் கர்னல் சையத் லியாகத் புகாரி

தப்பிச் சென்ற செய்தி காட்டுத்தீ போல பரவியது

கூடுதல் எரிபொருளுடன், எம்ஐ-8 ஹெலிகாப்டரால் சுமார் 24 பேரை ஏற்றிச் செல்ல முடியும், அதே நேரம் அலூவேட்-3 ஹெலிகாப்டர் ஆயுதங்களுடன் மூன்று முதல் நான்கு பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

ஆனால், அந்த நேரத்தில் படைப்பிரிவின் அனைத்து ஹெலிகாப்டர்களும் டாக்கா கன்டோன்மென்ட்டின் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருந்ததுதான் பெரிய சிக்கலாக இருந்தது.

அலி குலி கானின் கூற்றுப்படி, அவருக்குத் தனது ஹெலிகாப்டரை தயார் செய்யுமாறு உத்தரவிடப்பட்டது, மேலும் அவரிடம், "நீங்கள் ஹெலிகாப்டரை தயார் செய்யுங்கள், பயணிகள் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்" என்று கூறப்பட்டது.

சையத் லியாகத் புகாரி, ஹிஸ்டரி ஆஃப் பாகிஸ்தான் ஏவியேஷனுக்கு அளித்த நேர்காணலில், 1971 டிசம்பர் 16 அன்று அதிகாலை 3 மணி முதல் 3:35 மணிக்குள் விமானிகளுக்குப் புறப்படுமாறு அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.

ஒவ்வொரு ஹெலிகாப்டரும் ஐந்து நிமிட இடைவெளியில் புறப்பட வேண்டும் என்ற உத்தரவு கிடைத்தது.

பீவர் ஹெலிகாப்டர்களுக்கு பிறகு எம்ஐ-8 ஹெலிகாப்டர்கள் புறப்பட வேண்டும், மேலும் கூடுதல் எரிபொருள் கொண்ட அலூவேட்-3 ஹெலிகாப்டர்கள் மெதுவாகப் பறக்க வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டது.

கமாண்டிங் அதிகாரி லியாகத் புகாரி முதல் ஹெலிகாப்டரை இயக்கவிருந்தார். ஆனால் புறப்படுவதற்கு முன்பே, அவர்கள் தப்பிக்கப் போகும் செய்தி காட்டுத்தீ போலப் பரவி, இருநூறு அல்லது முந்நூறு பேர் அங்கு கூடியிருந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

ஒவ்வொருவருக்கும் ஹெலிகாப்டரில் ஏறிவிட வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. இறுதியாக அந்த ஹெலிகாப்டர் 40 பயணிகளுடன் புறப்பட்டது.

லெப்டினன்ட் கர்னல் அதிஃப் ஆல்வி அப்போது ஏழு வயது சிறுவனாக இருந்தார். அவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முகமது ஆசம், ஓய்வுபெற்ற மேஜர் அமீர் முஷ்டாக் சீமா ஆகியோரிடம் கூறுகையில், "நாங்கள் ஆறு சகோதரர்கள். நள்ளிரவில் என் தந்தை அவசரமாக வந்து என் தாயிடம் பொருட்களை பேக் செய்யச் சொன்னார். நான் என் கிரிக்கெட் பேட்டை எடுத்துக் கொண்டேன்.

பிறகு நாங்கள் ஒரு ஜீப்பில் ஒரு பள்ளிக்கு வந்தோம். அங்குவொரு பெரிய ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டிருந்தது, மக்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். அங்கு இடமே இல்லை. என் தந்தை எங்களை அங்கிருந்து வேறோர் இடத்திற்கு அழைத்துச் சென்றார், அங்கு எங்களுக்கு ஹெலிகாப்டரில் இடம் கிடைத்தது. ஆனால் என் தந்தை அங்கேயே தங்கிவிட்டார்," என்றார்.

கடினமான பயணம்

அந்த ஹெலிகாப்டர்களில் இருந்த இருக்கைகள் அகற்றப்பட்டு, அனைத்து உபகரணங்களும் வெளியே வீசப்பட்டிருந்தன. அலி குலி கானும் அவரது சக விமானிகளும் இரவில் தங்களது ஹெலிகாப்டர்களில் ஏற வந்தபோது, அவர்கள் வரிசையில் இரண்டாவதாக இருந்தனர்.

பட மூலாதாரம், HISTORY OF PAKISTAN ARMY AVIATION

படக்குறிப்பு, பாகிஸ்தான் விமானிகள் பர்மா வந்தடைந்தனர்.

இந்திய விமானப்படை வான்வெளியை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால் பாகிஸ்தான் விமானிகள், சிட்டகாங் கடற்கரையோரம் வடக்கே மிகக் குறைந்த உயரத்தில் பறந்து அக்யாப் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

கடைசி எம்ஐ-8 ஹெலிகாப்டரை மேஜர் மன்சூர் கமல் பாஜ்வா இயக்கினார். அவர் 'ஹிஸ்டரி ஆஃப் பாகிஸ்தான் ஏவியேஷனுக்கு' அளித்த பேட்டியில், அன்றிரவு "வானம் முழுவதும் மேகங்களால் சூழப்பட்டிருந்தது, இது விமானிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது" என்று கூறினார்.

இந்த ஹெலிகாப்டர்கள் அக்யாப் வந்தடையும்போது விடியற்காலை ஆகிவிட்டது.

"நாங்கள் அக்யாப் விமான நிலையத்தைக் கண்டதும், கடலை நோக்கித் திரும்பி எங்களிடம் இருந்த தனிப்பட்ட ஆயுதங்கள், கேமராக்கள், அடையாள ஆவணங்கள், லாக் புக் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்து ராணுவ உபகரணங்களையும் கடலில் வீசினோம். அதன் பிறகே நாங்கள் திரும்பி வந்து தரையிறங்கினோம்" என்கிறார் அலி குலி கான்.

முன்னதாக, அவர் தனது ஹெலிகாப்டரில் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தின் அடையாளங்களை அழித்திருந்தார்.

அலி குலி கானின் ஹெலிகாப்டர் தான் அக்யாப் நகருக்குள் முதலில் சென்றடைந்தது.

"நாங்கள் தரையிறங்கியவுடன், நான் ஹெலிகாப்டரை விட்டு வெளியே வந்தபோது, ஒரு பர்மா சிப்பாய் ஓடி வந்து என்னிடம் உருது மொழியில், 'நீங்கள் பாகிஸ்தானியா?' என்று கேட்டார். நான் 'ஆம்' என்றேன். அவர், 'நீங்கள் ராணுவ வீரரா?' என்று கேட்டார்.

நான் 'இல்லை, இல்லை, நாங்கள் வெள்ளத் தடுப்புப் பணியாளர்கள்' என்றேன். பிறகு அவர், 'நீங்கள் இஸ்லாமியரா?' என்று கேட்டார். நான் 'ஆம்' என்றதும், அவர் உடனடியாகத் தனது கையை நீட்டி, 'நானும் ஒரு முஸ்லிம்தான், என் பெயர் முஸ்தபா கமல்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்" என்று அலி குலி கான் கூறுகிறார்.

விரைவிலேயே, மற்ற ஹெலிகாப்டர்களும் வரத் தொடங்கின. அவற்றில் பெரும்பாலானவை பெண்கள், குழந்தைகள், வீரர்கள், விமானிகள் மற்றும் மெக்கானிக்குகளை ஏற்றிச் சென்றன.

மொத்தம் ஏழு ஹெலிகாப்டர்களில் சுமார் 170 பேர் பர்மா சென்றடைந்தனர்.

மொத்தம் ஏழு ஹெலிகாப்டர்களில் சுமார் 170 பேர் பர்மாவைச் சென்றடைந்தனர்.

பட மூலாதாரம், HISTORY OF PAKISTAN ARMY AVIATION

படக்குறிப்பு, ஹெலிகாப்டர்கள் அடையாளம் தெரியாமல் இருக்க ஏற்கெனவே வெள்ளை வண்ணம் தீட்டப்பட்டிருந்தன.

பர்மாவில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர்கள்

மறுநாள், ஒரு விமானம் வந்து அந்தப் பெண்களையும் குழந்தைகளையும் ரங்கூனுக்கு அழைத்துச் சென்றது. அங்கிருந்து ஒரு விமானம் அவர்களை பாகிஸ்தானுக்கு ஏற்றிச் சென்றது.

விமானிகளும் மற்ற வீரர்களும் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்தனர்.

பின்னர், ஒவ்வொரு விமானியுடனும் ஒரு துப்பாக்கி ஏந்திய வீரர் அனுப்பப்பட்டு, அவர்கள் மைதிலா விமானப் படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கிருந்து ஒரு விமானம் அவர்களை ரங்கூனுக்கு அழைத்துச் சென்றது. அவர்கள் அங்கு சுமார் மூன்று வாரங்கள் தங்கியிருந்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிறகு ஒரு நாள், ஒரு பாகிஸ்தான் விமானம் ரங்கூனில் தரையிறங்கி அவர்களை மேற்கு பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்லும் என்று கூறப்பட்டது. அதன்படி, சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு அவர்கள் பாகிஸ்தானை சென்றடைந்தனர்.

ஹெலிகாப்டர்கள் அனைத்தையும் அவர்கள் பர்மாவிலேயே விட்டுச் சென்றனர். பாகிஸ்தான் வந்து சேர்ந்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் பர்மாவுக்கு சென்று அந்த விமானங்களைத் திரும்பக் கொண்டு வருமாறு உத்தரவிடப்பட்டது.

அந்த ஹெலிகாப்டர்கள் பர்மாவில் இருந்து பாங்காக் கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து, 1972ஆம் ஆண்டு ஜனவரி 23 அன்று, அவை படகுகளில் ஏற்றப்பட்டு கடல் வழியாக கராச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு