சாம் கரன்: வேகத்தால் உலகை மிரட்டிய சிஎஸ்கேயின் ‘சுட்டிக் குழந்தை’

    • எழுதியவர், எம்.மணிகண்டன்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரும் ரசிகர்களும் இவரை சுட்டிக் குழந்தை என்பார்கள். 24 வயதான இந்தக் ‘குழந்தை' வேகமும் குறி தவறாத துல்லியத் தன்மை கொண்ட தனது பந்துவீச்சால உலக கிரிக்கெட் அணிகளை மிரட்டியிருக்கிறது.

டி20 உலகக் கோப்பை போட்டி வரலாற்றில் பந்துவீச்சாளர் ஒருவர் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்படுவது இதுதான் முதல்முறை. வார்னர்களும் கோலிகளும் மட்டுமே இந்தப் பெருமையைப் பெறுவார்கள் என்ற பழைய வரலாற்றை உடைத்துப் போட்டிருக்கிறார் சாம் கரன்.

இதற்கு முன் இதை வென்றவர்கள் அனைவருமே பேட்ஸ்மேன்கள்தான். இந்தத் தொடரிலும் பட்லர், ஹேல்ஸ், சூர்யகுமார் யாதவ் விராட் கோலி உள்ளிட்ட 8 பேர் சாம் கரனுக்கு போட்டியாக இருந்தார்கள். ஆனால் டெத் ஓவரில் மிரட்டி பாகிஸ்தானை சுருட்டிய மாயாஜாலத்தால் மற்ற அனைவரையும் ஓரங்கட்டினார் சாம் கரன்.

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தொடர் நாயகன் விருதையும் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றிருக்கும் முதல் வீரரும் இவர்தான். இது மட்டும் இல்லை. டி20 உலகக் கோப்பைத் தொடர் நாயகன் விருதை வென்ற இளம் வீரரும் இவர்தான்.

“மிகவும் புத்திசாலித்தனமான, கட்டுப்பாடான பந்துவீச்சாளர்” என்று கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே சாம் கரனுக்கு புகழாரம் சூட்டுகிறார்.

‘ஆட்டத்தின் போக்கை மாற்றியவர்’ என்று ஐசிசி கூறுகிறது.

ஒருவேளை இந்தப் போட்டி சூப்பர் ஓவருக்குச் சென்றால் அப்போது சாம் கரன்தான் பந்துவீச வேண்டும் என்று தேர்ந்தெடுப்பேன் என்று கூறியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன்.

பேட்டுக்கும் காலுக்கும் இடையேயுள்ள ஒரு சிறிய இடைவெளியில் ஸ்டம்புகளைக் குறிவைத்து யார்க்கர்களை வீசுவதில் வல்லவர் சாம் கரன் என்று அவர் கூறுகிறார்.

சாம் கரன் அப்படி என்ன செய்துவிட்டார் என்றா கேட்கிறீர்கள்? இடது கை வேகத்தில் தொடர் முழுவதும் மிரட்டிய அவர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 

ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் இதில் அடங்கும். இறுதிப் போட்டி மாத்திரமல்லாமல் தொடர் முழுவதுமே அவர் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவியிருக்கிறார் அவர். குரூப்-1 பிரிவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெறும் 10 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

நியூஸிலாந்துடனான போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது 26 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இலங்கையுடன் 27 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை எடுத்தார். அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மட்டும்தான் அவரது பந்துவீச்சு எடுபடவில்லை. 4 ஓவர்களில் 42 ரன்களை வாரிக்கொடுத்தார்.

இறுதிப் போட்டியில் பந்துவீச்சு முழுவதுமே அவரது தாக்கத்தைக் காண முடிந்தது. 4 ஓவர்களில் அவர் 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். தொடக்க ஆட்டக்காரரான ரிஸ்வானின் விக்கெட்டும் இதில் அடங்கும். டெத் ஓவர்களில் இவருடைய பந்துகளைத் தொட முடியவில்லை. இவர் வீசிய 24 பந்துகளில் 15 பந்துகளில் ரன்கள் எடுக்கப்படவில்லை. ஒரு பவுண்டரியும் சிக்சரும்கூடக் கிடையாது. 

இந்தப் போட்டியில் மூன்றாவது ஓவரிலேயே அவருக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த ஓவரில் அவர் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அவரது அடுத்த ஓவரில் பெரிதும் நம்பப்பட்ட ரிஸ்வானின் விக்கெட்டை வீழ்த்தினார். ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை குறுக்காக ஆட முயன்றபோது பந்து பேட்டில் பட்டு ஸ்டம்பை தகர்த்தது. அந்த ஓவரில் சாம் கரன் கொடுத்து ஒரேயொரு ரன் மட்டுமே. 

டெத் ஓவர் தொடங்கும் 17-ஆவது ஓவரை வீசுவதற்கு மீண்டும் வந்த சாம் கரன், மசூத்தின் விக்கெட்டை வீழ்த்தினார். அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. 19-ஆவது ஓவரில் மீண்டும் ஒரு விக்கெட். டெத் ஓவர்களில் பாகிஸ்தானை திணறடித்துவிட்டது அவரது பந்துவீச்சு.

கடந்த டி20 உலகக் கோப்பை போட்டியை காயம் காரணமாக தவறவிட்ட சாம் கரன், இந்தத் தொடரில் அந்த வாய்ப்பை அற்புதமாகப் பயன்படுத்தியிருக்கிறார். இப்போதே சாம் கரனுக்கு ஐபிஎல்லில் விலை அதிகமாகிவிடும் என்ற கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கிவிட்டன.

இத்தனை பெருமைக்குரிய சாம் கரன் ஆட்ட நாயகன் விருதைப் பெறும்போது என்ன சொன்னார் தெரியுமா?

“என்னை விட பென் ஸ்டோக்ஸே இதற்குத் தகுதியானவர்”

இரட்டை சாம்பியனான இங்கிலாந்து

டி20 உலகக் கோப்பையில் 1992-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் போல அதிசயத்தை நிகழ்த்த வேண்டும் என்ற வேட்கையுடன் இறுதிப் போட்டியில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் நம்பிக்கையை இங்கிலாந்து அணி தனது மிரட்டலான பந்துவீச்சால் தகர்த்தது. 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 137 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

மெல்போர்ன் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இன்றைய போட்டியில் தனது உறுதியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சும், சுழற் பந்துவீச்சும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தன. பாகிஸ்தான் பேட்ஸ் மேன்களை எந்த வகையிலும் நிலைத்து நின்று ஆட முடியாதபடி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தும் வகையில் இங்கிலாந்தின் பந்துவீச்சு இருந்தது.

சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித், வேகப் பந்துவீச்சாளர் சாம் கரன் ஆகியோரின் பந்துவீச்சு பாகிஸ்தானை ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்தியதுடன் நிலைத்து நின்று ஆட முடியாதபடியும் செய்தன. 

இந்த வெற்றியின் மூலம் ஒரே நேரத்தில் 50 ஓவர் போட்டியிலும் 20 ஓவர் போட்டியிலும் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையை இங்கிலாந்து அணி பெற்றிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: