You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் விடுதலை - என்ன காரணம்?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில், 7 பேருக்கு தூக்குத் தண்டனையும் 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரணை நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்தன. இதனை எதிர்த்து ஒன்பது பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்கை எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் அமர்வு விசாரித்து வந்தது. கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில், வழக்கு தீர்ப்புக்காக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (ஜூன் 14) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர்மோகன் அமர்வு, குற்றம்சாட்டப்பட்ட ஒன்பது பேர் மீதான குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, அவர்களை விடுவிப்பதாக உத்தரவிட்டது.
தண்டனை பெற்றிருந்தவர்கள் யார்?
வேறு ஏதாவது வழக்கில் இவர்கள் சிறையிலிருக்க வேண்டியிருந்தால் தவிர, ஒன்பது பேரையும் சிறையிலிருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அபராதத் தொகை ஏதாவது செலுத்தியிருந்தால் அதனைத் திரும்ப அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கில் பொன்னுச்சாமி, அவருடைய மனைவி மேரி புஷ்பம், மகன்கள் பேசில், மற்றும் போரிஸ், பேசிலின் நண்பர்களான வில்லியம்ஸ், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த ஏசு ராஜன், முருகன், செல்வபிரகாஷ் ஆகியோர் குற்றவாளிகள் எனக் கூறி தண்டிக்கப்பட்டிருந்தனர்.
இதில் மேரி புஷ்பம், ஏசு ராஜன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும் மற்றவர்களுக்கு தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.
சுப்பையா கொலை வழக்கின் பின்னணி
தமிழ்நாட்டின் பிரபல நரம்பியல் மருத்துவர்களில் ஒருவர் டாக்டர் சுப்பையா. இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமித்தோப்பு.
இவருடைய தாய்மாமனான பெருமாள், தனது சொத்துகள் அனைத்தையும் சுப்பையாவின் தாயார் அன்னக்கிளிக்கு எழுதி வைத்திருந்தார். ஆனால், அந்தச் சொத்தில் பெருமாளின் இரண்டாவது மனைவியான அன்னபழம் அதில் பங்கு கேட்டார். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது.
இதில் அன்னபழத்திற்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், அந்தத் தீர்ப்பை எதிர்த்து அன்னக்கிளி ஒரு வழக்கைத் தொடர்ந்தார். இந்த நிலையில், இரு தரப்பும் சமாதானம் செய்து கொண்டனர். அதன்படி அஞ்சுகிராமத்தில் உள்ள இரண்டேகால் ஏக்கர் நிலம் அன்னக்கிளிக்குக் கொடுக்கப்பட்டது.
சில வருடங்கள் கழித்து அன்னபழத்தின் மகனான பொன்னுசாமி, தன் தாய் செய்துகொண்ட உடன்படிக்கை செல்லாது என அறிவிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று தள்ளுபடியானது.
இந்நிலையில், அஞ்சுகிராமத்தில் உள்ள நிலத்தை தன் மனைவியின் பெயரில் எழுதிவைத்த டாக்டர் சுப்பையா, அதன் மீது வேறு யாரும் உரிமை கொண்டாடாமல் இருக்க நீதிமன்றத்தில் தடையாணை ஒன்றையும் பெற்றார். மேலும், பொன்னுச்சாமி மீது காவல்துறையிலும் புகார் அளித்தார்.
இந்த நிலையில்தான் 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தான் பணியாற்றி வந்த மருத்துவமனையிலிருந்து சுப்பையா வெளியில் வரும்போது சிலரால் சரமாரியாக வெட்டப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுப்பையா செப்டம்பர் 23-ஆம் தேதி உயிரிழந்தார்.
மெதுவாக நகர்ந்த வழக்கு
இந்த வழக்கில் பொன்னுச்சாமி, அவருடைய மனைவி மேரி புஷ்பம், மகன்கள் பேசில், போரிஸ், பேசிலின் நண்பர்களான வில்லியம்ஸ், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த ஏசு ராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் ஆகிய பத்து பேர் கைதுசெய்யப்பட்டனர். இதில் ஐய்யப்பன் அப்ரூவரானார்.
இந்த வழக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. 2015-இல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டது. 2017-இல் சாட்சிகள் விசாரணையுடன் வழக்கு துவங்கியது. ஆனால், பெரிதாக வேகமெடுக்கவில்லை.
இதையடுத்து, சுப்பையாவின் மைத்துனரான மோகன் வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தை நாடினார். 2021-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வு, வழக்கை ஜூலை 31-ஆம் தேதிக்குள் முடிப்பதற்கு உத்தரவிட்டது.
அதன்படி, வழக்கின் விசாரணை முடிவடைந்து 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி நீதிபதி அல்லி தீர்ப்பளித்தார். குற்றம்சாட்டப்பட்ட ஒன்பது பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த நீதிபதி, பொன்னுசாமி, பாசில், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையும், மேரி புஷ்பம், ஏசு ராஜன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தார்.
அப்ரூவரான ஐயப்பன் அரசு சாட்சி என்பதால் அவருக்குத் தண்டனை ஏதும் விதிக்கப்படவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)