You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்" - புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பிரதமர் மோதி பேச்சு
புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. சர்வ மத பிரார்த்தனைகளுக்குப் பின்னர் அதற்கான கல்வெட்டை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். பின்னர், தமிழ் மறைகள் ஓத மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே தமிழ்நாட்டு செங்கோலை பிரதமர் மோடி நிறுவியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே காலை 7.30 மணிக்கு பூஜையுடன் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழா தொடங்கியது. இதில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன் நாராயண்சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம் உள்ளிட்ட சர்வ மத பிரார்த்தனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உடனிருக்க, புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கான கல்வெட்டை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பின்னர், தமிழ் மறைகள் முழங்க செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. செங்கோலை கையில் ஏந்தியபடி ஆதீனங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார்.
பின்னர், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் கண்ணாடி பெட்டிக்குள் செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார்.
செங்கோலை நிறுவிய பின்னர் பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் குத்துவிளக்கை ஏற்றி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகள் தலைமையில் 20 ஆதீனங்கள் பங்கேற்றனர்.
சாவர்க்கர் படத்திற்கு பிரதமர் மோதி மரியாதை
இன்று பிறந்த நாள் காணும் சாவர்க்கருக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சாவர்க்கர் புகைப்படத்திற்கு அவர் மலர் தூவி மரியாதை செய்தார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் பலரும் சாவர்க்கருக்கு மரியாதை செலுத்தினர்
திறப்பு விழா - இரண்டாம் கட்ட நிகழ்வு
நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவின் இரண்டாம் கட்ட நிகழ்வுகள் தொடங்கின. மக்களவையில் தேசிய கீதம் ஒலிக்க தொடங்கிய இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் சிறப்புப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீஷ் தங்காரின் உரையை மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் வாசித்தார். அதில், "இந்த நாள் முக்கியமான மைல் கல்லாகும். இது நல்ல காலத்தில் உத்வேகத்தின் தொடக்கமாக இருக்கும். பிரதமர் மோடி தலைமையில் புதிய நவீன நாடாளுமன்ற கட்டடம் இரண்டரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயம்" என்று குடியரசுத் துணைத்தலைவர் குறிப்பிட்டிருந்தார்.
நிகழ்வில் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, "இந்தியாவின் அந்தஸ்து உலக அரங்கில் உயர்ந்துள்ளது. நமது நாடாளுமன்றம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சவால்களை வாய்ப்புகளாக மாற்றும் திறன் பெற்றது. வலுவான எதிர்காலத்திற்கு ஜனநாயகமே சிறப்பான அடித்தளமாகும். வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம்." என்று குறிப்பிட்டார்.
நிகழ்வின் தொடர்ச்சியாக, பிரதமர் மோதியுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஆகியோரும் இணைந்து புதிய அஞ்சல் தலையை வெளியிட்டனர். பின்னர், இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தைக் குறிப்பிடும் வகையில் புதிய 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோதி வெளியிட்டார்.
செங்கோலின் பெருமை உரைத்த பிரதமர்
அதனைத் தொடர்ந்து பிரதமர் மோதி உரையாற்றினார். அவர் பேசுகையில், "ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கான பயணத்தில் சில தருணங்கள் சாகா வரம் பெற்றவையாக நிலைத்துவிடும். இந்த மே 28-ம் தேதி அதுபோன்ற நாள். புதிய நாடாளுமன்றம் வெறும் கட்டடம் அல்ல. இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களின் ஆசையின் சின்னம் இது. இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த உலகிற்கான தகவலாக இது அளிக்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டடம் சுயாதீன இந்தியாவின் எழுச்சிக்கான அடையாளமாக இருக்கும்.
புனிதமான செங்கோல் நாடாளுமன்றத்திற்குள் இன்று நிறுவப்பட்டுள்ளது. சோழ அரசில் இந்த செங்கோல் நீதி, நேர்மை, நல்ல நிர்வாகம் ஆகியவற்றை அடையாளப்படுத்தும் ஒன்றாக விளங்கியுள்ளது. அத்தகைய புனித செங்கோலின் பெருமையை மீட்டெடுக்க முடிந்திருப்பது நமக்கு அதிர்ஷ்டம்தான். இந்த அவையில் அலுவல்கள் தொடங்கும் போதெல்லாம் செங்கோல் நமக்கு உத்வேகம் தரும். " என்று குறிப்பிட்டார்.
மேலும் தொடர்ந்த பிரதமர் மோதி"பல்லாண்டு நீடித்த அந்நிய ஆட்சி நம் பெருமைகளை களவாடிவிட்டது. இன்று இந்தியா அந்த அடிமை மனோபாவத்தில் இருந்து வெளியே வந்துவிட்டது. புதிய நாடாளுமன்றத்திற்கான தேவை இருந்தது. நாடாளுமன்றத்தின் மொத்த இடங்கள் மற்றும் எம்.பி.க்களின் எண்ணிக்கையை வருங்காலத்தில் அதிகரிப்பதை காணவிருக்கிறோம். ஆகவே, புதிய நாடாளுமன்றத்தை நிர்மாணிப்பது காலத்தின் தேவையாக இருந்தது. " என்று தெரிவித்தார்.
மல்யுத்த வீராங்னைகள் தடுத்து வைப்பு
இந்திய மல்யுத்த கூட்டமைப்புத் தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் வாரக்கணக்கில் போராட்டத்தை தொடரும் மல்யுத்த வீராங்கனைகள் புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டனர். ஆனால், அவர்களை ஜந்தர் மந்தரிலேயே அவர்களை பாதுகாப்புப் படையினர் தடுத்து வைத்துள்ளனர். பாதுகாப்புப் படையினரை மீறி ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் இருந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வெளியேற முற்பட்ட போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட மல்யுத்த வீராங்னைகளின் நோக்கம், புதிய நாடாளுமன்றத்திற்கு முன்பு மகளிர் மகா பஞ்சாயத்தை நடத்த வேண்டும் என்பதே. பிரிஜ் பூஷன் சிங்கால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தைத் தொடர அவர்கள் உறுதி பூண்டிருக்கின்றனர்.
19 எதிர்க்கட்சிகள் கூட்டாக புறக்கணிப்பு
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோதிக்குப் பதிலாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ திறந்துவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டதால் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் இந்த விழாவை கூட்டாக புறக்கணித்துள்ளன. கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் டெல்லியில் வேகமாக மாறும் அரசியல் காட்சிகளின் நீட்சி, புதிய நாடாளுமன்ற திறப்பு விழா விவகாரத்திலும் பிரதிபலிக்கிறது.
பாரதிய ஜனதாவுக்கு எதிரான தேசிய அரசியலில் காங்கிரசுடன் சேராமல் விலகியே நின்ற ஆம் ஆத்மியும், திரிணாமுல் காங்கிரசும் இம்முறை சத்தமின்றி ஒரே அணியில் இணைந்துள்ளன. திமுக, வி.சி.க., மதிமுக, சிவசேனா, சமாஜ்வாதி, மத சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் என 19 கட்சிகள் நாடாளுமன்ற புதிய கட்ட திறப்பு விழாவை புறக்கணித்துள்ளன.
புதிய நாடாளுமன்ற கட்டடம்
செண்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த மொத்த திட்டத்திற்கும் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
ராஜ்பத்திற்கு அருகேயுள்ள பகுதி சென்ட்ரல் விஸ்டா என அழைக்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம், நார்த் பிளாக், சவுத் பிளாக், துணை ஜனாதிபதி இல்லம் ஆகியவையும் சென்ட்ரல் விஸ்டாவின் கீழ் வருகின்றன.
புதிய நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவை கட்டடம் தேசிய பறவையான மயில் என்ற கருப்பொருளிலும், மாநிலங்களவை தேசிய மலரான தாமரை என்ற கருப்பொருளிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பழைய மக்களவையில் அதிகபட்சமாக 552 பேர் மட்டுமே அமர முடியும் என்ற நிலையில், புதிய அவையில் 888 இருக்கைகள் உள்ளன.
பழைய மாநிலங்களவை கட்டடத்தில் 250 உறுப்பினர்கள் மட்டுமே அமர முடியும் நிலையில், புதிய அவையில் 384 பேர் அமர முடியும்.
நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வின்போது 1272 பேர் அமரும் வகையில் புதிய கட்டடம் உள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் வேறு சிறப்புகள்
'காகிதமில்லா அலுவலகங்கள்' என்ற இலக்கை நோக்கி நகரும் வகையில், நவீன டிஜிட்டல் வசதிகளுடன் புதிய கட்டடத்தில் அனைத்து எம்.பி.க்களுக்கும் தனி அலுவலகம் ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய கட்டடத்தில் இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை சித்தரிக்கும் வகையில் பிரமாண்ட அரசியலமைப்பு மண்டபம் இருக்கும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அசல் அங்கு வைக்கப்படும்.
எம்.பி.க்கள் அமர பெரிய அறை, நூலகம், சாப்பாட்டு அறைகள் மற்றும் அதிகப்படியான பார்க்கிங் வசதிகள் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும்.
இந்த முழு திட்டத்தின் கட்டுமானப் பகுதி 64,500 சதுர மீட்டர். புதிய நாடாளுமன்றத்தின் பரப்பளவு தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்தை விட 17,000 சதுர மீட்டர் அதிகம்.
உட்கட்டமைப்பு
சுதந்திரத்திற்கு முன் பாராளுமன்ற கட்டடம் கட்டப்பட்டபோது, பாதாள சாக்கடை, குளிரூட்டும் வசதி, தீ பாதுகாப்பு, சிசிடிவி, ஆடியோ வீடியோ ஆகியவை கவனத்தில் எடுக்கப்படவில்லை என அரசு கூறுகிறது.
தற்போது மாறிவரும் காலத்திற்கு ஏற்ப நாடாளுமன்ற வளாகத்தில் அவை சேர்க்கப்பட்டாலும், கட்டடத்தில் ஈரப்பதம் போன்ற பிரச்னைகளால் தீ விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு - சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்ட போது, நில அதிர்வு மண்டலம்-2இல் டெல்லி இருந்தது. ஆனால் தற்போது நான்காம் நிலையை டெல்லி எட்டியுள்ளது.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை கட்டியது யார்?
புதிய கட்டடத்தை கட்டும் ஒப்பந்தத்தை டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் பெற்றது. 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் ரூ. 861.90 கோடிக்கு இந்த ஒப்பந்தத்தை அவர்கள் ஏலம் எடுத்திருந்தனர்.
புதிய நாடாளுமன்ற கட்டடம் மத்திய விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த திட்டத்தின் வரைபடத்தை குஜராத்தை சேர்ந்த கட்டடக்கலை நிறுவனமான ஹெச்.சி.பி. டிசைன்ஸ் உருவாக்கியது.
இதற்காக கடந்த ஆண்டு செப்டம்பரில் சிபிடபிள்யூடி மூலம் டெண்டர் கோரப்பட்டது. இதற்கான செலவினம் ரூ.229.75 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், ஹெச்.சி.பி. டிசைன்ஸ் இந்த ஏலத்தை வென்றது.
இதற்கு முன் குஜராத்தின் காந்திநகரில் உள்ள மாநில செயலகம், அகமதாபாத் சபர்மதி நதி முகப்பு மேம்பாடு, மும்பை துறைமுக வளாகம், வாரணாசியில் மந்திர் வளாக மறுவடிவமைப்பு, ஐஐஎம் அகமதாபாத்தின் புதிய வளாக மேம்பாடு போன்ற திட்டங்களில் ஹெச்.சி.பி. டிசைன்ஸ் பணியாற்றியுள்ளது.
பழைய நாடாளுமன்றம் என்னவாகும்?
பழைய நாடாளுமன்றக் கட்டடம் பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர்களான சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் 'கவுன்சில் ஹவுஸ்' என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டது. இதை உருவாக்க ஆறு ஆண்டுகள் (1921-1927) ஆனது. அக்காலத்தில் ஆங்கிலேய அரசின் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் இந்தக் கட்டடத்தில் செயல்பட்டுவந்தது.
பழைய நாடாளுமன்றக் கட்டடம் 83 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட நிலையில், புதிய கட்டிடம் சுமார் 862 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் பெற்ற போது கவுன்சில் ஹவுஸ் நாடாளுமன்ற கட்டடமாக மாற்றப்பட்டது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, பழைய நாடாளுமன்றக் கட்டிடம் நாடாளுமன்ற நிகழ்வுகளுக்கு தொடர்ந்து பயன்படுத்தப்படும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்