You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அம்ரித்பால் சிங் வீட்டில் சோதனை நடத்தும் பஞ்சாப் போலீஸ் - அமிர்தசரஸில் பதற்றம்
'வாரிஸ் பஞ்சாப் டி' அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை பிடிக்க பஞ்சாப் போலீசார் கடந்த 5 நாட்களாக மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை அம்ரித்பால் சிங்கின் மாமா, கார் ஓட்டுநர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்ரித்பால் சிங்குடன் தொடர்புடைய வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தையும் போலீசார் இதுவரை பறிமுதல் செய்துள்ளனர். இதில் அம்ரித்பால் சிங் பயன்படுத்திய மெர்சிடிஸ் காரும் அடங்கும்.
அம்ரித்பால் சிங் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் பிரெஸ்ஸா கார் மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரிக்க பஞ்சாப் போலீசார் முயன்று வருகின்றனர். நிதி பரிவர்த்தனை, வெளிநாட்டு சக்திகளின் பங்கு போன்றவை இதில் அடங்கும்.
ஆனால் அமிர்தபால் எங்கே இருக்கிறார் என்பதை இதுவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அம்ரித்பால் சிங்கின் வீட்டுக்கு வந்த போலீஸ்
ஏஎன்ஐ செய்தி முகமை தகவலின்படி , பஞ்சாப் காவல்துறையின் ஒரு குழு அமிர்தசரஸில் உள்ள அம்ரித்பால் சிங்கின் வீட்டிற்கு புதன்கிழமை வந்துள்ளது.
அம்ரித்பால் சிங்கின் மனைவி மற்றும் தாயார் கிரண்தீப் சிங்கிடம் போலீசார் விசாரித்துள்ளனர். ஆனால், இதுவரை காவல்துறை தரப்பில் உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
போலீஸ் கெடுபிடிகள் காரணமாக அமிர்தசரஸில் பதற்றம் காணப்படுகிறது. பல இடங்களில் போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தி பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தாலும், அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் எந்த நேரத்தில் என்ன போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரியாததால் அங்கு பதற்றம் காணப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அம்ரித்பால் சிங்குக்கு எதிராக 'லுக்அவுட்' எனப்படும் தேடப்படும் நபர் என்ற பெயரில் நோட்டீஸ் மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், அம்ரித்பால் சிங் மற்றும் அவரது 5 கூட்டாளிகள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த தகவலை பஞ்சாப் காவல்துறை தலைவர் (ஐஜி) சுக்செயின் சிங் கில் தெரிவித்துள்ளார்.
ஐஜி சுக்செயின் சிங் கில், 'இதுவரை 114 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல் நாளில் 78 பேரும், இரண்டாவது நாளில் 34 பேரும், மூன்றாவது நாளில் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவர் மீதும் மாநிலத்தில் அமைதியை சீர்குலைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.
அம்ரித்பால் தனது உடைகளை மாற்றிக்கொண்டு தப்பிக்க பல வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தினார்.
இதனுடன், அம்ரித்பால் தப்பிச் செல்ல உதவிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களில் 'வாரிஸ் பஞ்சாப் டி' அணைப்பின் ஃபைனான்சியர் என்று கூறப்படும் தல்ஜித் சிங் கல்சியும் ஒருவர்.
அம்ரித்பால் சிங்கின் மாமா ஹர்ஜீத் சிங் மற்றும் ஓட்டுநர் ஹர்பிரீத் சிங் ஆகியோரும் கைது செய்யப்பட்டு அசாமில் உள்ள திப்ருகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
என்ன சொல்கிறார் பஞ்சாப் முதல்வர்?
இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேற்று காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், "கடந்த காலங்களில் அந்நிய சக்திகளுடன் இணைந்து பஞ்சாப் சூழலை கெடுக்கும் வகையில் பேசிய சிலர், வெறுக்கத்தக்க பேச்சுக்களை பேசி, சட்டத்திற்கு விரோதமாக பேசி வந்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பலர் பிடிபட்டுள்ளனர். அத்தகையவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும்," என்று கூறியுள்ளார்.
பஞ்சாபின் அமைதியும், அமைதியும் தான் தனது முன்னுரிமை என்று கூறிய பகவந்த் மான், நாட்டிற்கு எதிராக மாநிலத்தில் தழைத்தோங்கும் எந்த சக்தியும் தப்ப முடியாது என்று தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்