நாட்றம்பள்ளியில் வேன் மீது மோதிய லாரி: 7 பெண்கள் பலி - விபத்து எப்படி நடந்தது?

    • எழுதியவர், சுஜாதா நடராஜன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

நாட்றம்பள்ளி அருகே சாலையில் பஞ்சராகி நின்றிந்த வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 7 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில்14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஓணாங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் கடந்த 8ஆம் தேதி இரண்டு வேன்களில் கர்நாடக மாநிலம் தரமசாலாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இன்று (திங்கள், செப்டம்பர் 11) காலை அனைவரும் சுற்றுலாவை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியக அடுத்த சண்டியூர் பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அவரகள் பயணம் செய்த வேன் பஞ்சராகி நின்றுள்ளது.

ஆகையால், வேனில் இருந்தவர்கள் இறங்கி சாலையிலேயே நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது அதே சாலையில் அதிவேகமாக வந்த லாரி அந்த வேன் மீது மோதியுள்ளது. இதைத் தொடர்ந்து சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது வேன் மோதி எதிர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த இடத்தில் போலீசார் விசாரணை

இதில் ஏழு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

அங்கிருந்த மக்கள் அவர்களை மீட்டு வாணியம்பாடி, நாட்றம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மூன்று பேர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுள்ளனர்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த விபத்து குறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்கள் மீரா (50), தெய்வானை (32), சேட்டுயம்மாள் (50), தேவகி (50), சாவித்திரி (42), கலாவதி (50), கீதாஞ்சலி (32) எனத் தெரிய வந்துள்ளது.

தாயை இழந்து தவிக்கும் குடும்பம்

ஓணான்குட்டை பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் மாதேஷின் தாய் தேவயானை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மாதேஷ் பிபிசி தமிழிடம் பேசும்போது, திங்கட்கிழமை காலையில் பேருந்து விபத்துக்குள்ளான தகவல் வந்ததும் தன்னையும் தனது அக்காவையும் அவர்களது சித்தப்பா மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாகவும் அங்கு சென்று பார்த்தபோதுதான் அவர்களது தாய் உயிரிழந்தது தெரிய வந்ததாகக் கூறினார்.

தேவயானையின் மாமியார் சாந்தி கூறுகையில், “தனது மருமகள் கடந்த வெள்ளிக்கிழமையன்று கர்நாடகா மாநிலத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார். அவர் வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட விபத்தில் பலியானதாக” தெரிவித்தார்.

மேலும், “எனக்கு இரண்டு பேரப் பிள்ளைகள் உள்ளனர். இனி தாயில்லாமல் அவர்கள் வாழ வேண்டும் என்று நினைத்தாலே எனக்கு மிகவும் துயரமாக உள்ளது. மருமகளை இழந்ததை நினைத்து வருந்துவதா அல்லது பேரப்பிளைகளின் எதிர்காலத்தை நினைத்து நான் வருந்துவதா?” என்று கவலைப்படுகிறார்.

தேவயானையின் தாய் ஜெயலட்சுமி, “தனது பேரப்பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் அரசு உதவி செய்ய வேண்டும்,” எனக் கூறுகிறார்.

முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

நாட்றம்பள்ளி அருகே விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 4 உடல்களையும் பார்வையிட்டு அவரது உறவினர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விபத்தைப் பற்றி உரிய விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிதி உதவி பெற்றுத் தரப்படும் என்று கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், விபத்தில் காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு நிவாரண தொகையாக ரூ.50,000 வழங்கவும் அவர்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: