You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகாராஷ்டிரா: காட்டிற்குள் பல நாட்கள் சங்கிலியால் மரத்தில் கட்டப்பட்டிருந்த பெண் மீட்பு - தமிழ்நாட்டை சேர்ந்தவரா?
- எழுதியவர், முஷ்டாக் கான்
- பதவி, பிபிசி மராத்தி
மகாராஷ்டிராவில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள சாவந்த்வாடி தாலுகாவில் இருக்கும் கரடி மலை வனப்பகுதியில் அமெரிக்க வம்சாவளி பெண் ஒருவர் இரும்புச் சங்கிலியால் கட்டிப் போடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
அந்த பெண்ணின் கணவரே அவரை கட்டி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை பாதிக்கப்பட்ட அந்த பெண், ஒரு பேப்பரில் எழுதி காட்டியதாகக் கூறப்படுகிறது.
அந்தப் பெண் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தாலும், பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்துள்ளார். அவரது ஆதார் அட்டையில் தமிழ்நாடு முகவரி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த பெண் சில நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் காட்டில் கட்டி வைக்கப்பட்டிருப்பதாக பேப்பரில் எழுதி காண்பித்துள்ளார். அந்த பெண் எவ்வளவு காலம் இந்த நிலையில் இருந்தார் என்னும் தகவல் வெளியாகவில்லை.
மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அது முடியும் வரை உறுதியான தகவல் எதுவும் தெரிவிக்க முடியாது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை கரடி மலை வனப் பகுதி வழியாகச் சென்ற விவசாயிகள் மற்றும் மாடு மேய்ப்பவர்கள் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு சென்று பார்த்தபோது, பெண் ஒருவர் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர்.
அதன் பிறகு, அந்தப் பெண் மீட்கப்பட்டு சாவந்த்வாடியில் உள்ள உபாசிலா மருத்துவமனையில் முதன்மை சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளித்த சமயத்தில், உணவு, தண்ணீர் இல்லாமல் இருந்ததால் அப்பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கால்நடை மேய்ப்பவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கேட்ட குரல்
சிந்துதுர்க் மாவட்டத்தின் சாவந்த்வாடியில் உள்ள ரோனபால் சோனுர்லி (Ronapal Sonurli) கிராமத்தின் மையத்தில் கரடி மலை உள்ளது. இந்த மலைப்பாங்கான வனப் பகுதியில் மாடு மேய்ப்பவர்கள் மற்றும் விவசாயிகள் சிலர் சனிக்கிழமை காலை கால்நடைகளை மேய்க்கச் சென்றுள்ளனர்.
அப்போது ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் வந்த திசையில் அனைவரும் தேடி சென்றனர். அப்போது, காட்டுக்குள் சிறிது தூரத்தில் ஒரு பெண்ணின் கால்கள் மரத்தடியில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டனர்.
அந்த பெண்ணின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அவரை பார்த்த விவசாயிகள் அச்சமடைந்தனர். உடனே அருகில் உள்ள கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் அந்த பெண்ணை சுற்றி பரிசோதித்து, அவரின் காலில் பிணைத்திருந்த சங்கிலியை உடைத்து அவரை விடுவித்து, சிகிச்சை அளிக்க அழைத்துச் சென்றனர்.
மீட்கப்பட்ட சமயத்தில் அந்த பெண்ணால் சரியாக பேச முடியவில்லை. போலீசார் அந்த பெண்ணை அங்கிருந்து சவந்த்வாடியில் உள்ள அப்ஜிலா மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இன்று காலை (ஜூலை 28) அவர் மேல் சிகிச்சைக்காக ஓரோஸில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும் போது பெண்ணின் உடலில் அதிக காயங்கள் இல்லை. ஆனால், பல நாட்களாக எதையும் சாப்பிடாமலும், குடிக்காமலும் இருந்ததால் அவர் மிகவும் பலவீனமாகிவிட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது.
பெண்ணை சங்கிலியால் கட்டியது கணவரா?
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு சில முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து, அந்த பெண்ணிடம் விசாரணை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அந்த பெண்ணால் சரியாக பேச முடியாததால் அதிகாரிகளிடம் எழுதி காண்பிக்க, பேனா மற்றும் பேப்பரை கேட்டு தனக்கு நேர்ந்ததை எழுதினார்.
தன்னை சங்கிலியால் கட்டிப்போட்டது தன் கணவர் தான் என்று அவர் எழுத்துப்பூர்வமாக கூறியுள்ளார். ஆனால் அவர் எதற்காக இதை செய்தார் என்பது பற்றி எந்த தகவலும் இன்னும் தெளிவாக வெளிப்படுத்தப்படவில்லை.
பேச முடியாததால் எழுதிக் காட்டினார்
மீட்கப்பட்ட அந்த பெண் பேசும் நிலையில் இல்லாததால், என்ன நடந்தது என்று இப்போதைக்கு உறுதியாகக் கூற முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த பெண் ஒரு காகிதத்தில் எழுதி தனக்கு நடந்ததை ஓரளவுக்கு கூறியுள்ளார்.
அதன்படி, அவருக்கு ஒருவித ஊசி போடப்பட்டுள்ளது. இதனால் தாடை பகுதியை அவரால் அசைக்க முடியவில்லை. அவரால் தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை.
40 நாட்களாக வனப்பகுதியில் உணவு, தண்ணீர் இல்லாமல் இந்த நிலையில் இருந்ததாக பேப்பரில் இந்த பெண் ஒரு கோரிக்கையை எழுதி வைத்துள்ளார். ஆனால் அவர் எப்படி இவ்வளவு நேரம் உணவும் தண்ணீரும் இல்லாமல் இருந்தார்? போன்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
அவர் இறுதியாக எழுதி காண்பித்தது, "என் கணவர் என்னை மரத்தில் கட்டிவைத்து விட்டு என் வாழ்க்கை இங்கே முடிந்துவிடும் என்று ஓடிவிட்டார். நான் பாதிக்கப்பட்ட பெண். தற்போது உயிர் பிழைத்திருக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
உறுதியான தகவலுக்குப் பிறகுதான் போலீசார் பேசுவார்கள்.
இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், தீவிர விசாரணைக்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த பெண் மீட்கப்பட்ட சமயத்தில் மனநிலை சரியில்லாத நிலையில் இருப்பது போன்று தெரிந்தது. ஆனால் இதுகுறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது என காவல்துறை கண்காணிப்பாளர் சவுரப் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இந்த பெண் இதற்கு முன்பு டெல்லி, மும்பை, கோவா போன்ற இடங்களில் மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெற்றுள்ளார். அதற்கான ஆவணங்கள் அந்த பெண்ணிடம் இருந்துள்ளது.
தனது கணவர் தமிழ்நாட்டில் இருப்பதாக அந்த பெண் கூறியுள்ளார். அவர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக ஒரு குழுவையும் தமிழ்நாட்டிற்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது அந்த பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது. ஆனால் அவருடைய வார்த்தைகளில் முரண்பாடு இருக்கிறது. எனவே, போலீசார் அனுப்பியுள்ள குழுக்களின் விசாரணையில் உறுதியான விஷயம் தெரியவந்த பின்னரே தகவல்களை வழங்க முடியும் எனவும் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)