மலேசியாவில் நடுவானில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விழுந்த காட்சி - என்ன நடந்தது?
மலேசியாவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பலர் உயிரிழந்துள்ளனர்.
கடற்படை தினத்தையொட்டி ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சி ஒத்துகையின்போது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் 2 கடற்படை ஹெலிகாப்டர்களில் பயணித்த மொத்தம் 10 பேரும் உயிரிழந்ததாகவும் மலேசிய கடற்படை தெரிவித்துள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கோலாலம்பூரில் இருந்து வடமேற்கே சுமார் 210 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லுமுட் பகுதியில் உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக மலேசிய கடற்படை தெரிவித்துள்ளது.
விபத்தின்போது எடுக்கப்பட்ட காணொளியில், ஒரு ஹெலிகாப்டரின் இறக்கைகள் மற்றொன்றின் மீது உரசுவது, இரண்டு ஹெலிகாப்டர்களும் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக கீழே விழுவதும் பதிவாகியுள்ளது.
விபத்தின்போது 7 பேரைக் கொண்ட ஹெலிகாப்டர் தரையில் விழுந்துள்ளது. 3 பேரை கொண்ட மற்றொரு ஹெலிகாப்டரில் அருகில் இருந்த நீச்சல் குளத்தில் விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
ஃபென்னெக் ராணுவ ஹெலிகாப்டரும் கடல்சார் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டரும் மோதிக் கொண்டதாக மலேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் முகமது காாலித் நோர்டின் தெரிவித்தார்.
எதிர்வரும் சனிக்கிழமை அன்று மலேசிய கடற்படையின் 90-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுவதற்கான ஒத்திகை நிகழ்ச்சியின்போது, துரதிர்ஷவசமாக இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம், மலேசியாவின் கடலோர காவல் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானி இருவர் உள்பட ஹெலிகாப்டரில் இருந்து 4 பேரும் கடலில் தத்தளித்ததை கண்ட அங்கிருந்த மீனவர்களை அவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



